போராட்டத்தின் யதார்த்த நிலையை, புறநிலை உண்மைகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன் மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துலகைக் கட்டி வளர்ப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
இன்று உலகின் எழுபதிற்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழினம், மரபு வழியாக வாழ்ந்து வந்த தன் தாயகத்தையும் அதன் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் வாழிட நாடுகளிலே பிறந்து வளர்ந்து வருகின்ற அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேர்த்தியாகக் கடத்தவேண்டிய பெரும்பொறுப்போடு, பல்வேறு படைப்பாக்கங்களை ஆக்கி கையளித்து வருகின்றமை பாராட்டுதற்குரியது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளைச் சான்றுகள், ஆய்வுகள் ஊடாக நூல்களாக வெளியிட்டு வருகின்றமை இன்றைய காலத்தின் தேவைகருதிய மகத்துவமான பணியாகும். இதற்காக உழைக்கும் அனைவரையும் நாம் போற்றுகின்றோம்.
பெருமளவான நேரத்தையும் உழைப்பையும் பொருளையும் கொடுத்து உருவாக்கப்படும் படைப்பாக்கங்கள் மிகச் சரியானவையாக மக்களைச் சென்றடைய வேண்டும். இவ்வாறான படைப்பாக்கங்களை வெளியிடும் படைப்பாளர்கள் அனைவரும் தமிழீழத் தேசியச் சிந்தனையோடு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
இப்பெரும்பணியைச் செய்யும்போது விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தெளிவும் நிகழ்காலப் புரிதலும் இலட்சியத்தின் மீதான தூரநோக்கும் இருக்கவேண்டும். இளந்தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தலைமுறையினராகிய நாங்கள், இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். ஒவ்வொரு பதிவும் மிகநுணுக்கமாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே படைப்பாக்கம் பெற வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைத் தொடக்க காலம் முதல் பதிவு செய்யும்போது அதன் அனைத்துப் பரிணாம வளர்ச்சிகளும் கால அடிப்படையில் கூறப்படுதல் வேண்டும். தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தும்போது “தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்” என்று பயன்படுத்துதல் வேண்டும். தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களது வரலாறுகளையும் மக்களது அர்ப்பணிப்புகளையும் பங்களிப்புகளையும் சரியாகப் பதிவுசெய்தல் வேண்டும். வெளியிடப்படும் ஒவ்வொரு படைப்பாக்கமும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்திற்கு வலுச்சேர்ப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகத்தால் செப்ரெம்பர் 1993 இல் வெளியிடப்பெற்ற ‘எனது மக்களின் விடுதலைக்காக” என்ற நூலிலே தமிழீழத் தேசியத்தலைவருடைய செய்தித்தாள் பேட்டிகள், நேர்காணல்கள், உரைகள், அறிக்கைகள் உள்ளடங்கலான 66 தொகுப்புகள் இடம்பெற்றிருந்தன. சுவிஸ் நாட்டில் எதிர்வரும் 20.11.2022 அன்று திரு. பொன்ராசா அன்ரன் அவர்களால் “எனது மக்களின் விடுதலைக்காக” என்ற நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது. இது தொடர்பாகத் திரு. பொன்ராசா அன்ரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையுடன் தொடர்பு கொண்டபோது, அந்நூலினைப் பெற்றுப் படித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதில் இடம்பெற்றிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் 197 தொகுப்புகளும் எமது போராட்ட வரலாற்றுக்குக் கிடைத்த காத்திரமான ஆவணங்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவற்றைப் பேணிப்பாதுகாத்தவர்களைப் பாராட்டியிருந்ததோடு, அந்நூலில் பல குறைபாடுகள் இருப்பதனையும் அவருக்குச் சுட்டிக்காட்டியிருந்தோம். அத்தோடு, அந்நூலினை வெளியிடும் உரிமத்தை உங்களுக்கு வழங்கியவர்கள் யார்? என்பதையும் அவரிடம் வினவியிருந்தோம்.
இந்நூலில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைக் குறிப்பிடுவதை வேண்டுமென்றே திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகத் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்குக் கீழ்க்கூட அவ்வாறு இடம்பெறவில்லை. பதிப்புரைப் பகுதியிலும் ஷவேலுப்பிள்ளை பிரபாகரன் – வரலாற்றுக் குறிப்பு| என்ற பகுதியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பெயர் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஒருமையில் பிரபாகரன்| என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அத்தோடு, தியாக தீபம் திலீபன் அவர்களது உண்ணாநோன்பிருந்த மாதம் ஒக்ரோபர் என்று இரண்டு தடவைகள் திரிபுபடுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்நூலில் கே.பி. தொடர்பான நியமனக்கடிதம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நிர்வாகத் தேவைகளுக்காக உள்ளகமாகப் பயன்படுத்தும் நியமனக் கடிதங்கள் நூற்றுக்கணக்கானவை இருக்கும்போது, இக்கடிதம் மட்டும் இந்நூலில் வெளியிடப்பெற்றதன் நோக்கம் என்ன? பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கே.பி. உடன் தொடர்பிலிருக்கும் மனோ என்பவர் மேடையில் அமர்ந்திருந்ததோடு உரையாற்றி, விசேட பிரதியைப் பெற்றதற்குமான பின்னணி என்ன?
மேலும், முக்கியமான ஆவணங்களை நூல் வடிவில் வெளிக்கொண்டு வரும்போது, அவ் ஆவணங்களுள் மிக முக்கியமான மூலப்பிரதிகளையாவது நூலில் இடம்பெறச் செய்வதுதான் வரலாற்று ரீதியான நம்பகத்தன்மையை உருவாக்கும். ஆனால், இந்நூலில் அவை ஒன்றும் இடம்பெறவில்லை. இத்தனை வரலாற்றுப் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும் அதனைக் கருத்திற்கொள்ளாது, தனிநபர் ஒருவர் தான் வைத்திருக்கும் அமைப்பின்(CJPD) ஊடாக இந்நூலினைச் சுவிஸ் நாட்டிலும் வெளியிடவுள்ளார் என்பதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்நூலுக்கான எந்த ஆதரவினையும் வழங்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினராகிய நாம், இந்நூலைச் செப்பனிட்டு உயரிய வரலாற்று ஆவணமாக வெளிக்கொண்டு வருவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய காலத்தில் உள்ளகக் கட்டமைப்புகள் ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட அறிக்கைகள், கடிதங்கள் மற்றும் மாவீரர் சார்ந்த ஆவணங்கள், ஒளிப்படங்கள் போன்ற பல ஆவணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீண்ட காலத்தேவைகளுக்காகப் புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அத்தகைய ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அந்தந்த நாட்டுக் கிளைகளிடம் கையளித்து அவற்றைப் பேணிப்பாதுகாப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த படைப்பாளர்களே!, மக்களே!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மேதகு1 ஆவணத்திரைப்படம் வெளிவந்தபோது அதிலிருந்த பிழைகளை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அவை திருத்தப்பட்டு மேதகு 2 வெளியிடப்படும் என்று எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால், மேதகு 2 வெளிவந்தபோது அதே பிழைகள் விடப்பட்டிருந்ததோடு, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக முக்கிய படையணியாகத் தோற்றம்பெற்ற கரும்புலிகள் மற்றும் பெண் போராளிகளின் வரலாறுகள் பற்றி அதில் கூறப்படவில்லை. இவ்வாறான இன்னும் பல வரலாற்றுப் பிழைகளும் இடம்பெற்றிருந்தன என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
அண்மையில் சுவிஸ் நாட்டில் வெளியிடப்பெற்ற நினைவழியா நாட்கள் என்ற நூலின் இறுதிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையிலிருந்து தான் விலகியதற்கான காரணமும் காலமும் உண்மைக்குப் புறம்பான வகையிலே அந்நூலின் எழுத்தாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்டி நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறு, தமிழீழத் தேசியத் தலைவர், மாவீரர்களின் அர்ப்பணிப்புகள் போன்ற கருப்பொருள்களுடன் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் வெளிவருவதை நாம் வரவேற்கிறோம். இத்தகைய பாடல்களை வெளியிடுவோர் முன்புபோல் பாடல் வரிகளை அத்துறை சார்ந்து தகைமை பெற்றவர்களிடம் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின், ஒலிப்பதிவு செய்து வெளியிடுமாறு வேண்டுகிறோம்.
படைப்பாக்க வெளியீட்டு நிகழ்வுகளை நடாத்துவதற்குரிய நாளைத் தெரிவுசெய்யும்போது, அந்நாளில் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் மாவீரர் சார்ந்த நிகழ்வு இடம்பெறுகிறதா என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பார்வை வீச்சுடைய பல்லாயிரம் நிழற்படங்கள் இருக்கும்போது, அவரை ஓவியமாகவோ நவீன தொழில் நுட்பங்களின் மூலமாகவோ வரைந்து வெளியீடுகளில் பயன்படுத்துவதை முற்றாக நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இளையவர்களுக்காக நடாத்தப்படும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் தமிழர் பண்பாட்டையும் வாழ்வியலையும் சீரழித்து எமது இளந்தலைமுறையை மடைமாற்றும் மது, போதைப்பொருள்கள், புகைத்தல் போன்றவற்றை அனுமதிக்காது அந்நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம்.
தமிழீழ விடுதலை என்ற பெருநெருப்பைக் காலவோட்டத்தில் தணித்துக் காணாமற் செய்துவிடலாம் என்று கங்கணம் கட்டிநிற்கும் சிங்களப் பேரினவாத அரசையும் அதற்குத் துணைநிற்கும் சக்திகளையும் திருப்திப்படுத்துகின்ற வேலையைச் செய்து வெளியிடப்படும் படைப்பாக்கங்களை இனங்கண்டு புறக்கணிக்கும்படி தமிழீழ மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலையையும், அதனை இலக்காகக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும், அதனை கட்டியெழுப்பி வழிநடாத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஓரணியில் எழுச்சிகொண்டு போராட வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் விலக்கிவிட்டுத் தமிழீழப் போராட்ட வரலாற்றைப் பதிவுசெய்ய முடியாது என்ற உண்மையை அனைத்துப் படைப்பாளர்களும் மனத்தில் இருத்தி, படைப்புகளை ஆக்குதல் வேண்டும்.
வரலாறுகளைப் பதிவுசெய்யாது விடுவது எவ்வளவு தவறோ அதனைவிட பன்மடங்கு தவறானது உண்மைக்குப் புறம்பான, திரிபுபடுத்தப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளியிடுவதும் அவற்றை ஆதரிப்பதும் ஆகும். கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட, இனிவரும் காலங்களில் வெளியிடப்படவுள்ள இவ்வாறான வரலாற்றுத் தவறுகளுடனான படைப்பாக்கங்களைத் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து புறக்கணிக்க வேண்டும் என்பதில் உறுதியோடு செயற்படுவோம். மிகச் சரியான, முரண்பாடுகளற்ற தமிழீழத் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் படைப்பாக்கங்களுக்கும் படைப்பாளர்களுக்கும் அனைவரும் ஆதரவு கொடுத்து வளர்த்தெடுப்போம். தமிழீழப் போராட்ட வரலாற்றை யாரும் எப்போதும் தவறாகப் பதிவுசெய்ய விடாது தமிழர் வரலாற்றைப் பாதுகாப்போம். அவ்வாறு பதிவுசெய்வதும் பதிவுசெய்ய அனுமதிப்பதும் தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் வரலாற்றுத்தவறு என்பதையும் மனத்தில் இருத்துவோம்.
புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்