தோழியே தோழனே சிந்தியுங்கள்

0 0
Read Time:5 Minute, 48 Second

தோழி!
நானும் நீயும் நடந்த களம்
வெறுமையாய் கிடக்கிறது
தோழா!


நானும் நீயும் நடந்த நிலம்
அநாதையாய் இருக்கிறது
காடுகள் மண்டிவிட்டன
எங்கள் காவலரண்கள்
கட்டாந்தரையாகின்றன
எங்கள் நிலங்கள்
வேலிகள் அற்ற வயல்களைப்போல
ஆகிவிட்டன
எங்கள் எல்லைகள்
நாங்கள் களத்தில் நின்றவரை
எலிகள் கூட அனுமதி பெற்றே
எல்லை கடந்தன- இன்று
போதைக் கும்பலும்
பாலியல் தரகரும்
குழந்தை கடத்தலும்
குடிகாரக் கூட்டமும்
சாதி வெறியரும்
சமய மூடரும்
சோரம் போவோரும்
துரோகிகளும்
ஆளும் கூடாரமாகிவிட்டது
எங்கள் நாடு!

தோழா!
நீ ஓரிடத்தில்
தோழி!
நீ ஓரிடத்தில்
நான் ஓரிடத்தில்
இப்படியே
சிதறிக் கிடக்கிறோம்
எங்கிருந்தாலும் எங்கள்
நாட்டின் விடுதலையை
மனம் கொள்ளும் மனப்பக்குவம்
ஏன் எமக்குள் இல்லாமல் போனது?

இப்போதெல்லாம்
எங்களை வசை பாடுவதே
எங்கள் வேலையென்றாகி விட்டது
பொதுவெளியில் எங்கள் போராளிகளை
விமர்சிப்பது பொழுது போக்காகிவிட்டது
நானும் நீங்களும் ஒருபோதும்
இப்படி வளர்க்கப்படவில்லை
நானும் நீங்களும் ஒருபோதும்
இப்படி வாழ்ந்ததும் இல்லை
ஏன் நாங்கள் மாறினோம்?
அல்லது ஏன் மாற்றப்பட்டோம்??
இப்படியே எங்கள் பெருமைகளை
அழிக்கப் போகிறோமா???
அடுத்தவர் செருப்புகளையே
துடைக்கப் போகிறோமா????

என்ன செய்யப் போகிறோம்?????

களத்தில் விழுந்த
விடுதலைப் புலியைக்
கடந்து சென்றுதான்
நாங்கள் களங்களை வென்றோம்
எங்கள் நிலத்தில்
ஒன்றாய் நின்றுதான் பெரு வெற்றிகளைப் பெற்றோம்
ஒருவன் குருதி சிந்தினால்
நாமும் வலியை உணர்ந்தோம்
ஒருத்தி விழி மூடினால்
நாமும் துடியாய் துடித்தோம்
இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்
இருபதாக நாம் பிரிந்துவிட்டோம்
நாமே தலைமை என
நாயாய்க் குரைக்கிறோம்!
நாறிக் கிடக்கிறோம்!

எங்கள் கரங்கள் பட்ட துமிக்கிகள்
உணர்வின்றிக் கிடக்கின்றன
அவை கூடச் சிலவேளை
எங்கள் கரங்களில் தவழ்ந்ததற்காக வெட்கப்படலாம்
சக போராளி
சாகக்கூடாது என்பதற்காக
களங்களில் ஓடி ஓடி உழைத்த நாங்களா
இன்று
வீதியில் வைத்து அவர்களை விமர்சிக்கிறோம்?

நான் குருதி சிந்தியபோது
நீ தானே எனக்கு மருந்திட்டாய்!
நீ கால்களை இழந்தபோது
நான் தானே களத்தில் முன் சென்றேன்
உன்னுடன் நானும் தானே வேகப்படகில் வந்தேன்!
என்னுடன் நீயும் தானே
வெடிமருந்து சுமந்தாய்!
நாங்கள் இணைந்து தானே
தடைகளை உடைத்தோம்!
நான் விழுந்தபோது
எனக்குமான வெற்றிகளை
நீ தானே பெற்றாய்!
இன்று ஏன் நீ
எல்லாவற்றையும் மறந்தாய்?

தோழா!
உனக்கு கண் இல்லை
தோழி!
உனக்கு கால் இல்லை
பிறருக்கு உங்களின் பெருமை சொல்ல
இதயமே இல்லை
ஏனிந்த இழிநிலை?

தூற்றுவார் தூற்றட்டும்
புழுதியை வாரித் தூவட்டும்
தேற்றுவதற்குத் தலைவன் உள்ளான் என்று
திமிருடன் இருந்தவர்கள் நாங்கள்!
உங்கள் கரங்கள்தான் எங்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்!
எங்கள் கால்கள்தான் உங்களின் விடுதலைக்காகவும் நடக்க வேண்டும்!
நான் சோற்றை உண்பதால்
சிறியவனும் இல்லை
நீ பீட்சாவை உண்பதால்
பெரியவனும் இல்லை
இரண்டும் நாம் வாழும் நாடுகளின்
உணவுப் பழக்கங்கள் மட்டுமே!
எங்கள் உணர்வுகள் என்றும் ஒன்றேதான்!

தனித் தமிழீழம்தான் எம் இறுதிக் கனவு!!!

கருத்து முரண்பாடுகள் ஆயிரம்
எங்களுக்குள் இருக்கலாம்!
களச் சூழல் இப்போதெங்களுக்கு எதிராக இருக்கலாம்!
நாளையது மாறும்!
புலிப்படை
அணியாகச் சேரும்!
எங்களுக்குள் நாம்தான் விவாதிக்க வேண்டும்!
ஒன்றுபட்டுச் செயலாற்றாமல்
எங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
காலத்துக்கும் நாங்கள்
அடிமையாய் வாழ்வதை
தவிர்க்க முடியாது!
பயணிக்கும் பாதை
வேறாக இருக்கலாம்
குறிக்கோள் ஒன்றுதான்!

எங்கள் தாகம் தமிழீழம்!!!

நிறையச் சொல்லலாம்!
ஆனால் அவையெல்லாம்
உனக்கும் எனக்கும் தெரிந்தவைதான்
இறுதியாக
இரண்டைச் சொல்கிறேன்
நாம் ஒன்றுபடாமல்
ஒன்றும் செய்ய முடியாது!
தோல்வி மனப்பான்மையில் இருந்துகொண்டு
வரலாற்றை எழுதும் இனம் மீளவும் முடியாது👍
சி.செ. புலிக்குட்டி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment