பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு , பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவணக்கத்தோடு ஆரம்பமானது. தமிழ்மொழி, பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார் .

ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் குறித்த நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு, சிங்கள மொழியில் முழக்கமிடும் தமிழின உணர்வாளர் கிருபை நடராசா அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த ஆண்டு சாவடைந்திருந்தார். அவர் இன்று எம்மோடு இல்லை எனப் பலரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியில் இளையோர்கள் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு கலந்துகொண்டதுடன் சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலை குறித்த பதாதைகளையும் ஏந்தியவாறு நின்றிருந்தனர்.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )