முல்லைமண் பெற்றெடுத்த புதல்வி கப்டன் சிறீமதி.

0 0
Read Time:16 Minute, 28 Second

அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது.

சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..? சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………”

நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன்.

சிறீமதி, உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள்.

அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம்மை வரவேற்றவர் ஒரு வயோதிபத் தாய் சுகவீனமுடையவர். இருந்தாலும், தன்னால் இயன்றளவுக்கு எம்மை உபசரித்து, தேநீர் தயாரித்துத் தந்தார். நாங்கள் தேநீரை ஆவலோடு பார்த்தவண்ணம் இருக்க, சிறீமதியோ ஓடிச்சென்று, அம்மாவிடம் இருந்து தேநீரை வாங்கி எல்லோருக்கும் பரிமாறத் தொடங்கினாள். தாயோடு பிள்ளையாக, மக்களோடு மக்களாக ஒன்றுபடுகின்ற அந்தப் பண்பு அவளோடு கூடவே பிறந்தது.

இன்னொரு நாள்,

நாம் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்தோம். எமக்கு உதவியாக மக்களும் சேர்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். மதியமாகி வெகு நேரத்திற்குப் பின்னரும் உணவு வரவில்லை . எமக்கு உதவியாகப் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்த மக்கள் பசியுடன் இருக்கின்றார்களே என்ற எண்ணம் மனதை உறுத்த, உணவு வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போன சிறீமதி, பக்கத்தில் ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டு நாம் தங்கியிருந்த இடத்திற்குப் போனாள். அங்கே நின்ற ஏனைய போராளிகள் ஏதோ வேலையாக இருந்ததால் அவர்கள் உணவை எடுத்து வருவதற்குத் தாமதமாகி விட்டது.

வேகமாக வந்திறங்கிய சிறீமதியைக் கண்டதும், அவள் கோபமாக இருப்பது எல்லோருக்கும் விளங்கிவிட்டது. எல்லோரும் பதட்டத்துடன் இருந்தார்கள்.

“ஏன் இவ்வளவு நேரமும் சாப்பாடு கொண்டு வரேல்லை? வேலை செய்யிற சனங்கள் பாவமல்லோ ?” என்று பொரிந்து தள்ளிவிட்டு, உணவை எடுத்துக் கொண்டு, போனவேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். இவளுக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், இரு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவளது சகோதரன் ஒருவர் எமது முழுநேர உறுப்பினராகக் கடமையாற்றுகிறார்.

இவள் தனது பாடசாலை நாட்களில் சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும், மதிப்பைப் பெற்றிருந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும் முன்னணியில் திகழ்ந்தாள். தான் படித்த ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர் ஒன்றியத் தலைவியாகவும், அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் அமைப்பு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டாள். இவள் சமகால நிகழ்வுகளையும், அரச படைகளால் மக்கள்படுகின்ற அவலங்களையும் கலைப் படைப்புக்களினூடாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

அத்தோடு பெண்களை விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்காக அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டாள். இப்படியிருக்கும் போது, ஒரு நாள் தன் தாயிடம்,

“அம்மா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இயக்கத்துக்கு ஆட்களை எடுக்கிற வேலையையே செய்து கொண்டிருக்கிறது? இயக்கத்திலே சேரப்போறன்” என்று கேட்டாள். அந்த வீரத்தாயும் மறுப்பேதும் சொல்லாமல், மகளைக் கூட்டிச்சென்று எம்மவரோடு இணைத்துவிட்டாள்.

எவராலும் அடக்கமுடியாத மதங் கொண்ட யானையைப் பிடித்துக் கட்டிய ‘அரியாத்தை ‘ பிறந்த முல்லைத்தீவு மண்ணிலேதான் சிறீமதியின் தாயும் பிறந்தவள் அல்லவா? அரியாத்தையின் வீரமும் உறுதியும் அவளிடமும் இருக்கத்தானே செய்யும்?

பயிற்சியை முடித்த சிறீமதி அரசியல் வேலைக்கென நியமிக்கப்பட்டு, மணலாற்றில் தனது வேலையைத் தொடங்கினாள். அப்போதுதான், ஆயிரக்கணக்கான போராளிகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அவளிடம் உண்டானது. அவளது எண்ணத்துக்கு ஏற்ப, அவளின் திறமையால் பயிற்சியாசிரியராக நியமிக்கப்பட்டாள்.

பதின்மூன்றாம் பயிற்சி முகாமுக்குத் துணையாசிரியராக இருந்த சிறீமதி, சிறீலங்கா இராணுவத்துக்கெதிரான எமது முதலாவது மரபுவழிப் போரான ஆகாயக்கடல் வெளித்தாக்குதலுக்கு உதவிக் குழுவாகச் சென்றாள். தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். இவள் மீது பொறாமை கொண்ட தடியொன்று இவளின் காலைப் பதம் பார்த்துவிட்டது.

அந்தப் புண் நாளடைவில் பெரிதாகிவிட்டது. நடப்பதற்குக்கூடச் சிரமப்பட்டாள். இழுத்து இழுத்துத்தான் நடக்க முடிந்தது. ஆனாலும் தளரவில்லை . போர் ஒரு முடிவுக்கு வரும்வரை தனது பணியைத் தொடர்ந்து செய்தாள். அங்கிருந்து திரும்பியதும் மீண்டும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்களைப் புதிய போராளிகளாக மாற்றியமைத்தாள்.

ஒருமுறை,

எமக்குப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. களைப்பு மிகுதியால் காவற்கடமையில் இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவார்கள். இரவில் சாப்பிடுவது பெரும்பாலும் குறைவு. உடல் அலுப்பால் உறங்கிவிடுவார்கள். எஞ்சுகின்ற உணவு கொட்டப்படும். இதைக்கண்ட பயிற்சி முகாம் பொறுப்பாளர் சிறீமதியைக் கூப்பிட்டார்.

“சிறீமதி, ஒருக்காப் போய் உன்ர பிள்ளையள் இருக்கற அறையளுக்குப் பின்னாலை பார், எவ்வளவு சாப்பாடு கொட்டிக்கிடக்குது எண்டு. நாளைக்கு முழுக்க அவையளுக்குச் சாப்பாடு குடுக்கக்கூடாது. அப்பத்தான் தெரியும் சாப்பாட்டின்ரை அருமை” என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை பயிற்சியை முடித்துக்கொண்டு எல்லோரும் வரிசையில் இருக்கிறோம். எங்களிடம் வந்த சிறீமதி கண்டிப்பான தொனியில், “ஏன் பிள்ளையள் இவ்வளவு சாப்பாட்டையும் கொட்டியிருக்கிறியள்? இரவிலை ஏன் ஒருதரும் சாப்பிடுறதில்லை ? இப்படி இரவில சாப்பிடாமவிட்டா விடிய என்னெண்டு றெயினிங் எடுக்கிறது?”

என்று, தொடர்ந்து ஒரு குட்டிப் பிரசங்கம் செய்துவிட்டு, “இண்டைக்கு முழுக்க நீங்க ஒருதரும் சாப்பிடக்கூடாது. அப்பத்தான் உங்களுக்குச் சாப்பாட்டின்ர அருமை தெரியும்”

என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அன்று முழுவதும் எவருமே சாப்பிடவில்லை . இவளும் சாப்பிடவில்லைத்தான். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் இவள் சாப்பிடவில்லை. வழமைபோல் நாளாந்தப் பயிற்சியை முடித்தபின் இரவு சாப்பிடாமல் படுத்த ஒவ்வொருவரையும் எழுப்பி, சாப்பிடவைத்து நாங்கள் சாப்பிட்டபின் தான் அவள் சாப்பிட்டாள். அந்த நேரத்தில் அவளது உணர்வு, எங்களின் உணர்வுகள் எப்படி இருந்தனவென்று வார்த்தைகளால் சொல்வது கடினம். அன்னையின் அரவணைப்பில் உள்ளது போல், அதற்கும் மேலே மேலே… உணர்ந்தோம். பிள்ளைகளைத் தண்டிக்க விரும்பாத சிறீமதி அடிக்கடி கூறுவது இதுதான்.”பிள்ளையள், சும்மா சும்மா குழப்படி செய்து அநியாயமாப் பனிஸ்மென்ற் வாங்காதேங்கோ”.

பயிற்சியை முடித்த பின்னர் எமது குழுக்களில் ஒரு பகுதி தொண்டைமானாறுக்குச் சென்றது. அதற்குத் தலைமை தாங்கியவள் சிறீமதிதான். அங்கிருந்து வளலாய் இராணுவ முகாமுக்குக் காவற்கடமையைச் செய்வதற்காகச் சென்றுவருவோம்.

எந்த நேரமும் இராணுவம் முன்னேறலாம், சண்டை தொடங்கலாம் என்பதால் எதிரியை எதிர்பார்த்தே நின்றோம். அப்போது எங்களுக்குப் போர் அனுபவம் எதுவுமில்லை . “பிள்ளையள், பயப்பிடக்கூடாது, நல்லா அடிபடோணும். அதுக்காக மோட்டுத்தனமாய்ப் போய்மாட்டுப்படக்கூடாது. கவனமா, நிதானமா அடிபடோணும், என்ன ?” என்ற இவளுடைய வார்த்தைகள் எம்மை உறுதியாக்கும். போருக்குத் தயார்படுத்தும்.

இவளுடன் நாம் இல்லாவிட்டாலும், எம்மை எங்காவது காணும் பொழுதுகூட எம்மில் கவனம்தான். “என்ன பிள்ளையள் இந்த உடுப்பின்ர நிறம்? ஒழுங்காத் துப்பரவா இருக்கிறதுக்கென்ன, ஆ?” என்று செல்லமாகக் கண்டிப்பாள். அப்போது, எமது இதயபூமியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறீலங்கா இராணுவத்தினர் மீண்டும் காட்டுக்குள் முன்னேறமுயன்றனர்.

எதிரியுடன் மோத எமது படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. சிறீமதிக்கோ புதிய போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. விடுவாளோ அவள்? மகளிர் படையணியின் தளபதியிடம் போய்ச் சண்டைபிடித்தாள்.

“என்னைச்சண்டைக்குப் போகவிடுங்கோ. போயிட்டு வந்து றெயினிங் குடுக்கிறன்”

இறுதியில் சிறீமதியின் பிடிவாதந்தான் வென்றது. சண்டைக்குச் சென்றாள். போர்முனைக்குப் போகும் போது, மீண்டும் ஒரு புறநானூறு எழுந்தது. மகளிர் படையணியினர் பயணம் செய்த வாகனம், போகும் வழியில் சிறீமதியின் வீட்டு வாசலின் முன்னால் பழுதடைந்து நின்றுவிட்டது. வாகனத்தைத் திருத்துவதற்கு இவளது குடும்பத்தினர் உதவி செய்தனர்.

தமிழீழத்தின் வீரத் தாய்மாருள் ஒருத்தியும் சிறீமதியின் அன்னையுமான அந்த மாதர்குல மாணிக்கம்,”நல்லாச்சண்டை பிடிச்சு, அவங்களை அடிச்சுத்திரத்திப் போட்டு வெற்றியோட வாங்கோ”

என்று தன் மகள்களை ஆசிர்வதித்து, விடைகொடுத்தாள். தன்பெண் குழந்தைகளை ஒரு தாய் போருக்கு அனுப்பும் புதிய புறநானூறு ஒன்று அங்கே எழுதப்பட்டது. இதுதான் இந்த மண்ணுக்கேயுரிய இயல்பு. வாகனம் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

சிறீமதி திடீரென்று தன் மனதில் ஏதோ நினைத்தவளாய்… கண் கலங்க தனக்கருகில் இருந்த தோழியிடம் கூறுகிறாள்.

“நான் இயக்கத்துக்கு வந்ததற்கு ஒரு நாள் கூடக் கவலைப்படேல்ல. இப்ப அம்மா, அப்பா, சகோதரங்களையும் கண்டிட்டன். ஆனா உயிரையும் விடப் பெரிசெண்டு தான் நினைக்கிற இந்த மண்ணையும், மக்களையும் காக்கவெண்டு வெளிக்கிட்டவரைத்தான் காணேல்ல. அதுதான் எனக்கு இப்ப கவலையா இருக்கு”.

அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. போர் முனையைப் படையணிகள் அடைந்துவிட்டன. சிறீமதி ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினாள். எதிரியிடமிருந்து எண்ணற்ற ரவைகளும் குண்டுகளும் எம்மை நோக்கிவந்து கொண்டிருந்தன. “செல் குத்துறான் எல்லாரும் கவரில நிண்டு அடிபடுங்கோ “

“கவனமா ஒருத்தரையும் விடாம தூக்கிக்கொண்டு போங்கோ” சிறீமதியின் குரல் முன்னணியில் நின்று வழி நடாத்திக் கொண்டிருந்தது. எதிரியிடம் இருந்து வந்த எறிகணை ஒன்று தன்னிடம் இருந்து இவள் எல்லோரையும் தப்பவைக்கிறாளே என்ற கோபத்தினாலோ என்னவோ, இவளது தலையைச் சீவிச்சென்றது.

ரீ81 துப்பாக்கியையும், வோக்கியையும் தனது இருகைகளாலும் அணைத்துப் பிடித்தபடி, விழுந்த சிறீமதியின் வாயிலிருந்து . “பிள்ளையள்” என்ற ஒரு சொல் மாத்திரமே வந்தது என்று, அவளோடுகளத்தில் நின்ற தோழிகள் விம்மலுடன் கூறினார்கள்.

முல்லைமண்பெற்றெடுத்த புதல்வியின் குருதியால், எமது இதயபூமி தன் வளத்துக்கு மேலும் உரம் சேர்த்துக்கொண்டது. அவள் காவல் செய்த தொண்டைமானாற்றுக் கடலோ தனது அலைகளை உயர்த்தி, “சிறீமதி எங்கே? எங்கே?” என்று தேடுகிறது.

இவளின் அக்கா மகன் தீபன், “அன்ரி அன்ரி” என்று, வீட்டுக்கு வரும் பெண் போராளிகளில் சிறீமதியைத் தேடுகிறான். அவள் வளர்த்தெடுத்த புதிய தலைமுறைகளோ அவளின் இலட்சியக் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

  • உலகமங்கை –
    நன்றி
    -களத்தில் இதழ்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment