மாபெரும் மனித நேயன்  கேப்டன் விஜயகாந்

0 0
Read Time:6 Minute, 6 Second

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒன்றாய் கலந்து உணர்வினால் பிணைப்புற்று காலம் தோறும் தோள்கொடுத்து தொப்பூள் கொடி உறவின் வலிமையை உணர்த்தியவர்களில் தன்னிகரற்ற  தமிழினப்பற்றாளன் ஒருவர்  இன்று எம்மிடையே இல்லை.

தென்னிந்தியாவின் மூத்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் நிறுவுனரும், மேனாள் தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந் அவர்களின் மறைவு தமிழ்  நெஞ்சங்களை உலுப்பியிருக்கின்றது.தமிழகத்தின் நடிகராக ஆரம்பத்தில் ஈழத்துக்கு அறிமுகமானபோதும் நாளடைவில் அவர் ஈழத்தமிழர்களின் மீதும் விடுதலைப்போராட்டத்தின் மீதும் அதன் தலைமையின் மீதும் கொண்ட பற்றும் பரிவும் உணர்வும் மெய்சிலிர்க்கவைத்தவை.அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தன் மகனுக்கு  தமிழீழ தேசியத்தலைவரின் பெயரை சூட்டி  வியக்கவைத்ததுடன் ஈழத்தின் இதயத்துக்கு நெருக்கமும் ஆனார்.அத்தோடு அவர் நிற்கவில்லை.ஈழத்தமிழருக்கு ஆக்கிரமிப்பு சிங்களப் பேரினவாதத்தால்  இன்னல்கள் நேர்ந்த போதெல்லாம் குரல் கொடுத்தார்.களத்திலிறங்கி ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அறவழிப்போராட்டங்களில் குதித்தார்.அதற்காக தன்னுடைய சக தென்னிந்திய நடிகர்களை சினிமாத்துறை சார்ந்தவர்களை இணைத்து ஈழத்துக்கு பல சந்தர்ப்பங்களில் தார்மீக பலம் சேர்த்தார்.

தமிழகத்தில் ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்கள் பண உதவி பொருளுதவி கேட்டபோதெல்லாம் ஒரு கணமும் பின் நிற்காது வாக்குறுதிகளை வழங்கி மறுகணமே நிறைவேற்றி ஈழப்போராளிகள் மத்தியில் தனக்கென  நன் மதிப்பை பெற்றவராக இருந்தார்.

ஈழ போராட்டதுக்கு நிதி சேகரிப்புக்காக மறைந்த இன மான இயக்குனர் மணிவண்ணன் கதை எழுதி இயக்க அந்த நாடகத்திலும் பாத்திரமேற்று நடித்து விஜயகாந் ஈழ போராட்டதுக்கு வலு சேர்த்ததை பெரியார் திடல் சொல்லும் 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பை விஜயகாந் அவர்கள் ஏற்றபின் தென்னிந்திய சினிமா துறைக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.தனது ஓயாத உழைப்பு முயற்சியினால் கடல் கடந்து திரை நட்சத்திரங்களை அழைத்துச்சென்று நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதியை பெற்று தென்னிந்திய சினிமா துறைசார் கடைக்கோடி பணியாளர்கள்வரை ஊதியமும் வாழ்வு ஆதாரம் பெறவும் பாடுபட்டதை அனைவரும் அறிவர் .அத்துடன் காவிரி நீர் பிரச்சனையில் தமிழக நியாயத்துக்காக திரைத்துறையை திரட்டி துணிந்து குரல் கொடுத்தார்.தன் திரைப்படங்களில் எவ்வாறு ஊழலுக்கு எதிராகவும் நேர்மையான புரட்சியாளனாகவும் காவல்துறையாகவும் பாசமுள்ள மகனாகவும் தாய்க்குலத்தின் நேசனாகவும் பாத்திரங்களில் தோன்றினாரோ அவ்வாறே தன் வாழ்விலும் நடந்து காட்டி இன்று நீள் துயில் கொள்கின்றார்.இன்றைக்கு கட்சிகள் கடந்து அனைவரும் விஜயகாந்தை போற்றுகின்றனர்.ஒரு நடிகனுக்காகவும் அவர் நடித்த திரைப்படங்களுக்காகவும் தமிழகத்திலும் கடல் கடந்தும் அவருக்கு பேரலையாக இறுதி வணக்கம் செலுத்த செலுத்தவில்லை.அதைக்கடந்து விஜயகாந்தின் மாபெரும் மனிதத்துக்காக  போற்றப்படுகின்றார்.குறிப்பாக பசியென்று யாரும் இருக்கக்கூடாது என்பதை தன் சுவாசமாக மூச்சாக கொண்ட  விஜயகாந் அவர்கள் உணவளித்த வள்ளலாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றார்.அத்தகைய ஒரு பெரு மனிதம் ஈழத்தமிழினத்துக்கு பக்கத்துணையாக இதுவரை இருந்ததை இட்டு நாமும் பெருமை அடைகின்றோம்.இத்தருணத்தில் அவருக்கு பெரு நன்றிகளை செலுத்துகின்றோம்.

இரக்கமுள்ள இதயம் கொண்ட நல்ல மனிதரான விஜயகாந் அவர்களின் பிரிவினால் பெரும் துயருற்றிருக்கும் அவரது துணைவியார் பிரேமலதா அம்மையார் மற்றும் பிள்ளைகள்  விஜயபிரபாகரன் சண்முக பாண்டியன் ஆகியோருக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் விஜயகாந் அவர்களை நேசிக்கும் பலகோடி தமிழக உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.புண்ணியம் பல செய்த பெருமகனின் புகழ் இம்மண்ணுள்ளவரை நிலைக்கும்.

நன்றி

அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரான்சு லோகநாதன் மருதையா. கஜன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment