சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன.
உரைகளை தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் துணைப் பொறுப்பாளர் திரு.அமுதன், தமிழ் இளையோர் அமைப்பு – பிரான்சு பொறுப்பாளர் செல்வி பாக்கியநாதன் அச்சுதாயினி மற்றும்ஜ தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு – பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை பிரான்சில் இருந்து ஜெனிவா பேரணிக்கு தொடருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் அதில் முடிந்தவரை அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் நோக்கம் பற்றியும் அங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
பிரான்சில் கடும் குளிரான காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு – ஊடகப்பிரிவு)









