«வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்»நூல் வெளியீட்டு விழா

0 0
Read Time:17 Minute, 6 Second

ஈழத்தில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் என்னும் இயற்பெயருடை சதீஸ், இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளார்.

இவர் கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழர்களது இன்னலை தனது படைப்பில் வெளிப்படுத்திவரும் படைப்பாளி ஆவார்.
சிறைபட்டிருக்கும் இவ் விடுதலை விரும்பியின் உள்ளக்கிடங்கின் விரிந்த சிறகுகளின் சமூக எண்ணப் படைப்பான  சிறுகதைத் தொகுப்பு, திருவள்ளுவர் ஆண்டு 2053 விடைத்திங்கள் 22ம் நாள், அதாவது 05. 06. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.15 மணிமுதல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றல்
முதலாவதாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு தொடங்கப்பெற்றது.
திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், திருமதி சேரலாதன் அமலா, திருமதி மதுகரன் தனவதி, திரு. செல்லையா குலம், திரு. பொன்னம்பலம் முருகவேள் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர்.

அகவணக்கம்
தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா மற்றும் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளர்களையும், பொதுமக்களையும் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த உலகத்தமிழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வரவேற்புரை
தமிழர்களறியின் பெயரால் வரவேற்பு உரையினை திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆற்றினார். இன்றைய நாளில் பல் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளும் ஒர் இனத்தின் நலனிற்கு தேவையானவையே. தனிப்பட்ட கொண்டாட்டங்களும், பொதுப் போட்டி நிகழ்வுகளும், விழாக்களும் எம் தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது. இவற்றைத்தாண்டி இன்று நூல் வெளியீட்டிற்கு நேரம் ஒதுக்கி வருகை அளித்திருக்கும் அனைவரையும் வரவேற்கின்றோம். நாம் அனைவரும் எமக்காக அனைத்தையும் கொடை அளித்த ஈகையரை மறக்கலாகாது. தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைத்த பொதுமக்களையும் அவர்கள் இன்று தாங்கி நிற்கும் பழுவையும் நாம் குறைக்க முன்வரவேண்டும். இன்று சிறீலங்காவின் சிறையில் தடுப்பில் உள்ள கைதிகளின் சட்டரீதியான விடுதலைக்கு நாம் பங்களிப்பு ஆற்றவேண்டும். இந்நிகழ்வு தடுப்புச் சிறையில் இருக்கும் ஒருவர் எண்ணத்தால் அருகில் வந்து சிறுகதைத் தொகுப்பாக எம்கையில் தந்துள்ளார். இதுபோன்ற படைப்புக்கள் தொடர்ந்தும் வெளிவரத் தமிழர் களறி வழிசெய்யும் என்று உரையில் உரைத்திருந்தார்.

வாழ்த்துரை மற்றும் நல்லாசியுரை
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான திருநிறை. விக்னேஸ்வரன் குழந்தை அவர்கள் வாழ்த்தினையும் நல்லாசிகளையும் நல்கினார்.
இந்நூல் படைப்பின் பொருள் சமூகச் சிந்தனை அiனைத்து தமிழ் மக்களையும் சென்றடையவும், உள்ளத்தில் கதைகளின் கருக்கள் எண்ணத்தை தூண்டவும் வாழ்த்தியதுடன், இந்நூல் படைப்பாளியின் தாயார் முதற்பக்கத்தில் குறிப்பிட்டபடி இடர்கள் கடந்து இறைவன் துணையால் சிறையின் இரும்புக்கதவுகள் திறக்கட்டும்! திரு. சதீஸ் போன்று தடுப்பில் உள்ள அனைத்து அரசியற்கைதிகளும் விடுதலைபெற்று நீண்ட வாழ்நாளோடு திருநிறைந்து வாழ நல்லாசிகள் என வாழ்த்தி மொழிந்தார்.

நூலாசிரியர் அறிமுகம்
வெண்திரையில் சிறு ஒளித்தொகுப்பாக குரல்வடிவில் கருத்துப்படத்துடன் திரு. செல்லையா சதீஸ் (விவேகானந்தனூர் சதீஸ்) நூலாசிரியர் அறிமுகம் திரையிடப்பட்டது.
சிறீலங்காச் சிறைச்சாலையில் சிறை வாழ்க்கை வாழ்ந்துவரும் அரசியல் கைதி, கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழ் மக்களின் இன்னல்களை படைப்புக்களாக்கி வெளியிடுவதில் உள்ள கடினத்தை அரங்கில் இருப்போர் உணரும் வகையில் சதீஸ் அவர்களின் உரைப்பொருள் அமைந்திருந்தது.

