இதயம் வலிக்கும் இந்தநாளில்………

0 0
Read Time:11 Minute, 50 Second

2009 மே 18 ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் நினைக்கும் தோறும் வலிக்கும் நாளாக மாறியிருக்கின்றது. தனித்துவமான ஓரினம் தன்னுடைய அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்காக எழுப்பிய குரலுக்காக, அந்த இனத்தையே இனவழிப்பு செய்த வலிமிகு நாளாக இந்நாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சினில் அறையப்பட்டிருக்கிறது.

உச்சங்கொண்ட போர் ஓய்ந்த பொழுது உயிரிழந்தவர்களும் சிதைவுற்றவர்களும் போக எஞ்சியோர் உயிர்மட்டும் சுமந்த கூடுகளாகி… போக்கிடமற்றுப் போய்க்கொண்டிருந்தனர்.
நாங்களும் பல நாட்களாக ஓரிடத்தில் ஒருசிலநாட்கள் கூடத் தரிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தோம், கால்கள் பின்னப்பின்ன பகல் இரவென்று பார்க்காத நடை. ஓய்வெடுக்க விடாமல் முப்படைகளும்தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தன.
கண்முன்னே காயப்பட்டுத் துடிக்கும் உயிர்கள்…. உறவுகளை இழந்து கதறித்துடிக்கும் உறவுகள்….. பசியால் அழும் குழந்தைகள்…..
“ பூவும் நடக்குது… பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்…. “ என்ற
புதுவை அண்ணையின் பாடல் வரிகள் போல, எல்லோருமே நடந்துகொண்டிருந்தார்கள்.
உடையார்கட்டு, இருட்டுமடு, சுதந்திரபுரம் வடக்கு, சுதந்திரபுரம் தெற்கு, இரட்டைவாய்க்கால், இரணைப்பாலை, வலைஞர்மடம், கரையா, வெள்ளா முள்ளிவாய்க்கால், உண்டியல் சந்தி, நந்திக்கடற்கரை, பனந்தோப்பு என்று எல்லா இடமும் ஓடியோடியும் எங்கேயும் சிலநாட்கள் கூடத் தங்கியிருக்கமுடியாத பாதுகாப்பற்ற அவலம்நிறைந்துகிடந்தது.
நந்திக்கடற்கரையில் 2009 இரவு நடந்த பெருந்தாக்குதல் அவலப்பட்டுக்கொண்டிருந்த மக்கள்மீது, எரிகுண்டுகளாக, தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்த வெடிகுண்டுத் தாக்குதலாக
மாறியது.
பல்குழல் பீரங்கிகளின் முழக்கம். படையினரிடம் இருந்த எல்லாவகையான போராயுதங்களும் தமிழ்மக்களைக் குறிவைத்து இயங்கின.
தீயின் அகோரத்தைக் கண்களாலும் பெருங்கதறல்களை செவிகளாலும் உணர்ந்தபடி நிலத்தில் தவழ்ந்தும் நிமிர்ந்து நடந்தும் எங்கள் உயிர்களைக் காக்க ஓடினோம்.
நிலம் முழுவதும் குருதியும் நிணமும் சிதறிய உடற்கூறுகளுமாக இறைந்துகிடந்தன. கால்களுக்கும் செருப்பு இல்லை. எறிகணைகள் கூவும்போது, கைவிடப்பட்ட பாதுகாப்பு குழிகளில் குதித்தோம். அதற்குள் மழைநீர் வயற்சேற்றுடன் சேர்ந்து களியாய் கிடந்தது. யாரும் கற்பனை செய்துபார்க்க இயலாத உணர்வுகள் இவை.
விடிந்தபோது வட்டுவாகல் படையினரின் முற்றுகைக்குள் நிற்கிறோம் என்பது புரிந்தது. சிறு பற்றைகளை ஊடுருவிக்கொண்டு படையினர் வெளிவந்து முற்றுகைக்கு தயாராகுகின்றனர்.
எல்லோர் மனங்களிலும் முகங்களிலும் சாவுக்குறிகள் அப்பிக்கிடந்தன. சிலர் நிலத்தில் படுத்துவிட்டனர்.
வெற்று உடற்கூடகளில் எஞ்சிய உயிரை இழுத்துப்பிடித்தவர்களாக பல இலட்சம் பேராக எல்லோரும் தரையில் அமர்ந்திருந்தோம்.
மக்களைச்சுற்றி அச்சமூட்டும் தோற்றங்களில் முகங்களை மறைத்துக்கொண்டு கூர்மையான புத்தம்புதுப் போர்க்கருவிகளுடன் இராணுவத்தினர்.
எல்லோரும் மந்தைக்கூட்டமாய் அவர்களுக்குத் தோன்றியிருக்கவேண்டும்.
நண்பகலுக்குப் பின்னராக வட்டுவாகல் பாலத்தினூடாக நகரும்படி பணித்தார்கள். காயப்பட்ட போராளிகள், சனங்கள், நோயாளிகள், குழந்தைப்பேறடைந்தவர்கள், முதுமையின் தள்ளாட்டம் கொண்டோர் என்று எல்லோருமே நடந்தோம்.
பாலத்தின் இருமருங்கிலும் படையினர் மரத்தடிகள், பொல்லுகள், துப்பாக்கிகளுடன் நின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக எம்மினத்திற்பிறந்து தம்மினத்தவர்களுக்கெதிராகவே சுட்டுவிரல் நீட்டும் சிலரும் நின்றிருந்தனர்.
வெற்றிக்களிப்பில் நின்ற படையினர் இளம் பெண்களைப் பழித்தும் இழித்தும் பேசினர்.
இரவாகிவிட்டது. எங்கும் மின்குமிழ்கள் ஒளிர்ந்தன. சுருள்சுருளாய் முட்கம்பிக் கோர்வைகள். சில இடங்களில் முட்கம்பிச் சுருளைத்தூக்கி சனங்களை உள்ளே வரும்படி படையினர் அழைத்தனர். உள்ளே போனவர்களை அடித்து இருத்தினார்கள்.
நாங்கள் தயங்கிய படியே நின்று கொண்டிருந்தோம். நள்ளிரவு கடந்தபோது படையினரின் நடமாட்டம் குறைந்திருந்தது. வாய்ப்பைப் பயன்படுத்தி யாரோ இளைஞர்கள் முட்கம்பிச் சுருளைத் தூக்கிப்பிடிக்க, நாங்களும் உள்ளே புகுந்து சென்றோம்.
எங்களுடன் போராளிக் குடும்பம் ஒன்றும் வந்தது. அவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகியிருந்தது. தன்னுடைய மைத்துனியையே அவர் திருமணம் செய்திருந்தார். கையில் நான்கு மாதமே ஆண்குழந்தை.
அந்த இளம்மனைவிக்கு மாதவிலக்குடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருந்தது. மாற்று உடைகள் கூட எதுவுமில்லை. அவளால் நடக்கவே இயலாது. பாதுகாப்பான இடமில்லை என்பதால் அவள் மெதுமெதுவாக நடந்துகொண்டிருந்தாள். நான்குமாதக் குழந்தை பசியில் துடித்துத் துடித்து தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டே இருந்தது.
நடக்க நடக்க அவளுக்கு வயிற்றால் போய்க்கொண்டிருந்தது. தன்னுடைய
மேற்சட்டையை ( ரீ சேர்ட் ) கழற்றி வயிற்றுப்போக்கை துடைக்கக் கொடுத்துவிட்டு வெற்றுடம்புடன் நின்றான்.
நான் இறுகி இறுகிப் பாறையாகிப்போனேன்.
அவளுக்கு மிகுந்த களைப்பு. யாரிடமும் தண்ணீர் இல்லை. அவளுக்கோ தண்ணீர்விடாய் அதிகரித்தது.
இருளில் எங்கோ நிலத்தில் கிடந்த வெற்றுப் போத்தல் ஒன்றைக் கண்டெடுத்த அப்போராளி,
“ அக்கா இவளை ஒருக்கால் பாத்துக்கொள்ளுங்கோ…. எங்கேயாவது தண்ணீர் எடுத்துக்கொண்டு வாறன்……” என்றபடி மனைவியையும் குழந்தையையும் என்னருகே விட்டுச்சென்றான். அந்தப்பெண்ணோ அனுங்கிய படி நிலத்தில் சுருண்டு கிடந்தாள். குழந்தையும் ஈனக்குரலில்
அழுதபடியே இருந்தது.
நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. சிலமணி நேரத்தின் பின்பாக அவன் வெற்றுப்போத்தலுடன் திரும்பி வந்தான்.
“ என்ன தம்பி தண்ணி கிடைக்கேல்லையோ….. “ எனக்கு இதயம் நொருங்கிவிட்டது போலிருந்தது.
“ இல்லையக்கா…. தண்ணி பிடிக்கிற இடத்திலை ஆமி நிக்கிறான்…. தண்ணி எடுக்க விடாமல் அடிக்கிறானக்கா…. இஞ்ச எனக்கும் பொல்லால ( தடித்த தடி) அடிச்சுப் போட்டானக்கா…… “
மின் வெளிச்சத்தில் அவனுடைய முதுகு தாறுமாறாய் வீங்கிக்கிடப்பது தெரிந்தது.
“ நான் அந்தப் பொல்லைப்பறிச்சு திருப்பி அடிக்கத்தான் யோசிச்சனான்… பிறகும் இதுகள் ரெண்டையும் யோசிச்சுப்போட்டு வந்திட்டன்….. சரியா நோகுதக்கா…. “ என நெளிந்தான்.

சிறிது நேரத்தில் படையினர் மக்களைப் பதிவு செய்வதற்கு வரிசையில் வரும்படி அழைக்கத் தொடங்கினர்.
“ அக்கா …. நீங்கள் போறசனத்தோடை சனமாகப் போங்கோ….. உங்களைப் பிடிக்கமாட்டாங்களக்கா…. நான் கொஞ்சம் விடிய இவளையும் கொண்டு வாறன்…… “
என்று என்னை அனுப்பிவைத்தான் அவன்.
நான் முகாமிற்கு வந்தபிறகும் தெரிந்தவர்களிடம் அவனைத் தேடினேன். தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை. வெளியே வந்தும் பலவழிகளில் தேடினேன். அவனது பெற்றோர் வைத்தபெயர் தெரியாது. கண்டுபிடிக்க இயலவில்லை.
இப்போது அவர்கள் உயரோடு இருக்கிறார்களா காணமலாக்கப்பட்டார்களா என்பதும் தெரியவில்லை.
14 ஆண்டுகள் கடந்துபோன நிலையிலும் இப்படியான கொடும் நினைவுகள் பலவற்றின் அலைக்கழிப்புடன் தான் எமது வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது.
தொழுவத்தில் நிற்கும் பசுவைப்போல நினைவுகளை அசைபோட்டபடியே வாழ்க்கை இழுத்துச்சென்றுகொண்டே இருக்கிறது.
இழந்த உயிர்களை எம்மால் திரும்பப் பெற முடியாதுதான். ஆனால் எம் தாய்நிலத்தை எம்மால் பாதுகாக்க முடியும் என எண்ணுகிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தைக் கூட்டாக நிகழ்த்திமுடித்துவிட்டு, கண்மூடிக்கிடக்கும் இந்த உலகின் கண்களை எங்கள் பேரறிவால் திறக்க வேண்டும்.
மே 18 எல்லாவற்றையும் கடந்து எங்களுக்குள் எழுச்சியையும் உறுதியையும் வளர்க்கும் நாளாகவே அமைகிறது.
எல்லா வாசல்களும் மூடப்படுவதில்லை. எங்களுக்கான வாசலை நாங்கள்
தேடிக்கொள்வோம். எம் இளைய தலைமுறைக்குள் இந்த உறுதியான எண்ணம் உருவேற உழைப்போம்.

ஆதிலட்சுமி சிவகுமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment