இன்று 08. 12. 20 செவ்வாய் சுவிற்சர்லாந்துஅரசு தற்போதைய மகுடநுண்ணுயிர்த் தொற்றுத் தடுப்பு நடைமுறைகள் தொடர்பில் சிறப்பு ஒன்றுகூடலை நடுவன் அமைச்சர்களுடன் நடாத்தியிருந்தது. இதன் முடிவுகளை அறிவிக்கசுவிற்சர்லாந்து அரசின் இரு நடுவன் அமைச்சர்கள்ஊடகங்கள் முன்தோன்றினர். இதில் ஒருவர் சுவிஸ் அதிபரான திருமதி சிமோனெற்ரா சொமறுக்கா இன்னொருவர் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆவர்.
சுவிஸ் அரசின் நடவடிக்கை
சுவிஸ் அதிபர் திருமதி சொமறுக்கா தெரிவிக்கையில் «நடுவனரசு கையேட்டை மீண்டும் வலிமையுடன் கையில் எடுக்க வேண்டியுள்ளது». தொற்றுப் பரவும் விகிதம் மிகுவேகமாக உள்ளது. ஆகவே சுவிஸ் அரசுதீர்வுப் பொதியினை மூன்று தீர்வுத் தூண்களாகத் தெரிவு செய்துள்ளது என்றார்.
முதலாவது சுவிற்சர்லாந்து அரசு உடன் நடவடிக்கைகளைமேற்கொள்ளும், இரண்டாவது அடுத்த கட்ட நடவடிக்கைளைத் திட்டமிடும், மூன்றாவது கொறோனாப் பாதிப்பால் பொருள்வலு இழக்கும் துறைகளுக்கு உரிய உதவிகளை வழங்குவதுஎன்றும் சுவிஸ் அதிபர் விளக்கினார்.
தற்போது உள்ள நடைமுறைகளைவிடவும் இறுக்கமான நடவடிக்கைகள் இனிமேல் நடைமுறைக்கு வரும். அதற்கு முன் மாநிலங்களுக்கு பல்வேறுதரப்பட்டநடவடிக்கை முறைகளை முன்வைக்கின்றோம், இது தொடர்பில் மாநிலங்கள்தம் கருத்தையும் முன்வைக்கலாம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்து நடவனரசு கீழ்க்காணும் நடவடிக்கைகளை முன்மொழிகின்றது:
சுவிற்சர்லாந்து நாடு முழுவதும் விருந்தோம்பல் நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள், பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் விளையாட்டு செயற்பாடுகள் 19.00 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
தனியார் ஒன்றுகூடல்களில் ஆகக்கூடியது 5வர் மட்டுமே ஒன்றுகூடலாம். 24. முதல் 26. மார்கழி மட்டும் இத் தடைக்கு விலக்களித்து, இல்ல விழாக்களில் ஆகக்கூடியது 10 உறுப்பினர்கள் பங்கெடுக்கலாம். இந் நடவடிக்கைகள் குறைந்தது 20. 01. 2021 வரை தொடரப்பட வேண்டும்.
முழுமையான முடக்கத் தவிர்ப்பு
சுவிற்சர்லாந்து முழுமையான முடக்கத்தை தவிர்க்க முழு முயற்சி எடுப்பதாகதெரிவித்த சுகாதார அமைச்சர் திரு. பெர்சே, கடந்த 3 கிழமைகளுக்கு முன்னர் போல மீண்டும் தொடக்கத்தில் தொற்றின் விகிதம் இருப்பது கவலை அளிப்பதாக பகர்ந்தார்.
நோய்த்தொற்றின் பரவல் இதே வேகத்தில் சென்றால்நாம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்த சூழலிற்கு சென்று விடுவோம். அப்படி நிலை வந்தால் மருத்துவமனைகள் தமது வளங்களைத் தாண்டிபெரும் பழுவினை தாங்க வேண்டி வரும் எனவும் எச்செரித்தார்.
முன்மொழியப்படும் இரவு 19.00 மணிமுதல் கடையடைப்பு என்பது தெளிவான சைகைக்குறியாக அமையும். மேலும் தனியார் ஒன்றுகூடல்கள் முடிந்தளவு கட்டுப்படுத்த இப்போது திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உதவும் எனவும் இவை உரிய பெறுபேற்றை அளிக்காவிடின் சுவிஸ் முழுவதும் ஒரே மாதிரியான இறுக்கமான நடவடிக்கை நடைமுறைக்கு வரும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளை இறுக்கவேண்டிய மாநிலங்கள் எவை?
ஊடகவியலாளர்ஒருவர் சுகாதார அமைச்சரை நோக்கி, தாங்கள் அடிக்கடி மாநிலங்கள் உரிய கட்டுப்பாடுகளை இறுக்கவேண்டும் என சொல்கின்றீர்கள், இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய மாநிலங்கள் எவை என வினாவினார். இதற்குப் பதில் அளித்த சுகாதார அமைச்சர், தொற்றுப் பரவல் விகிதத்தினை நோக்கினால் இது தெரியும் என்றார்.
இறப்பு விகிதம்
சுவிசில் கடந்த நாட்களில் இறப்பு விகிதம் கூடியிருப்பது தொடர்பில் வினாவப்பட்டபோது சுவிஸ் அதிபர் திருமதி சொமறுக்கா இவ்வாறு தெரிவித்தார்: நாம் இறப்பின் விகிதத்தினைகடுமையாகக் கருத்திற் கொள்கின்றோம். ஆகவே சில அடிப்படைநடவடிக்கைகள் தேவையாகின்றன. நடுவன் அரசு மாநில அரசுகளுடன் பேசி பெரும் துன்பியலை தவிர்க்க முயல்கின்றது என்றார். மேலும் திடீரென கடின முடக்கம் கொண்டுநாட்டு மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவதை சுவிஸ் அரசு தடுப்பதற்கு படிநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
பனிச்சறுக்கு திடல் திறந்திருக்கும்
உள்ளரங்க விளையாட்டுகளுக்கு தடை விதிக்கின்றபோதும் பொதுவெளியில் நடைபெறும்பனிச்சறுக்கு விளையாட்டுகளை தாம் தடுக்கவில்லை, எனவேபனிசறுக்கும் திடல்கள் திறந்திருக்கும். அங்கு மக்கள் உள்ளரங்கில் இல்லாமல் வெளியில் சறுக்குவதால் சமூக நெருக்கம் இருக்காது என்றார் சுகாதர அமைச்சர்.
பொதுவான நடவடிக்கை
சுவிற்சர்லாந்தின் நடுவனரசு மாநில அரசுகளுடன் பரவலாகப் பேசிப் பொதுவான இணக்க நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளது. முடிந்தளவு சுவிஸ் முழுவதும் செல்லுபடியாகும் பொது நடவடிக்கைகள் ஆயப்படும். அதேவேளை மாநிலங்கள் தற்போதைய சூழலிற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத்தவறின் நடுவனரசு ஆணையாகவும் நடவடிக்கையினை அறிவிக்கும் என்றார்.
19.00 மணிக்குள் கடைகள் பூட்டப்பட்டால் நெரிசல்கள் ஏற்படாதா?
இவ்வாறு நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த நாட்களில் கடைகளின் காப்பமைவு (பாதுகாப்பு செயல்முறை நெறி) விரிவாக ஆயப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டது. இதன்படி நெரிசல் தவிர்த்து உரிய உச்ச எல்லைக்கட்டுப்பாட்டுகளுடன் சுகாதார நடவடிக்கைகளைப் பேணி வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைய வழிசெய்யப்பட்டுள்ளது என்றார் சுவிஸ் அதிபர்.
நத்தார் வியாபாரத்தைபாதுகாக்கமுடக்கத்தைசுவிஸ்தவிர்க்கின்றதா?
சுகாதார அமைச்சர் இக்கூற்றை முழுமையாக மறுத்தார். நாம் வர்த்தகத்தை கவனத்தில்கொண்டு நடவடிக்கைகளை தீர்மானிப்பதில்லை. இவ்வாண்டின் வசந்த காலத்தில் இருந்த நிலையில் நாம் இல்லை. பலவாரங்களுக்கு வர்த்தகத்தை முடக்க வேண்டிய தேவை இப்போது இல்லை என்றார்.
வெள்ளிக்கிழமை 11. 12. 2020 சுவிஸ் அரசின் பொது அறிவிப்பு வரும், அது வரை காத்திருப்போம்!
தொகுப்பு: சிவமகிழி