நூலாய்வுச் சிறப்புரை
போராளி திரு. செம்பருதி தன்பட்டறிவினையும், போராளிகள், பொதுமக்கள் சிறையில் முகம் கொடுக்கும் கடினங்களையும் சபையோர்கள் புரியும்படி விளக்கி உரையினைத் தொடங்கினார்.
நான்கரை ஆண்டுகள் சிறைவாழ்வில் தான் வாழ்ந்த சிறைவாழ்வினை சபையோர் கண்முன் கொண்டுவந்து உரையாற்றினார்.
எழுதுவதற்கு வளங்கள் நிறைந்தது அல்ல சிறீலங்காச் சிறை. எழுதியதற்காக உதைவாங்கிய கைதிகளும் உள்ளார்கள். எழுத்தாற்றல் அனைவருக்கும் வாய்க்காது. அப்படி தன் துயரைத்த சொல்லில் எழுத்தில் வெளிக்காட்ட முடியாத கைதிகளின் வலிகளையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும் என்றார்.
சிறையின் கதவுகள் இரவு பூட்டப்பட்டு காலையில்தான் திறக்கப்படும். கழிவறை இல்லாது போத்தல்களுக்குள் சிறுநீர் கழிப்பதும், காலையில் கதவு திறந்தவுடன் கழிவறைக்கு செல்வதா, காலை உணவிற்கு செல்வதா எனும் சிக்கலையும் தன் மொழியில் தெளிவுபடுத்தினார்.  
மேலும் தொடர்கையில் தமிழர்களறி என்பது உணர்வுகளை உண்மைகளை அனுபவங்களைப் பகிர்கின்ற எழுத்தாளர்களை முன்நிறுத்தி அவர்களுடைய நூல்களை தமிழர்கள் மத்தியில் பரப்புகின்ற மிகப்பெரும் பணியினை மேற்கொள்கின்றது. இதற்கு முன்னரும் சிறையில் உள்ள எங்களது ஒரு உறவின் படைப்பு இங்குவெளியிடப்பட்டிருந்தது. அதில் பங்கெடுத்த நாம் இன்று இதிலும் பங்கெடுத்திருக்கின்றோம்.
இந்நூலில் வெளிவரும் கதைகளை விளக்கிப் பேசினார். திரு. சதீஸ் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களையும் நிரல்படுத்திப் பேசினார்.
இலக்கியப் பதிப்புக்கள், கவிதைகள், படைப்புக்கள் தாண்டி தவிப்புடன் எழுத்தினை வெளிகொண்டுவரத் துடிக்கும் இவ்வாறான படைப்பாளிகளுக்கு தமிழர் களறி கைகொடுப்பதற்கு தனது நன்றியினையும் நவின்றார்.


சிறப்புரை
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரால் திருநிறை. கொலம்பஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.
98க் காலப்பகுதியில் தான் வாழ்ந்த சிறைவாழ்வினை மீள்மீட்டிப்பேசிய திரு. கொலம்பஸ், அப்பா எப்போ வருவார் எனும் தலைப்பில் அக்காலத்திலும் தான் எழுதிய எழுத்தினை நினைவூகூர்ந்தார்.
ஒரு எழுத்தாளனாக சிறைக்குள் நுழைந்திருப்பின்கூட எழுதும் மனநிலையினை சிறீலங்காச் சிறை இழக்கச்செய்யும். இவற்றைத் தாண்டி எழுத வாய்ப்பது இலகுவானதல்ல, அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளிருந்து இப்படைப்பினை எழுதிய திரு. சதீஸ் அவர்கள் திறனை வாழ்த்தி உரையினை நிறைத்தார்.


நயப்புரை

திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் நயப்புரையினை வழங்கினார்.
11 சிறுகதைகளைத் தாங்கி வேப்ப மரமும் பவளம் ஆச்சியும் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக அடைபட்டுள்ளார். உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே சிதைக்கின்ற ஓரிடமான சிறைக்குள் இருந்துகொண்டு இந்தப் படைப்புக்களை அவர் படைத்திருப்பது மிகவும் முதன்மையானது ஆகும்.
«அப்பா எப்போது வருவாரம்மா»என்று கேட்கும் குழந்தைகளின் ஒலிகள் எங்கள் செவிகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.சிறையில் இருப்பவர்களினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குழந்தைகளின் குரல்களின் ஒலிகளிலேதான் எங்கள் தூக்க இன்மையினையும் பசி இன்மையினையும் எங்கள் வாழ்வின் வெறித்துப்போன நிலைமையும் இயங்கிக்கொண்டிருக்கின்றது என உரைத்து நூலின் உட்பொருளை செறிவாக்கி நயப்புரையினை வழங்கினார் திருமதி ஆதிலட்சுமி.
இந்நூலில் படைப்பாளி தனது ஊரை எழுத்தில் விளக்கும் விதத்தைப் பாராட்டி தான் பழகிய மக்களின் வாழ்வியலையும் விரிவாகப் பேசினார்.

நூல் வெளியீடு
தமிழர் களறியின் பெயரால் மேடையில் நூலினை திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் வெளியிட்டார். சைவநெறிக்கூடத்தின் பெயரால் செந்தமிழ் அருட்சுனையர் திருமதி தனவதி மதுகரன் நூலினைப் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை வருகை அளித்திருந்த அனைவரது முன் நூல் வைக்கப்பட்டிருந்தது. மேடையில் நூல் வெளியீடு நடைபெற்ற அதே நேரத்தில் அரங்கில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலை தம் அருகில் இருந்தவர்களிடம் கையளித்து நூலை வெளியிட்டனர்.

