பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் நெறிப்படுத்தலில் ஆண்டு தோறும் தமிழ்ச்சோலைப்பள்ளிகள் இடையே நடாத்தப்பட்டு வரும் திருக்குறள் திறனறிதல் போட்டி பள்ளிமட்டத்தில் நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளி மாணவர்களுக்கு நேற்று 02.06.2022 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு தனியார் மண்டபம் ஒன்றில் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் அதிபாலர் பிரிவிலிருந்து அதிஉயர் பிரிவுகளுக்குமான போட்டிகள் நடைபெற்றிருந்தது.
மாணவர்கள் தாம் மனனம் செய்ததை தமது பிஞ்சு மழலை மொழியால் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பங்குகொண்ட நடுவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். தமது பிள்ளைகளின் திறன்களைக் காண வந்திருந்த பெற்றோர்கள், ஆர்வலர்கள் கரங்களைத்தட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும், பிரிவுகளில் 1ஆம் 2ஆம் 3ஆம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நடுவண் பிரிவு (அ) முழுமையான புள்ளிகளை செல்வி அகன்சிக்கா மகேந்திரன் அவர்கள் பெற்றிருந்ததோடு பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். இந்த மதிப்பளித்தலை தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி கோமதி, துணை நிர்வாகி கோணேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவிகளுடன் நியூலி சூர்மார்ன் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கணநாதன், செயலாளர் திரு. செல்வா அவர்களும் இப்போட்டியில் நடுவர்களாக கடமையாற்றியவர்களும், நிகழ்வுக்கு சிறப்பாக அழைக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் அவர்களும் வழங்கியிருந்தனர். அனைத்து குழந்தைகளிலும் மிகுந்த மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. இப்போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் திறன்கள் பற்றி நடுவர் உரையாற்றியிருந்தார். அத்துடன் திருக்குறளின் முக்கியத்துவம் எமது பிள்ளைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருந்தார். மேலும் பரப்புரை பொறுப்பாளர் ஆற்றிய உரையில் நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும் கடந்த காலங்களில் தமக்கெனவொரு முத்திரையை பதித்து வருவது பற்றியும் அதிகமான மாணவர்களை கொண்ட தமிழ்ச்சோலைகளில் ஒன்று என்றும். நாட்டில் ஏற்பட்ட பேரிடர் கோவிட் காரணமாக தமிழ்ச்சோலை குழந்தைகள் தமது தாய் மொழியை கற்பதற்கு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருப்பதையும், அதற்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை தாய் மொழியை கற்பிக்க வைப்பதையும் அனைத்து போட்டிகளிலும் பங்குகொள்ள வைக்க பெற்றோர் எடுத்து வரும் கரிசனைக்கும் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். தமிழ்ச்சோலை பள்ளி நடைபெறுவதற்கு எதிர்கொண்டிருக்கும் இடர்கள் எதிர்வரும் ஆண்டில் ஒரு நிலைப்பாட்டிற்கு வரும் என்பதுடன் அதற்கான ஒத்துழைப்பையும் பெற்றோர்களும், தாய்மண்ணிலும், தாய்மொழியிலும் ஆர்வலர்களும் இனப்பற்றுடன் பிள்ளைகளுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இடர்களை எதிர் கொண்டு தொடர்ந்து தூரநோக்கோடு பணியாற்றி வரும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தையும், நிர்வாகி ஆசிரியர்களையும் நன்றியோடு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக அனைவரின் கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாகவும் தெரிவித்ததுடன் எப்பொழுதும், எந்தநிலையிலும் பக்கபலமாக நாம் இருப்போம் என்ற நம்பிக்கையை தெரிவித்திருந்தார். பெற்றோர்கள் தமது குழந்தைகளை உற்சாகப்படுத்தியதும், தட்டிக்கொடுத்ததும் எல்லாக் குழந்தைகளுக்கும் பெரும் ஊக்க சக்தியாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 8.00 மணிக்கு போட்டி நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு.)






