1987.10.05 அன்றையபொழுது அவ்வளவு துன்பத்தை வாரி இறைக்கப்போகிறது என்று தழிழ்மக்கள் நினைத்தார்களா.இப்போ தான் 9 நாட்களின்முன் ஒரு உன்னதமகன் உருகிஉருகி உயிர்க்கொடைதந்த ஆறாக்காயம் உள்மனதை எரித்துக்கொண்டிருக்க ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற்போல்’ இடியாய் இறங்கியது அந்தச்செய்தி..அதுதான் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் வீரச்சாவுச்செய்தி..இவர்களும் இலங்கை இந்தியச்சதியால் நாம்இழந்த கிடைத்தற்கரிய சொத்துகள்,சொந்தங்கள்..தமிழீழமே அடுத்தடுத்த பேரிழப்பில் மூழ்கித்தவித்துக்கிடக்கிறது….
அங்கோர் ஊரில் அந்தச்சிறுமியின் அழுகை ஓய்ந்தபாடில்லை..பள்ளிக்கூடம் செல்லமாட்டேன் என அடம்பிடித்தபடி விம்மி வெடிக்கிறது அவள் வார்த்தைகள்.”புலேந்திரிமாமா ஏன்போனவர்? அவருக்கு என்ன நடந்தது?வாறன் எண்டு எனக்குச்சொல்லுப்போட்டுப்போனவர்.ஏன் இப்பிடி நடந்தது.அவர் இனி வரவேமாட்டாரோ..அவளின் துன்பம் நிறைந்த கேள்விகளுக்கு எப்படிப்பதில்சொல்வது எனத்தெரியாது உறைந்த துயர்மிகுந்த பார்வைகளை அவளின் பெற்றோர் பரிமாறிக்கொள்கிறார்கள்…அவர்களின் கண்கள் குளமாகியபோதும் கண்ணீர்வழிந்துவிடாதபடி மறைத்துக்கொண்டு மகளை ஆறுதற்படுத்த முனைகிறார்கள்..முடியவில்லை..அவள் முற்றத்து மாமரத்திலுள்ள ஊஞ்சலைப்பிடித்துக்கொண்டு விம்மிவிம்மி அழுகிறாள்.அவளைப்பொறுத்தவரை புலேந்திரிமாமா(லெப்ரினன்ட் கேணல் புலேந்திரன்) அவளின் குடும்பத்தில் ஒருவர்.அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகும் புலிமாமாக்களில் அவரும் இவளின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.அவர் வரும்போதெல்லாம் இந்த ஊஞ்சலில் இருந்து ஆடிக்கொண்டு கால்களால் அவளைத்தூக்கி எடுத்து அவளோடு விளையாடுவார்.அவளுடனும் அயலில் உள்ள சிறுவர்களுடனும் ‘சில்லுக்கோடு விளையாடுவார்.ஓடிப்பிடித்துவிளையாடுவார்.சிலநேரம் பசீலன் மாமா விளையாட்டுக்கு பிழைபிழையாக விளையாடிவிட்டு சரி என்று வாதிடும்போது சிறுவர்கள்பக்கமாக நின்று நீதியாகப்பதில்தருவதும் புலேந்திரிமாமாதான்.அவருக்கு பிள்ளைகள் என்றால் போதும் அவ்வளவு அன்புகாட்டுவார்…
அந்தநினைவுகளை அந்தச்சிறுமியால் எப்படித்தான் மறக்கமுடியும்..
அவளது வீடு புலிப்படைப்போராளிகளின் ஓர் சிறிய முகாம்போலவே எப்போதும்காணப்படும். ஏதோ ஒரு வேலையுடன் போராளிகள் வருவதும் போவதும் உண்பதும் உரையாடுவதும் என அவளின் நினைவு தெரிந்தநாட்களிலிருந்து இதுவே வழமை.தனது சித்தப்பா வீரவேங்கை ரவி 1985ஆம் ஆண்டு கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்டுவிட்டார் என்பதுவும் அவளது பிஞ்சு மனதில் வடுவாய்ப்பதிந்திருந்தது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் கருக்கொண்ட அந்நாள்தொட்டு நாட்டுப்பற்றோடுகூடியவாழ்வையே நடாத்திக்கொண்டிருக்கிறார்கள் வாத்தியாரும் அவரதுகுடும்பமும். அவர்களின்வீடு காட்டுக்கும் நாட்டுக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடமாகவே இருந்தது.
லெப்.கேணல் புலேந்தி அம்மானினதும் தோழர்களினதும் இழப்பு அவர்களை உலுப்பிவிட்டது.எனின் சிறுமியின் மனம் எவ்வாறு கலங்கியிருக்கும்…
அழுதழுது துவண்டுபோன அவளைத்தேற்றி ஒருவழிக்குக்கொண்டுவர சிலநாட்களாயிற்று.அச்சம்பவத்தின்பின் பள்ளி செல்லும்போது ஒரு சிறிய தமிழீழப்படத்தை மட்டையில் வெட்டி தனது பள்ளிச்சீருடையின் கழுத்துப்பட்டியில் குத்திக்கொண்டே பள்ளிக்கூடம் சென்றுவந்தாள். புலேந்திரி மாமாவின் இழப்பை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாதபோது அதன்பின் 1989.10.05 அதேநாளில் அவரின் நினைவோடு, மாங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப்படைகளினதும் ஒட்டுக்குழுக்களினதும் முகாம்மீதான
தாக்குதலை வழிநடத்தி அதே சமரில் வீரச்சாவடைந்த அவளது மாமா கப்டன் ஆனந்தனின் இழப்பை எப்படி அவள் தாங்கியிருப்பாள்?…
வாத்தியார் வீட்டு முற்றத்தில் பல ஆண்டுகளாக அந்த ஊஞ்சல் அப்படியே இருந்தது புலேந்திரி மாமாவின் நினைவாகவே..
ஆனால் ஒருசில ஆண்டுகளின் பின் அந்தச்சிறுமி அங்கே இல்லை..
அவள் எண்ணத்தின் ஆழத்தில் தனது உறவுகளின் தாகங்கள்..
மாமாக்கள்,சித்தப்பாக்கள்,அக்காக்கள், அண்ணாக்கள் சித்தியாக்கள்,தோழிகள்,தோழர்கள் ..எத்தனை பேரின் கனவுகள் அவளின் கடமையாக அவளை உந்தித்தள்ள
அவள் போய்விட்டாள் …
கனவுகள் இன்னும் கனவுகளாகவே…
புலேந்திரிமாமாவின் நினைவுகளோடு 38 ஆண்டுகள் நிறைகிறதே….
கண்ணீர் மரத்துப்போனாலும்
கடமை மறந்துபோகுமா?…..கனவுதான் மறைந்து போகுமா?…
அரியாத்தை
05.10.2025



