தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27 அன்று காலை 8.30 மணிக்கு இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுக்கல்லுக்கான வணக்கம் மாவீரர் குடும்ப உறவுகள், செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்றது.
தொடர்ந்து மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு மாண்புடன் நடைபெற்றது. அதனையடுத்து 13.00 மணிக்கு மாவீரர் நாள் 2022 இற்கான நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பெற்றுவரும் புனித மண்ணையும் ஏனைய மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும் மாவீரர்களின் பிள்ளைகள் அரங்கிற்கு ஏந்திவருதலுடன் உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பெற்றன.
8000 இற்கு மேற்பட்ட மக்களுடன் எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்களை வெளிக்காட்டும் வகையிலான இளையோர்களின் கலைநிகழ்வுகளும் மாவீரர் நினைவாக நடாத்தப்பெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வோறும் மண்டபத்தைத் தந்து, எங்களது தேசப்புதல்வர்களை வண்குவதற்கு உறுதுணையாக இருந்த மண்டப நிர்வாகத்தினருக்கான மதிப்பளிப்பும் சிறப்பாக நடைபெற்றது.
அரங்கின் இருபுறமும் 950 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, கரும்புலி மாவீரர் கோபுரங்கள் நிமிர்ந்து நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

























































எத்தடைவரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத் தாய்நாட்டை மீட்போம் என்ற உறுதியுடன் 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வு நிறைவெய்தியது.