தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.
07.01.2000
தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றி வந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.
திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பி வந்தார். சிங்களத்தின் தலைநகரில் தனித்து நின்று சிங்கள பேரினவாதத்திற்கு சவால் விடுத்து வந்தார். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர்.
திரு.பொன்னம்பலம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும், எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்து வந்தார். நேர்மைத் திறமையுடன், அற்புதமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றி அரும்பணி மிகவும் பாராட்டத்தக்கது.
திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்,
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.