1991ஆம் ஆண்டு நிகழ்த்தப்பெற்ற ஆனையிறவு இராணுவமுகாம் தாக்குதலே தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்.
“ஆகாயக்கடல்வெளிச்சமர்” எனப்பெயர் சூட்டப்பெற்று மூன்று முக்கிய நகர்வுகளோடு வேகம்பெற்றது.
ஒன்று: வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் ஊடாகச் சுற்றுலா விடுதியை நோக்கியதாகநடந்த சமர். இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையைத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.
முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் தாக்குதலை நடத்தினர் விடுதலைப்புலிகள். 13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரகவாகனம்மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தை ஏற்றி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது நகர்வு தென்மராட்சிப் பக்கமாக அமைந்திருந்தது.
தடைமுகாமைக் கைப்பற்றுவதே இந்நகர்வின் நோக்கமாயிருந்தது. தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையைத் தளபதி குணா அவர்கள் பொறுப்பேற்று நடாத்தினார்.
இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.

இவ்விரு நாட் சமர்களும் வெட்டைவெளிப்பிரதேசத்திலேயேயே நடைபெற்றன.11.07.1991 அன்றையநாள் உழவு இயந்திரங்களை இரும்புத் தகட்டால் மூடி அதன் பின்னாற் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .
இந்தத் தாக்குதல்களிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதலானது எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாக அணிகள் நகர்ந்து தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் ,மற்றொரு நடவடிக்கையாகக் கனரக வாகனத்திற்கு இரும்புத் தகடு அடித்து அதனைக் காப்பாகப் பயன்படுத்திப் போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் முடிவானது.ஆனால் எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரணுக்கு அண்மையாகச் செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை
செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாகச் சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.
இச் சமரின்போது இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்குப் பின்பக்கமாகத் தாக்குதல் நடாத்தித் தடைமுகாமைக் கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரைப் போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச்சமரில் இடம்பெற்றன.
மூன்றாவதுநகர்வு: வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுக் கடற்கரையூடானது. கடற்கரையில் கடற்படையின் தரையிறக்கம்நிகழலாமென எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் கடற்படையினர் தரையிறக்கத்தை மேற்கொண்டனர் .இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப்.கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.
இருந்தும் சண்டைதொடர்ந்தது. வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தின் அணியை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையிலான அணி திக்குமுக்காடச்செய்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொண்டது.இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பதே. ஆயினும் அத்திட்டம் நிறைவேறாதுபோகவே பல இராணுவத்தினர் கொல்லப்பட்டு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினருக்கெதிரான தாக்குதல்கள்த் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.கொம்படி வரை வந்த படையினர்கொம்படியிலிருந்து இயக்கச்சிச் சந்திக்கு வர முயற்சித்தபோது தளபதி லெப் .கேணல் ராஜன் அவர்கள் தலமையிலான அணி இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டதால் படையினர் அம் முயற்சியை
அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடரமுயல அங்கும் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தப்பெற்றது.
இச்சமர்பற்றி விளக்குவது இலகுவானவிடயமல்ல. ஏனெனில் இச்சமரில் போராளிகள் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநெஞ்மல்ல. கடற்கரை மணல், உப்பு வெட்டை, காப்புகள் ஏதுமற்ற நிலை, சுட்டெரிக்கும் வெயில், ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள்,

உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை, இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லாத மனவுறுதியுடன்கூடிய அா்ப்பணிப்பு மிக்க இச்சமரானது ஒரு பெருவேள்வி எனலாம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்குப் பல முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை உணர்த்திய சமர் இதுவென்றால் மிகையில்லை.

இச்சமரானது பல படையணிகள் தோன்ற ஏதுவானது . பல்துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமராகவும் இச்சமர் விளங்கியது. இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை உலகிற்கு உணர்த்திய இப்பெருஞ்சமரைப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும்
மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் செவ்வனே ஒருங்கிணைத்து வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு மாதமாதகாலமாக நடைபெற்ற

இவ்விராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
எழுத்துருவாக்கம்-சு.குணா