கலந்துரையாடல்
அரங்கில் இடப்பட்டிருந்த வட்டமேசையில் வருகையாளர்கள் அனைவரும் இணைந்து இரு தலைப்புக்களில் உரையாட வேண்டப்பட்டனர். விடுதலை, தடுப்பு – சிறை எனும் தலைப்பில் உரையாடப்பட்டது.
உரையாடலின் பெறுபேறு சுருக்கமாக அனைவருக்கும் கேட்கும்படி ஒவ்வொரு மேசையின் பெயராலும் மீளுரைக்கப்பட்டது.
நூல் வெளியீட்டிற்கு வருகை அளித்தோர் ஈடுபாட்டையும், எண்ணச் செறிவையும் மீள் எழுப்புவது இதன் நோக்கமாக இருந்தது. வெறுமனே சடங்காக நூல் வெளியீடு அமையாது எண்ணத்தை தூண்ட வேண்டும் எனும் வேண்டுகை விளக்கப்பட்டது.

வாசிப்பு
நூல் வெளியீட்டின் நிறைவில் 11 சிறுகதையில் இருந்து «அப்பா எப்ப வருவாரம்மா» எனும் கதையினை வருகை அளித்திருந்த அனைவரும் சேர்ந்து வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேடையில் இக்கதையினை திரு. பொலிகை ஜெயா அவர்கள் நயத்துடன் இயல்பாக, சிறந்த உச்சரிப்புடன் மேடையில் வாசித்தளித்தார்.
மேடையில் வாசிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை, வருகை அளித்திருந்த அனைவரும் நூலை சேர்ந்து படித்தனர்.

சிறை
திரு. செங்கோல் அவர்கள் தான் சிறையில் வாழ்ந்த வாழ்வினையும் ஏனைய அரசியல் கைதிகள் இன்றுவரை முகம்கொள்ளும் கடினங்களையும் உணர்வுடன் எடுத்துரைத்தார்.
தமிழர் களறி தொடர்ந்தும் இவ்வாறு படைப்புக்களை வெளியிட உதவுதற்கு நன்றி நவின்றார்.

தோழமைக் கரங்கள்
சிறீலங்காவின் சிறையில் அரசியல் கைதிகளாக வழக்கு உசால் ஏதுமின்றி தமிழர்கள் பலர் இன்றுவரையும் தடுப்பில் உள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உரிய சட்டவளவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2019ம் ஆண்டு காலப்பகுதியில் தோழமைக் கரங்கள் நிறுவப்பட்டு இதுவரை பலருக்கும் சட்டஉதவியும் தடுப்பில் உள்ளோர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் தோழமைக் கரங்கள் அமைப்பால் வழங்கப்பட்டிருந்தது.
தோழமைக் கரங்கள் பெயரில் திரு. சிவசுப்பிரமணியம் பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இவ் அமைப்பின் தோற்றத்திற்கான காரணத்தினை விளக்கியதுடன், தொடர்ந்தும் சிறீலங்காச் சிறையில் உள்ள கடைசி அரசியல் கைதிக்கும் விடுதலை எட்டும் வரை தோழமைக் கரங்கள் தமது பணியினைத் தொடரும் என உறுதி வழங்கினார்.  
நூல் வெளியீட்டிற்று வாழ்த்து நல்கி உரை முடித்தார் திரு. பிரபாகரன்.

நன்றியுரை – நிகழ்வு நிறைவு
தமிழர் களறியின்  பெயரால் இன்று நேரம் ஒதுக்கி நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும், இப்படைப்பாளிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி நவிலப்பட்டது.
வருகை அளித்திருந்த அனைவரையும் இன்றைய நூல் வெளியீடு ஏற்படுத்திய உணர்வினை தம் சொல்லில் விவரித்து ஒரு சொல்லில் உணர்வை வெளிப்படுத்த வேண்டப்பட்டது.
வருகை அளித்திருந்தோர் தமது உள்ளத்தில் பதிந்த உணர்வினை ஒரு சொல்லில் மொழிந்தனர்.
அரசியல் கைதிகளுக்கு விடுதலை, தமிழ் மொழி, ஒற்றுமையே பலம், வழிதேடாதே வழியமை, நூல்களை வாசிப்போம் ஆகிய சொற்கள் பலரால் மொழியப்பட்டது.
நிறைவில் வருகை அளித்திருந்த அனைவரும் வட்டவடிவில் நின்று ஒருவர் தோளை ஒருவர்தட்டி «தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு உழையுங்கள், உங்கள் உழைப்பு இனத்திற்கு தேவை, உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்» என உற்சாகப்படுத்தும் மகுடத்துடன் நூல் வெளியீடு நிறைவு அடைந்தது.
வெளியீட்டு நிறைவில் இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் இறுக்கமில்லாது தளர்வுடன் நூலின் படைப்பு, இலக்கியம், மொழி போன்ற தலைப்புக்களில் கருத்தாடல் உணவு மேசையில் கலந்துரையாடலாகத் தொடர்ந்தது – நிகழ்வு நிறைந்தது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment