கடலளந்த காவியப்புலிகரும்புலி லெப்ரினன்ட் கேணல் நளாயினி

0 0
Read Time:7 Minute, 31 Second

நிமிர்ந்த நடைகொண்டாய்
நெஞ்கத்தே அஞ்சாமைத்
திமிர்கொண்டாய்
அண்ணனின் ஆணையே மறையென்றாங்கே
திண்ணமாய் செயற்றிறன் செப்பினாய்
பயிற்சியை நான்காம் அணியில் வியக்கும் வகையில் முடித்ததுகூட பெரிதல்ல.இந்தப்பாசறை அடைந்திட நீ பட்டபாடு பெருங்கதையே……


மண்மீட்கப் பெண்கள் எழுந்தனர் எனும்சேதி
விண்ணேகி வல்வைமண்தந்த உன்னை
சிலிர்த்தெழ வைத்ததோ! வரிப்புலித்தலைவனின் வல்லமை விழிப்புறச்செய்ததோ!
புறப்பட்டு நீ செம்மலைக்கு வந்து காத்திருந்தாய்
மணலாற்றுக்காட்டில் மறப்புலிப்பாசறை சேர..
முடியவில்லை
மாதங்கள்பல அங்கேயே
பள்ளிக்குப்போவதாய் வெள்ளைச்சீருடையுடன் வலம்வந்தாய்.
பெற்றோர் வந்து அழைத்தபோதும் செல்லாது
செம்மலைச்சிற்றூரில் வாத்தியார் மாமாவீட்டில் தங்கிவிட்டாய்.அயலில் உள்ள அடர்ந்தகாட்டை எப்படியும் அடைந்துவிடவே மறைமுகமாய்ப்பெருமுயற்சி.
தோல்வியில் முடிந்தது அந்தமுயற்சி.
தொங்கியமுகத்தோடு ,அழுகின்ற மனதோடு,ஆற்றாமைத்துயரோடு வல்வைதிரும்பினாய்…

மனதுக்குள் உறுதிகொண்டாய்
மறுமுறை நீ
புலிப்படகொன்றிலேறி புயலாகமாறி வல்வைக்கடலூடே செம்மலைக்கரை வந்து
யாரும்அறியமுன்னே காடடைந்தசேதி எமது காதடைந்தபோது இம்முறைவென்றுவிட்டது உனது விடுதலைவேட்கை..
அப்போதெல்லாம் உன்னைப்பார்ப்பவர்
“ஆண்பிள்ளை”என்று விழித்துச்சிரித்தனர்.
அது பெண்ணடிமைத்தனத்தின்
வழிவழிவந்த அறியாமை என்பதை அழகாய்ப்புரிந்திருந்தாய்.
புன்னகை ஒன்றில் “நான் பெண்புலி”என்று மௌனமாய்
பதில்சொன்னாய் .

கடும்பயிற்சிகள் உன்னைத்தாக்கவில்லை
நீதான் கடுமைக்குக் கடுமையால் அடிகொடுக்கத்துணிந்தவளன்றோ!

தேசியத்தலைவரின் நேரியகண்காணிப்பில்
பாசறைப்பயிற்சிகள் பரிமளிக்க உன்
வீரியத்திறன்கள் விழித்தெழுந்தனவோ…

அன்பாளும் நெஞ்சகத்தாள்-மக்கள் நெஞ்சாளும் திறம்படைத்தாள்
அரசியல் ஆளுமையால்
அண்ணன் எண்ணத்தை
செயலால் வரித்தாய்.
கலகலப்பான கச்சிதக்காரி
சுறுசுறுப்பான
எறும்பின் தோழி
கற்றதை ஒளித்துவைத்து சுற்றத்தில் எளிமைகொண்டாய்,இனிமைப்பேச்சினளானாய், கடலின்ஆழம்போல உன் காத்திரம் பெரிதடி அக்கா
பூவரசங்குளத்தில் பகையைப்போக்கடித்த சமரில் வயிற்றில் விழுப்புண்கண்டாய்.அதனை நீ பொருட்படுத்தியதே இல்லை

பெண்கடற்புலியணியை உருவாக்க
அண்ணன் தீட்டிய வரைபு
திண்ணமாய்த்தொடங்கியபோது
வண்ணங்கொடுத்து அப்பணியை கண்ணுக்குள் வளர்த்தாய்
கடல்தொடக்கூடாது என சமூகம் கட்டிவைத்த பெண்களைப்
படகேறிப்பகைவிரட்ட வைத்த
முதற்பெண்கடற்புலித்தளபதி நீயக்கா
முப்பதுபேர்கொண்ட அணியை
எத்தனை தடைகள் தாண்டி வளர்த்தாய்.
அவர்களோடு
கடல்நீரில் கால்நனைத்து ,கடலோடு மீனாக நீச்சற் பயிற்சி பெற்று ,ஆண்புலிகளுக்குநிகராக அவர்களோடு போட்டியிட்டுநீந்தி ஆழிஅளந்த வல்லமை கண்டபோது
வையத்துப்பெண்களில் மேலான ஒருநிலையை வாய்க்கச்செய்தாய்.
கரையோர மணலில் அமர்ந்து அப்புமாரிடம் கடலைப்பற்றிக் கதைகதையாய்க்கேட்டறிந்து
கேட்டவற்றைப் பகுத்தறிந்து தோழியற்குப்புகட்டி
துன்பப்பொழுதுகளையும் துச்சமாக்கி கடலில் காவியங்களை நிச்சயமாக்கிய நீலப்புலியானாய்.
அங்கயற்கண்ணி அனலாய்ப்போகுமுன் அவர்களுக்கு வழிகாட்டியாக வெடித்திடத்துடித்தாய்நீ..
காலத்தின் நியதி நீவளர்த்த பிள்ளை அவளின்
பிரிவினில் துடிதுடித்துப்போனாய்
நீலக்கடல்மீதிலே பெண்மையின்
ஆளுமைத்திறனை
நிலம்வியக்கும் வகை செய்தாய்
வேகமும் சற்றேவியக்கும் உன் வேகம்கண்டு.

தவளைப்பாய்ச்சற்சமர்க்களம்
பூநகரிக்கடலிலே கடற்புலிப்பெண்கள் புகட்டியபாடம் எதிரி இன்றுவரைமறவான்.
பகைக்குகை பாய்ந்து விரட்டியடித்த களத்தில் மீண்டும் வயிற்றில் பெரும் காயம் சுமந்தாய்..
அட அப்போதாவது சற்றே ஒய்ந்தாயா இல்லை.
இடுப்புப்பட்டி தோளிற் தொங்க சீருடைதாங்கி பணிதொடர்ந்தாய்.
உந்துருளிஓட்டினாய்.
பிரிந்த தோழியர் தோழர்களின் நினைவுடன் கடலைக்காவல் செய்யப்புறப்பட்டாய்..
கற்பிட்டிக்கடலிலே எம்மைக்காவுகொள்ளவெனக்காத்திருந்த
“சாகரவர்த்தனா”கப்பலை இலக்குவைத்து கடற்புலிகள் போட்ட தாக்குதற்திட்டத்தைத்தலைமையேற்று கடற்புயலாய்ச்சுழன்றாய். எதிரியைக்கலங்கடித்து
கட்டளைகள் வழங்கியபடி கடல்சிவக்க பகை நடுங்க கப்பலை மூழ்கடித்த கடற்கரும்புலிகளுள் நீயும் ஒருத்தியானாய்.
உன்னோடு கூடவே இருந்த தோழி மங்கையும் ,வாமனும் லக்ஸ்மனும்
ஆழக்கடலில் கலந்திட
கப்பல் கப்டன் சரணடைந்தான்
சாவுக்கஞ்சி.
கடற்புலிமகளிர் சிறப்புத்தளதி நீ
கடலிலே உயிர்கொடுத்தாய் சாவைச்சாய்த்து.
அண்ணன் உந்தன் அபாரம் வியந்தான் ,இழப்பினில் கரைந்தாலும் இலட்சிய உறுதியை பெரிதுவத்தான்.

உன்னைப்பற்றிக்கூற எத்தனை உள.
உணர்வுகளால் உன்னை வணங்கி ஒரு சில வரிகள் தந்தேன்
திருகோணமலையிற்பிறந்து வல்வைமண்ணில் வளர்ந்த
வணக்கத்துக்குரிய மாவீரப்பெண்ணே
நளாயினி அக்கா..
முப்பது ஆண்டாயிற்று நீ முத்தானவித்தாகி..
எத்தனை ஆண்டானாலும்
உன் இலட்சியம் வென்றே தீரும்.

கலைமகள்
19.09.2024

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment