மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தேடி பொலீசார் வலைவீசி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து செய்திகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை விசாரணை செய்யும் நோக்குடன் ஊடகவியலாளர்களின் வீடுகளை தேடிச் சென்று பொலீசார் அழைப்பு கடிதங்களை வழங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளருமாகிய புண்ணியமூர்த்தி சசிகரனின் வீட்டிற்கு இன்று (15) மலை சென்ற பொலீசார் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் குற்ற விசாரணை பிரிவுக்கு எதிர்வரும் 17ம் திகதி வருமாறு அழைப்பு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் வாகனம் உட்பட செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குறித்த விபரங்களை அம்பாறை திருக்கோவில் பொலிசார் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் கடந்த 2 ம் திகதி வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
இதற்கு பின்னர் ஊடகவியலாளர் சசிகரனின் வீட்டிற்கு அடிக்கடி வரும் இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டாரை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு சென்றதுடன். அவரது கிராமத்தில் உள்ள வேறு சிலரிடமும் ஊடகவியலாளர் சசிகரனை பற்றி விசாரித்து சென்றுள்ளனர்.
இன் நிலையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு வருமாறு ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை என்பது மாவட்டத்தில் உள்ள ஏனைய ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை முடக்கும் நோக்குடன் மிகவும் திட்டமிட்டு பொலீசார் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்களா? என்ற கேள்வி எழுகிறது.
மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட மறைமுகமான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.
எனவே ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களை யும் பாதுகாப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுக வேண்டும் என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.