சிறீலங்கா அரசாங்கத்தினால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்ட இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்று 38 ஆண்டுகள் இம்மாதத்துடன் நிறைவுறுகின்றது. அந்தப் படுகொலைக்கும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகெலைகளுக்கும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் நீதி கோரும் போராட்டம் இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும்இடம்பெற்றது.
யூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று 23-7-2021 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வவுனியா கல்முனை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மயூரசர்மா, செயலாளர் சு.தவபாலன், உபதலைவர்களில் ஒருவரான கஜேந்திரகுமார் சிவபாதம் மற்றும் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியின் பிரசார செயலாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ் மாவட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் தீபன் மகளீர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகரன், செயலாளர் திருமதி கிருபா கிரிதரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் ஜெ.ராஜீவ்காந்த் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை அம்பாறை மாவட்டம் கல்முனை நகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் துனாநந்தன் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
த.தே.மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷானந் இமற்றும் கட்சியின் உறுப்பினர்கள்இ பொதுமக்கள் பதைதைகளை தாங்கியவாறு பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இபடுகொலைகளுக்கு சர்வதேசம் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்ப்படல் வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

தமிழ்த் தேசமும் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
தமிழர்களது காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
அதற்கான கணக்காளர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும்.
அந்த அலுவலகம் காணி விவகாரங்களை கையாள்வதனை தடுக்கும் மறைமுக சதிச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் தாங்கியிருந்தார்கள்.
