கேணல் வசந்

0 0
Read Time:13 Minute, 52 Second

எழுந்தேறிய புயங்களும் , ஏறு நடை போடும் வேகமும், கம்பீரமான தோற்றத்தோடும், வலம் வந்த வசந் மாஸ்டரை தெரியாதபோராளிகள் தமிழீழத்தில் யாருமே இருக்க முடியாது.

எமது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பயிற்சி ஆசிரியராக செயல்பட்டு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் பாராட்டைப் பெற்ற பெரும் வீரன் இவர். பல சமர்க்களங்கள் கண்டு விழுப்புண்கள் அடைந்த போதும், இயங்கவே முடியாது என்ற நிலை பல தடவைகள் ஏற்பட்ட போதும் ” முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை “என்று சொல்லிச் சொல்லி சாதித்துக் காட்டியவர் இவர்.

கடமை என்று வந்து விட்டால் வசந்த் மாஸ்டரின் குரல் கண்டிப்புடனும் கம்பீரத்துடனும் ஒலிக்கும். அந்த குரலுக்கு கட்டுப்படாமல் யாராலும் இருக்க முடியாது. பயிற்சி நேரங்களில் எத்தனை போராளிகள் அவரிடம் பயிற்சி பெற்றாலும் அத்தனை பேரையும் தன் கண்ணுக்குள்ளே வைத்திருப்பர். சிறு தவறான அசைவைக் கூட கணப்பொழுதில் கண்டுபிடித்து விடுவார் .அவதான இன்மையால் தவறிழைபவர்களுக்கு தண்டனையும் கடுமையாகவே இருக்கும்.

அதிலும் சண்டை பயிற்சிகள், சண்டைக்கான ஒத்திகை பயிற்சிகள் அளிக்கப்படும் போது கண்டிப்பைத் தவிர வேறு எதையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. பயிற்சியில் ஈடுபடும் போது பயிற்சியில் சிறு தவறு விட்டால் கூட சலிக்காது எத்தனை தடவை என்றாலும் சரியாக செய்யும் வரை கடும் பயிற்சிதான்.” பயிற்சி கடினமானால் சண்டை இலகுவாகும்” என்ற தாரக மந்திரத்தை போராளிகளிடையே அடிக்கடி சொல்லி உற்சாகப்படுத்துவார்.
“வசந் வாத்தியிட்டை தப்பவும் முடியாது , வாத்திய பேக்காட்டவும் முடியாது” என போராளிகள் தமக்குள்ளேயே பேசிக் கொள்வார்கள்.

அவ்வாறான கண்டிப்பும், கடமையில் நேர்த்தியும், தலைமையில் விசுவாசமும் அவரோடு கூடவே பிறந்ததெனலாம். “வல்லவர்களாகவும் ,நல்லவர்களாகவும்” போராளிகளை உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.

படைத்துறைப் பள்ளியில் கல்வி கற்ற அத்தனை மாணவர்களையும் பயிற்சியில் தேர்ச்சி உள்ளவர்கள் ஆக்கி ,தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிடம் பாராட்டைப் பெற்ற சிறந்த ஆசானும் இவரே.!
அணி நடை என்றவுடன் நினைவில் வருவது வசந் மாஸ்டரின் முகம்தான்.
ஓங்கி ஒலிக்கும் வசந் மாஸ்டரின் குரலே அணிநடைக்கு தனி அழகு சேர்க்கும். அவருடைய குரல் ஓங்கி ஒலிக்கும் போது போராளிகளுக்குள் புதிதாய் வீரம் பிறக்கும்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் கனகர ஆயுதப் பயிற்சியை போராளிகளுக்கு முதன் முதலில் வழங்கிய பெருமையும் இவரையே சேரும். அது மட்டுமின்றி தற்காப்பு கலை ,கம்படி ,கத்திக்குத்து என அத்தனை கலைகளையும் சரியான முறையில் கற்று தேர்ந்த சகலகலா வல்லவன் இவர். அத்தோடு தான் பெற்ற அத்தனை கலைகளையும் சரியான முறையில் போராளிகளுக்கு பயல்விப்பதில் மிகுந்த வல்லுனர்.

பெண் போராளிகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் இவர். ஆண்களுக்கு சமனாக அத்தனை பயிற்சிகளையும் பெண் போராளிகளுக்கும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி ,மிகச் சிறந்த வீரர்களாக்கிய பங்கு இவருக்கும் உண்டு.

தாக்குதல் ஒத்திகை பயிற்சி நேரங்களில் வசந்த் மாஸ்டரிடம் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. அப்போதெல்லாம் அவருடைய வீரத்தையும், விவேகத்தையும், நேர்மையையும்… கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். தான் எடுத்துக் கொண்ட பணியை சிறப்பாக முடிக்கும் வரை ஓய்வில்லாமல் உழைக்கும் வீரன். அவருடைய செயலைப் போல அவர் செய்து முடிக்கும் பணியிலும் ஓர் தனித்துவமான அழகு இருக்கும்.

“ஒரு தடவை பல மணி நேரமாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் .அருகில் நின்ற தோழி மெதுவாகச் சொன்னாள் “நாக்கு தொங்கி தமிழீழம் தெரியுது பயிற்சியை முடிக்கிறாரே இல்ல மாஸ்டர்”
எங்கோ தொலைவில் நின்ற மாஸ்டர் அக்கணமே சொன்னார்” நாக்கு தொங்கி தமிழீழம் தெரிந்தால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் ,அது மட்டும் இல்ல நீங்களும் உயிரோடு திரும்பி வருவீர்கள்”…
இரகசியமாக கதைத்தது இவருக்கு எப்படி கேட்டது என மீண்டும் அவள் சொல்ல , இவருக்கு இரக்கமே இல்லையா? இப்படி போட்டு வாட்டுறார் என மனதுக்குள்ளே நான் சொல்லிக் கொண்டேன். அப்போதும் அவர் சொன்னார் ….”இவருக்கு இரக்கமே இல்லையா என நீங்கள் திட்டுவது எனக்கு கேக்குது தாக்குதல் முடிந்து வெற்றியுடன் திரும்பி வரும்போது தாக்குதலின் வெற்றிக்கு வசந்த் வாத்தியின் பயிற்சியும் ஒரு காரணம் என்று சொல்லிக் கொண்டு வருவீர்கள்”
“நாங்கள் மனசுக்குள்ள நினைக்கிறதை அறிவதற்க்கு ஏதும் கருவி வைத்திருப்பாரோ… என்ற என்ன அலைகள் எமக்குள் ….

எப்போதும் சுறுசுறுப்புடனும், சிந்தனைத் தெளிவுடன் இயங்கும் இவர் மற்றவர்களின் மன எண்ணங்களை கூட சாதாரணமாக புரிந்து கொண்டு விடுவார்.

பின் ஒரு சந்தர்ப்பத்தில் 2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விழுப்புண் அடைந்து மனசலவிலும், உடலளவிலும் பலவீனமடைந்து சோர்வுடன் கேப்பா புலவுப் பகுதியில் உள்ள எமது முகாமில் ஓய்வுக்காக தங்கி இருந்தேன்…
எமது முகாமில் உள்ள மைதானத்தில் தான் வசந்த் மாஸ்டர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு பிஸ்ரல்(கைத்துப்பாக்கி) பயிற்சி கொடுப்பதற்காக வருவார்…

மிகவும் சோர்வுற்றிருதந்த என்னை அழைத்து”பயிற்சியை கவனிக்கும் படி கூறி சுடுவதற்காக ஐந்து ரவைகளும் தந்து என்னை உற்சாகப் படுத்தியதோடு….. ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வரும்போதும் எனக்காகவும் ஐந்து ரவைகள் கொண்டு வந்து சுடத் தருவார்… அன்றைய அவருடைய அந்த செயல் எனக்குள் ஒரு புத்துணர்வையும், நம்பிக்கையும் தந்தது…..

இன்று ஒன்றை மட்டும் புரிந்து கொள்கின்றேன். அவரிடம் கற்ற பயிற்சிகளை எந்த காலத்திலும் மறக்க முடியாது. அவருடைய கண்டிப்புக்கான காரணமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்…

என்னுடைய அன்புத் தோழியாய்,.. சகோதரியாய்,.. இணைந்து பயணித்த சக்தியை, வசந் மாஸ்டர் திருமணம் செய்து கொண்ட பின்பு, வசந் மாஸ்டரோடு நட்போடும் ,அண்ணா என்ற உரிமையோடும் ,பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது .அப்போதுதான் அவரைப் பற்றி பலரும் அறியாத பல விடயங்களை அறிந்து கொண்டேன்….

“இரக்கமே இல்லாத இரும்பு மனிதன் என எல்லோராலும் சொல்லப்படும் வசந் மாஸ்டர் ஒரு சாதாரண மனிதனும் கூட.
சாதாரண மனிதனுக்குள் இருக்கும் அத்தனை பண்புகளும் அவருக்குள்ளும் இருந்தது.மிகவும் அன்பானவர் ,நட்போடு பழகக் கூடியவர், இரக்க சுபாவம் நிறைந்தவர்,
நகைச்சுவையான குறும்புத்தனம் அவருக்குள் நிறையவே இருந்தன…..
மனைவி பிள்ளைகளின் மேல் பேரன்பு கொண்டவர். வீட்டுக்கு செல்வோரை அன்புடன் உபசரித்து தனது கையாலேயே மிகவும் சுவையாக சமைத்தும் தருபவர்.
போராட்டம் சார்ந்த விடயங்களை தாண்டி பொதுவான அறிவு சார்ந்த விடயங்களை பற்றி நிறையவே பேசுவார் .தமிழீழ தேசியத் தலைவரைப் பற்றி பேசுவதென்றால் நேரமே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். சிறு வயதில் தனது உறவுகளை பிரிந்து விடுதலைப் போராட்டத்தில் இனைந்ததால் தமிழீழ தேசியத் தலைவர் தான் அவருக்கு எல்லாமே.

ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது கேட்டேன். ,”அண்ணா இவ்வளவு எளிமையாக அன்போடு நடந்து கொள்ளும் நீங்கள் கடமை நேரங்களில் எல்லோரையும் நடுங்க வைக்கிறீர்களே ஏன்?”….
சிரித்துக் கொண்டே சொன்னார் …
“கடின உழைப்புக்கு மட்டும் தான் பலன் கிடைக்கும் .நான் கண்டிப்போடு நடக்கவில்லை என்றால் போராளிகள் பயிற்சியில கவனம் செலுத்த மாட்டினம். பத்துப்பேர் பயிற்சி எடுத்தால் ஒன்பது பேர் சரியாக செய்து ஒராள் பிழை விட்டாலும் தோல்வி அனைவருக்கும் தான் பத்துப்பேரும் என் கட்டளைக்கு கீழ்ப்படியோனும் அப்பதான் உயிரிழப்புகளை குறைத்து நாம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டலாம். என்ன செய்ய போராளிகளிடம் திட்டுவேண்டிதான் அவர்களுடைய உயிரைக் காப்பற்ற வேண்டியிருக்கு.”

சமாதான காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழப் படைக்கல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நேரடியாகவே களமுனைகளுக்குச் சென்று தனக்கான பணிகளை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து கொண்டு இருந்தார்.

மிகவும் அர்ப்பணிப்போடு செயல் வீரனாக பணியாற்றிக் கொண்டிருந்த வசந்த் மாஸ்டர் 10.05. 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தன்னுடைய கைதுப்பாக்கியை ,அதாவது அவருடைய அன்புத் தலைவன் அவருக்காக கொடுத்த கைத்துப்பாக்கியை எடுப்பதற்காக, பெருமோசையுடன், வெடித்து சிதறிக்கொண்டிருக்கும் வெடிபொருட்கள் நிரம்பிய களஞ்சியத்துக்குள் பாய்கிறார்.. பலர் தடுத்தும் கேட்காதவராய்….

சொல்லுக்கு முன் செயல் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டிய வேங்கையாக ,தலை சிறந்த வழிகாட்டியாக , தமிழீழ தேசத்தின் ஒப்பற்ற வீரனாக ,தான் நேசித்த மக்களுக்காக , தன்னுடைய தேசத்திலேயே, யுத்தம் மௌனிகப் படப் போவதை தெரிந்து கொண்டும் .. தான் உயிரோடு இருக்கும் போது தன்னுடைய துப்பாக்கிக்கு எதுவுமே நடக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு… தனது கை துப்பாக்கியை இறுக பிடித்தபடி விதையாகிப்போனார்..🙏🙏💐

அண்ணா!
“மங்காத புகழ் கொண்ட உன் வீரம்
மண்மீது நீ கொண்ட பற்ருறுதி
மான்புமிகு தலைவன் மீது நீ கொண்ட காதல், மனையாள்,மைந்தர்கள்மேல்நீ
கொண்ட அன்பு என எல்லாமே
உலகம் உள்ளவரை ஒவ்வொரு மானிடர்க்கும் வழிகாட்டியாக இருக்கும்.”
கலைவிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment