எத்தனை ரகசியங்களை அள்ளித்தின்றுவிட்டு இந்தப் பூமி அமைதியாய்க் கிடக்கிறது….
எத்தனை சம்பவங்களுக்குச்
சாட்சியமாய் இருந்துவிட்டு
இந்த வானம் மௌனமாய் இருக்கிறது…
ஆண்டவர் எத்தனைபேர்
ஆடியவர் எத்தனைபேர்?
அடிமை கொண்டோர் எத்தனைபேர்
அடிமையெனவே வாழ்ந்து, மடிந்தவர்தான் எத்தனைபேர்..?
பணம் படைத்தோர் எத்தனைபேர்,
பட்டங்கள் சூடிக்கொண்டோர் எத்தனைபேர்…?
குணமின்றிக் குதித்தவர் எத்தனைபேர்,
குறைவிலாது வாழ்ந்தவர் எத்தனைபேர்?
பசிக்கு மேலாய் உண்டுகளித்தோர், பட்டினியிற் கிடந்து மடிந்துபோனோர்,
பணமொன்றே எல்லாமென்று
அலைந்து திரிந்தோர்,
மனம்கொண்ட வாழ்வை மகிழ்ந்து
முடித்தோர்…. எத்தனைபேர் எத்தனைபேர்?
மண்ணை மதித்தவர் என்றும்,
மண்ணாசை கொண்டு
மதம்கொண்டோர் என்றும்
பெண்ணை மதித்தவர் என்றும்
பெண்ணைப் போகமாய்ச் சுகித்தவர்
என்றும் வாழ்ந்துமுடித்தோர் எத்தனைபேர்?
வாழத் துடிப்போர்தான் எத்தனைபேர்?
எல்லாமும் காண்பதற்கு வானம்
மௌனச் சாட்சியாய் இருக்க,
உறவு, பிரிவு, இன்பம், துன்பம், ஆசை, தேவை, இவைகொண்ட அத்தனை உணர்வுகளையும், பிறப்பு இறப்பு என்ற இருமுனை வாழ்விடைவெளிக்குள்
எல்லாமும் அள்ளித் தின்றுவிட்டும் இந்தப் பூமி எப்படி இப்படி அமைதியாய்க் கிடக்கிறது….?
–காந்தள்-