இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்வதற்கான கோரிக்கை

0 0
Read Time:61 Minute, 48 Second

அதி வணக்கத்திற்குரியவரே,
73 ஆவது குடியரசு தினத்திற்கு எமது இதயபூர்வ வாழ்த்துக்கள்!
பிரான்ஸ் நாட்டினைத் தளமாக கொண்டு செயற்பட்டு வரும் எமது அசோசியேசன்
இன்ரநாசனல் டிஸ் ட் ர் ய்ட்ஸ் டீ ஹோம்மி (Association International Des droite de
Homme, AIDH) அமைப்பானது ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தினரின்
மனிதவுரிமைகள் சா ர் ந்த செயற்பாடுகளைப் பிரதிநித்துவம் செய்துவருகிறது.

குறிப்பாக ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டின்றித் தொடரும் இன அழிப்புக்
காரணமாக சிலோன் தீவிலிருந்து (1972 இலிந்து சட்டபூர்வமற்ற சிறீலங்கா) புலம்பெயர்ந்த
ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைகள் தொடர்பாக எமது அமைப்புச் செயற்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களைக் கருத்திற் கொண்டும் இந்தோ-பசுபிக்
பிராந்தியத்தில் இந்தியாவின் கேந்திர நலன்களை மிகச்சிறந்த வகையில் முன்னெடுப்பதனைக்
குறியாகக் கொண்டும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மீளாய்வினை
மேற்கொண்டு தாங்கள் செயற்படவேண்டும் என்பதை நாடி இக்கடிதத்தினைத் தங்களுக்கு
வரைகின்றோம்.
புலம் பெயர்ந்திருந்த யூத சமூகத்தினர் சுதந்திரமான இஸ்ரேலிய அரசுக்கான தமது கனவை
நனவாக்கிக் கொண்டது போன்று ஈழத்தமிழர்களும் தமது பாரம்பரிய மரபுவழித் தாயகத்தினை
மீட்டெடுப்பதில் தமது கவனத்தைக் குவித்து வந்துள்ளனர். ஒரு சுதந்திர நாடாக இஸ்ரேலை
அங்கீகரித்த முதலாவது நாடு ஐக்கிய அமெரிக்காவே ஆகும். இஸ்ரேல் நாடானது ஐக்கிய
அமெரிக்காவின் தந்திரோபாய சகாவாக இன்றும் திகழ்வதுடன் ஐக்கிய அமெரிக்காவைத்
தவிர்த்து வேறு மிகச்சிறந்த நெருங்கிய நண்பர் இஸ்ரேலுக்கு கிடையாது என்பது போல
அவ்விரு நாடுகளின் உறவு திகழ்கிறது. இஸ்ரேலின் மதவாதக் கொள்கைகளிலிருந்து
வெளிப்படையாகவே விலகி நிற்கிறோம். அதைப் போலவே, பாலஸ்தீனத்தின் மீதான
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைகயையும் ஈழத்தமிழர் தேசமான நாம் கண்டிக்கிறோம்.
ஆனால், ஐக்கிய அமெரிக்காவுடன் இஸ்ரேலினது நெருக்கமான கேந்திர உறவு
எவ்வாறிருக்கிறதோ, அதைப் போன்ற ஓர் எடுத்துக்காட்டான உறவு எமது ஈழத்தமிழர்
தேசத்துக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவ வேண்டும் என்பதற்காக அமெரிக்க இஸ்ரேல்
பந்தம் போன்று இந்திய-ஈழ பரஸ்பர உறவுகளைப் பேணும் தந்திரோபாய உறவை ஒரு
தேசமாக ஈழத்தமிழர் நாடுகின்றனர் என்பதைத் தங்களுக்கு இத்தால் வெளிப்படுத்துகிறோம்.

இஸ்ரேலின் கொள்கைகளைப் போலன்றி, ஈழத்தமிழர் தேசமானது அடக்குமுறைகளுக்கு
எதிரான, மதசார்பற்ற, பாகுபாடின்றி உள்வாங்குந்திறனும் கொண்ட கருத்தோட்டத்தோடு
உள்ளார்ந்த உறவுகளைப் பேணுவதில் உறுதிபூண்டுள்ளது.
இந்தவகையில், எவ்வாறு அமெரிக்கா இஸ்ரேலை முதலாவதாக அங்கீகரித்ததோ, அதைப்
போல ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் முதலாவது நாடாக
இந்திய முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல்
வேணவா பற்றிய குறிப்பான சிரத்தையுடனும், எமது பார்வையிற் சட்டபூர்வமற்ற சிறீலங்கா
அரசுடன் இந்தியா கடைப்பிடித்துவரும் வெளியுறவுக் கொள்கை பற்றிய அதீத
கரிசனையுடனும் நாம் இக்கடிதத்தினைத் தங்களுக்கு வரைகிறோம்.
இக்கடிதம் பற்றிய பின்புலத்தினை தெளிவுபடுத்தி, எமது வேண்டுதல்களை முழுமையாக
நியாயப்படுத்த முற்படுவதற்கு முன்னதாகவே எமது கோரிக்கைகளைத் தங்கள் முன் விரைந்து
முன்வைக்கின்றோம்:
1. இந்திய அரசும் ஏனைய ஐ.நா. உறுப்புநாடுகளும் ஈழத்தமிழர்களை சிலோன் தீவின் ஒரு
பூர்வீக குடிகள் எனவும், அதேவேளை அத் தீவின் நிலத்தொடர்ச்சி கொண்ட வடக்கு கிழக்குப்
பகுதியில் தமக்கேயுரிய பாhம்பரியத் தாயகத்திற்கு உரித்துடையவர்கள் எனவும், அங்கீகரித்து
ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஈழத்தமிழர்கள் கோரிநிற்கின்றனர்.
தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒரு தேசிய இனமாகப் பர்ணமித்துள்ள ஈழத்தமிழர்கள்
அங்கு ஒரு சிறுபான்மையினர் அல்லர். தமிழர்கள் அங்கு வரலாற்றுரீதியாகவும், போராடி
ஈட்டிக் கொண்ட உரித்தாகவும் மட்டுமல்ல, அழிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டிய
பரிகார உரிமை என்ற அடிப்படையிலும் தமக்கேயுரிய இறைமைக்கு உரித்துடையவர்கள்.
அது மட்டுமல்ல, வில்சோனிய மற்றும் லெனினிச கோட்பாடுகளின் பிரகாரமும், ஐ.நா.
சாசனம் (UN Charter) அத்துடன் குடிசார் அரசியல் சர்வதேச உடன்பாட்டுரை (ICCPR)
என்பவற்றின் கோட்பாடுகளின்படியும் ஈழத்தமிழர்கள் எதுவகையிலும் சமரசமற்ற சுயநிர்ணய
உரிமைக்கு உரித்துடையவர்கள்.
2. ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை அங்கீகரிப்பதுடன் அந்த மூலக்
குற்றத்தைத் தீர்மானிப்பதற்கான சுயாதீன சர்வதேசப் புலன் விசாரணையைக் கோரவேண்டும்
என்றும் ஈழத்தமிழர்கள் இந்திய அரசையும் ஐ.நா.வின் ஏனைய உறுப்பு நாடுகளையும்
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர்.
சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தும் ஒற்றை ஆட்சியின்
துணையுடன், தமிழர்கiயும் அவர்கள் தமது தாயக பூமியுடன் கொண்டுள்ள பிணைப்பையும்
கட்டற்றுத் தொடரும் இன அழிப்புக்கு உட்படுத்திவருகின்றனர்.
1956 ஓகஸ்ட் 19 ஆம் நாளன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டின் பிரகடனத்திலேயே தமிழர்கள் இதை
மூலக்குற்றமாக மிகத் தெளிவாக இனங்கண்டிருந்தனர். திருகோணமலைத் தீர்மானம் இன
அழிப்புக் கொள்கை குறித்துப் பின்வருமாறு தெரிவித்திருந்தது: “செம்மை சான்ற பேரிலக்கியச்
செல்வத்தையும் நவீன வளர்ச்சியையும் கொண்டதும் – கீழைத் தேசத்து மொழிகளில்
முன்னேற்றமடைந்ததும் – முற்போக்குடை யதுமான தமிழை அழித்தொழிப்பதும், சிங்கள
மக்களின் வரலாற்றையொத்த பழைமையும் பெருமையும் மிக்க வரலாற்றை உடையவர்களான
தமிழர்களை – இனக்கொலைக்குட்படுத்துவதுமே அரசின் நோக்கம் என்பதை
ஐயத்துக்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாலும்” (இணைப்பு-1 ஐப் பார்க்க)

இலங்கை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (PPT) எனப்படும் ஐ.நா.வுக்கு வெளியே
செயற்படும் ஒரு தீர்ப்பாயமானது டப்ளின் நகரில் 2012 இலும் பிறேமன் நகரில் 2013 இலும்
நடாத்திய விசாரணைப் பருவ அமர்வுகளின் இறுதியில் பின்வருமாறு தெரிவித்து
முடிவுகூறப்பட்டுள்ளது: “முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகளின் வலுவில் சிறிலங்கா அரசானது
ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றவாளி என்றும் இந்த
இனப்படுகொலையானது ஈழத் தமிழருக்கெதிரான இனப்படுகொலைச் செயற்பாடுகளுடன்
இன்றைவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது எனத் தீர்ப்பாயம் ஒத்தியைபான தீர்ப்பை
எட்டியிருக்கிறது.”
“பாதிக்கப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட தேசிய ரீதியான மனிதவின ரீதியான, மரபினக்குழு
ரீதியான அல்லது மதரீதியான குடித்தொகையினரைச் சேர்ந்தவர்கள் என்றவகையில்
வகைப்படுத்துகையில் இந்தச் சந்தர்ப்பத்திலே பாதிக்கப்பட்டவர்கள், ஒரு தேசியக் குழுவான
ஈழத்தமிழர்கள் என்று இத்தீர்ப்பாயம் வரையறை செய்கிறது,” என நிரந்தர மக்கள்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இன ஒழிப்புக்கு உட்படுத்தபட்ட ஒரு தேசியக் குழு ஈழத்தமிழர் எனத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில்
வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளதைக் குறிப்பெடுத்துக் கொள்க. (இணைப்பு 2 ஐப் பார்க்க)
மேலும், ஈழத்தமிழர்கள் 2015 பெப்ரவரி 15 ஆம் நாளன்று இன அழிப்புக்கான சர்வதேச
விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றினை மக்களாட்சியின் பாற்பட்டு வடமாகாண சபையில்
நிறைவேற்றினர். இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச அரசியல் ஈடுபாட்டாளர்களின்
ஆலோசனைகளுக்கு முரணாகவே மேற்படி தீர்மானம் நிறைவேறியிருந்தது (இணைப்பு 3 ஐப்
பார்க்கவும்).
மறைந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு 2013 ஆம் ஆண்டு
மார்ச் மாதத்தில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றினை
ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது. வடக்கு மாகாணசபையின் 2015 பெப்ரவரி
தீர்மானத்தினை அடுத்து மீண்டும் நினைவூட்டற் தீர்மானம் ஒன்றும் 2015 செப்டம்பரில்
தமிழ்நாடு மாநில அரசினால் நிறைவேற்றப்பட்டது.
2021 ஜனவரி 15 ஆம் நாளன்று இந்தியா உள்ளிட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47
உறுப்பு நாடுகளுக்கும் வடக்கு-கிழக்கில் தேர்தலில் தெரிவான தமிழர் தலைவர்களினால்
அனுப்பிவைக்கப்பட்ட கூட்டுக் கோரிக்கை விடயத்தினைக் கவனத்திற் கொள்ளும்படியும்
கோர விரும்புகின்றோம். 2021 டிசம்பர் 29 ஆம் நாள் திகதியிடப்பட்டு தங்களுக்கு அனுப்பட்ட
கடிதத்தினை விடவும் அக்கடிதம் காத்திரமானதும் உண்மையானதுமாகும்.
“ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது பருவ அமர்வில் காத்திரமான
நடவடிக்கையைக் கோருதல்,” எனத் தலைப்பிட்டு 2021 ஜனவரி 15 ஆம் நாள் வரையப்பட்ட
அந்தக் கடிதமானது குடிசார்சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்களாலும்
ஆதரவளிக்கப்பட்டதுடன் 47 மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளிடம் புதிய தீர்மானம்
ஒன்றினை முன்மொழியுமாறும் வேண்டுகோள் விடுத்தது. அதாவது “ஐ.நா. பாதுகாப்புச் சபை,
ஐ.நா. பொதுச்சபை உள்ளிட்ட ஐ.நா. உயர் அமைப்புக்குள் பொறுப்புக்கூறல் விடயத்தினை
மேல்நகர்த்தி உரிய நடவடிக்கையை முன்னெடுத்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று மற்றும்
பொருத்தமான ஏனைய சர்வதேசப் பொறுப்புக்கூறற் பொறி முறைகள் ஊடாக
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பன
தொடர்பில் சர்வதேசப் புலன் விசாரணைகளை மேற்கொள்ள ஆணையிடுக,” என்று அந்த
மடல் கோரியிருந்தது. (இணைப்பு 4 ஐப் பார்க்க)

3. இந்தியாவிடமும் அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிடமும் ஈழத்தமிழர் தேசம் தன்னை
நோக்கித் தனிவேறான வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிக்குமாறும், அதிலும்
குறிப்பாக, முறைகேடான ஒற்றையாட்சி இனவழிப்பு அரசான சிறலங்காவிலிருந்து தம்மை
வேறுபடுத்திப் பார்க்கும் வெளியுறவு அணுகுமுறையைத் தழுவிக் கொள்ளுமாறும்
ஈழத்தமிழர்கள் வேண்டுகின்றனர்.
ஈழத் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு, அவர்களின் ஜனநாயக ஆணை இல்லாது ஒருதலைப்
பட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் யாப்புகளின் வழிவந்த ஒற்றையாட்சி
அரசானது தமிழர்களின் பார்வையில் முறைகேடானதும் மக்களாட்சி முறையில் ஆணை
பெறப்படாத ஒன்றுமாகும். ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு மக்கள் என்ற வகையில் ஒற்றையாட்சி
அரசியலமைப்பினால் திணிக்கப்படும் ஆட்சிமுறைமையில் பங்குபற்றுமாறு தமிழர்கள்
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆக்கிரமித்துள்ள ஒற்றையாட்சித் தேர்தல்முறைக்குள்
தேர்தெடுக்கப்பட்ட தேர்தல் அரசியற் தமிழ்ப் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் வேணவாவைப்
பிரதிநிதித்துவம் ஏகபிரதிநிதிகள் எனக் கொள்ளப்பட முடியாதவர்களாவர். எனவே,
உண்மையான வெளியுறவுக் கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்கவேண்டுமாயின், அது
பாரம்பரியத் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களையும், தமிழ்பேசும் மக்களையும்,
கடல்கடந்து இந்தியாவுக்குள் வாழும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள்
ஆகிய அனைத்துப் பரிமாணங்களையும் ஒருசேர உள்ளடக்கி, ஈழத்தமிழ்த் தேசம் என்பதாகக்
கணித்துக் கையாளுவதே சாலச் சிறந்தது.
4. ஈழத் தமிழர்களின் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையை இந்தியாவும் ஏனைய
ஐ.நா. உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கவேண்டும் எனக் கோரிநிற்கிறார்கள். முறைகேடான
ஒற்றையாட்சி இனவழிப்புச் சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்குள் எல்லைப்படுத்தப்படாத ஓர்
ஆரம்பப் புள்ளியில் இருந்தே அர்த்தமுள்ள ஓர் அரசியற்தீர்வு நோக்கிய சமரச முயற்சி
ஆரம்பிக்கப்படலாம்.
மேலும் அத்தகைய சமரசப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச மத்தியஸ்தத்துடன்
மேற்கொள்ளப்படுவதுடன் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வானது சுயநிர்ணய
உரிமையின் உரித்தினை உறுதிசெய்வதாகவும் அமைதல் வேண்டும். ஈழத்தமிழர்கள் தம்மை
வடக்கு-கிழக்கின் பாhம்பரியத் தமிழர் தாயகத்தின் தனித்துவமான, மதசார்பற்ற,
முழுமையுள்ள ஒரு தேசமாக இந்தியாவும் ஏனைய அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும்
ஏற்றுக் கையாளவேண்டும் எனக் கோரிநிற்கின்றனர்.
இதேவேளை பாரம்பரியத் தமிழர் தாயகத்திற்கு வெளியே, தென்னிலங்கையில் வாழக்கூடிய
தமிழ்பேசும் மக்கள் ஒரு சிறுபான்மையினராக அமைகிறார்கள்.
ஈழத்தமிழர் என்னும் அடையாளம் முழுமையானது. அதாவது ஐரோப்பிய காலனித்துவ
காலத்திலும் அதற்கு முன்னரும் இந்தியாவிலிருந்து வந்து குடியமர்ந்தவர்களும் அவர்களின்
சுயவிருப்பு அடிப்படையில் வடக்கு கிழக்கில் குடியமர வைக்கப்படலாம் என இதனால்
அர்த்தப்படும்.
‘ஈழத்தின் காந்தி’ என மதிக்கப்பட்ட மறைந்த தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின்
தலைமையில் 1976 இல் நடாத்தப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின் படி
ஈழத்தமிழர் தேசமானது அனைவரையும் உள்ளடக்கிய மதசார்பற்ற நாடாகும். இந்த
வரைவிலக்கணத்தினை மலையகத்தின் இந்திய வம்சாவழிக் கட்சிகளுட்பட்ட அனைத்துத்
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளும் ஏற்றிருந்தன.

ஈழத் தமிழர்களின் தேசமானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களுடனும்
தமிழர் தாயகத்தினைப் பகிர்ந்து கொள்கிறது. இதனால் இது ‘தமிழ் பேசும் மக்களின்
பாரம்பரியத் தாயகம்’ என அழைக்கப்படுகிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வரையறைப்படுத்தப்பட்டபடியான எமது தனித்துவ
அடையாளமும், அரசியல் அபிலாசைகளும் 1977 ஆவது ஆண்டில் நடைபெற்ற சுயாதீனமான
பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்களாணையைப் பெற்றிருந்தது. 1977 இன் பின்னர்
நடாத்தப்பட்டுள்ள அத்தனை தேர்தல்களும் தமிழ் மக்களின் ஜனநாயக மக்களாணையின்
பாற்பட்ட அரசியல் அபிலாசையை மறுக்கும் ஆறாவது திருத்தச்சட்டம் எனப்பட்ட
திருத்தத்தினை முன்வைத்து நடாத்தப்பட்டமையால் அவை தமிழர்களின் அரசியல்
வேணவாவைப் பொறுத்தவரை ஜனநாயகமற்ற கருத்துச்சுதந்திரமற்ற தேர்தல்களாகும். அந்தத்
திருத்தச்சட்டமானது தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான கருத்துச்
சுதந்திரத்தினை அப்பட்டமாக மீறிய ஒன்று. இனப்படுகொலைகள் மற்றும் யுத்தம் காரணமாக
ஈழத்தமிழர்கள் தமது சொந்தப் பூமியிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு உலகின்
பலபாகங்களிலும் வாழ்வதற்கு இதுவே வழிகோலியது. ஆதலால், உலகெங்கும்
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் எமது தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத உட்கூறு
ஆவர், இதுபற்றியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.
(இணைப்பு 5 ஐப் பார்க்க)
5. இந்தியாவும் ஏனைய ஐ.நா உறுப்பு நாடுகளும் தத்தமது நாடுகளின் பிரதேச எல்லைக்கு
அப்பாலும் இடம்பெறக்கூடிய இனப்படுகொலை குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான
கடப்பாடு கொண்டவை என்பதை ஈழத்தமிழர்கள் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
அயல்நாடு ஒன்றின் இயலாநிலை, மற்றும் அர்த்தமுள்ள தீர்வு இல்லாமை, அத்துடன் நீண்ட
காலமாக இடம்பெற்றுவரும் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலின்மை
என்பவற்றின் பின்புலத்தில் சுதந்திர தமிழ் ஈழத்தின் அங்கீகாரம் நியாயப்படுத்தப்படுகிறது.
அண்மைய வரலாற்றில் ‘மீறவொண்ணா வழமை’ என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சுயநிர்ணய
உரிமையானது மற்றுமொரு மீறவொண்ணா வழமையான இனவழிப்பைத் தடுப்பதற்கும்
தண்டிப்பதற்குமான கடமையோடும் சேர்த்து நோக்கப்படவேண்டியது.
ஈழத் தமிழர் தேசமானது தன்மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான
இறுதி வழிமுறையான ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து மார்க்கங்களையும்
ஏற்கனவே செலவாக்கித் தீர்த்துவிட்ட நிலையில் உள்ளது.
எனவே, அர்த்தமுள்ளவையும் சர்வதேச மத்தியஸ்தத்துடனான சமரச முயற்சிகளும் அற்றநிலை
தொடரும் இந்தச் சூழலில் சுதந்திரத் தமிழீழ அரசொன்றினை உருவாக்குவதற்கு இந்தியாவும்
ஏனைய ஐ.நா. உறுப்பு நாடுகளும் முன்வருவது அவசியம். இது சிறீலங்கா அரசாங்கத்தை
நோக்கிய அறுதி எச்சரிக்கையாகவும் கருதப்படலாம்.
6. எந்தளவு சிறிதான ஒரு தேசமாய் இருப்பினும் ஈழத்தமிழர்கள் கேந்திர நலன்சார் கொண்டு-
கொடுப்புப் பரஸ்பர-பாங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரிநிற்கின்றார்கள்.
மேற்கு வங்கத்தின் கோரிகைக்கு இணங்கி இந்தியா வங்காள தேசத்தை விடுவித்திருந்தது.
ஆனால் ஈழத்தமிழரின் கோரிக்கை தொடர்பில் தமிழ் நாட்டின் விருப்புக்கு முரணாகவே
இந்தியா செயற்பட்டுவந்திருக்கிறது.
அதுமட்டுன்றித் தமிழ்நாட்டு அரசினால் ஈழத்தமிழர் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த
சட்டசபை மக்களாட்சித் தீர்மானம் தொடர்பிலும் புதுடில்லி ஆட்சிபீடம் இதுவரை
மதிப்பளித்துச் செயற்பட்டிருக்கவில்லை.

இந்த நிலை தொடர்வது, அதாவது புதுடில்லியிடமிருந்து ஒரு மீளாய்வு செய்யப்பட்ட
அணுகுமுறை இல்லாத நிலை தொடர்வது, சிறிலங்கா ஈழத்தமிழ்த் தேசத்துக்கு எதிராக
நடாத்திய இனப்படுகொலை விடயத்தில் இந்திய உடந்தை இருந்ததா என்பதை எண்பிக்கும்
வகையிலான அறம்சார் அணிதிரட்டல்களைச் செய்யவேண்டிய தெரிவையே ஈழத்தமிழரிடம்
விட்டுவைக்கும். இதுவே இறுதித் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், ஈழத்தமிழர் தேசம் எவ்வாறு
முன்னர் ஐ.பி.கே.எவ் படைகளை எதிர்கொண்டதோ அதே திட்பத்தோடும் ஊக்கத்தோடும்,
அந்நிலையை எதிர்கொள்ளும். ஒரு நீண்ட இன அழிப்பை எதிர்கொள்ளும் தேசமாக
ஈழத்தமிழர் முழுமையான கட்டமைக்கப்பட்ட அழிவைத் தமது பாரம்பரியத் தாயகத்திற்
சந்திக்க முன்னர், இன அழிப்புக்கு உடந்தையாயிருந்த தரப்புகளுக்கெதிராக அற
நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர வேறு தெரிவுகள் இராது.
சுமார் ஒரு மில்லியன் வரையிலான ஈழத்தமிழ் வம்சாவழியினர் உலகின் பல பாகங்களுக்கும்
புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களுள் ஒரு இலட்சம் பேர்களுக்கும் அதிகமானோர் இந்திய
மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளனர்.
சிறிலங்கா ஒற்றையாட்சியரசின் சிங்களப் பேரினவாத இன அழிப்பு எத்தனங்களில் தப்பித்துக்
கொண்டவர்களாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இன்னும் தீவில் தமது
தேசத்தின் மீதான அழித்தொழிப்பு நிலையை எதிர்கொண்டுள்ளனர். அவர்தம் நிலங்கள்
பறிக்கப்படுவதுடன் சிறிலங்கா அரசானது வடக்கு கிழக்கின் பாரம்பரியத் தாயகத்தின்,
அதாவது தமிழீழம் என அறியப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தாயகத்தின் நிலத்
தொடர்பையும் அறுத்து வருகிறது.
2009 இல் முட்கம்பிவேலிச் சித்திரவதை முகாம்களில் ஈழத்தமிழர்கள் படுகொலைத்
தாக்குதல்கள், அடிமைத்தனச் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் பின்னர்
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதி மக்கள் இனவழிப்புக் குற்றத்தின் அடிப்படைகளான
மொழி, மத, மரபுரிமை, ஆட்புலம் என்பன உள்ளிட்ட தீவிர கட்டமைப்பு மற்றும் பண்பாட்டு
இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இவ்வாறான இனவழிப்பைப் பின்னிருந்து தூண்டும் வலுச்சக்தியாக செயற்படுவது “மகாவம்ச
மனோநிலை” என அறியப்படும் தீவிர சிங்கள தேரவாத பௌத்த சித்தாந்தமாகும். இந்தச்
சித்தாந்தமானது அரசின் யாப்பிலே திட்டமிடப்பட்டு படைத்துறை மற்றும் ஒற்றையாட்சி
முறையின் கீழான அரச பொறியமைப்புகள் அனைத்திலும் நிறுவன மற்றும் கட்டமைப்பு
ரீதியாகப் பொதியப் பட்டுள்ளது. இந்த ஒற்றையாட்சி முறையானது பிரித்தானிய காலனித்துவ
அரசியலாட்சியினால் ஈழத்தமிழர்களின் ஜனநாயக ரீதியான மக்களாணை
பெறப்படாமலேயே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த
சிங்களப் பேரினவாத அரசுகளாலும் ஆட்சியாளர்களாலும், குறிப்பாக 1972 இன் பின்னர்
வந்த கட்டமைப்பு மாற்றங்கடு படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியக்
குடியரசு போலன்றி சிறிலங்கா குடியரசானது அதிகாரபூர்வமாகவே மதச்சார்பு
நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதுடன் தமிழர்களை இன அழிப்புச் செய்யும் நோக்கிலான
திட்ட அமைப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சிறிலங்கா என்னும் சொற்தொடரின் மூலமுதல் அர்த்தமானது நற்சகுனத்திற்குகந்த தீவு
என்பதாக நேரடிப் பொருள்படினும், இதன் உட்கிடக்கை ‘சிங்கள பௌத்தர்களுக்கென
இறைத்தெரிவான தீவு’ என்றே பொருள்கோடப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை
சிறிலங்கா அரசின் பெயர், மற்றும் தேசியக்கொடி தொடக்கம் பாராளுமன்ற முறைமை ஈறான
அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிர்வாகத் தொகுதிகளுடன் நிறைவேற்று
அதிகாரங்கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், அதிகாரிகள்
வரையிலான அனைத்துமே ஒறுத்தொதுக்கும் அரச கொள்கைகளை அமுலாக்கம்

செய்வதெற்கென்றே நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கும் முகவர் நிலையங்கள் ஆகும்.
இனப்படுகொலைசார் கொள்கைகளை அவ்வப்போது நடைமுறையிலுள்ள பிராந்திய,
சர்வதேச ஒழுங்கு முறைகளைப் பயன்படுத்தி, அவற்றுக்கு அமைவான போலிவாத
நுணுக்கங்களுடன் மட்டுமல்ல அவ்வப்போது அப்பட்டமாகவே தென்படுபவையாகவும்
அமையப் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போர், பனிப்போர், பனிப்போரின் பின்னரான
காலங்களில் தமிழர்கள் இவற்றைத் தமது தாயகத்தின் மீதான சிங்கள இனவெறியர்களின்
ஆட்சியில் கண்டு வந்துள்ளார்கள். தற்போதைய “இந்தோ பசுபிக்” சகாப்தத்திலும் இதே
போக்கையே காண்கிறோம்.
தமிழர்களின் அஹிம்சை முறையிலான போராட்டங்கள் ஆட்சியதிகாரப் பங்கீட்டு விடயத்தில்
அர்த்தமுள்ள விளைவுகள் எதனையும் தந்திருக்கவில்லை. சமஸ்டி முறைமையை சிங்களவர்கள்
பிரிவினைவாதம் என்பதாகவே புரிந்து கொண்டனர். ஈற்றில் பிரிவினையே இறுதியான வழி
என்னும் நிலை தோற்றம் பெற்று ஈழத்தமிழர்கள் ஆயுதவழிப் போராட்டம் நடாத்திய போது
உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பினும் தமது கட்டமைப்புரீதியான நலன்களையாதல் அவர்களால்
வெற்றிகரமாகப் பாதுகாக்க முடிந்தது.
ஆயுதப் போராட்டமே சர்வதேச அனுசரணையுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை 2002 ஆம்
ஆண்டில் கொண்டுவந்தது.
விதிவிலக்கான ஆற்றலோடு செயலாற்றிய இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மறைந்த
பிராஜேஸ் மிஸ்ரா அவர்கள், இந்தப் போர்நிறுத்த முயற்சிக்குப் பின்னால் திரைமறைவில்
ஈடுபட்டிருந்தார். அமைதி முயற்சி நல்லதோர் ஆரம்பத்தைக் கண்டது. ஆனால், அவருக்குப்
பின்னர் பதவியேற்ற மறைந்த ஜே. என் தீக்சிற் என்பவர் அந்த முயற்சியை எதிர்மாறான
திசைக்குத் திருப்பினார். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அமைதிமுயற்சி தொடர்பில் தனக்கு
முன்னையவர் ஆற்றிய ஆதரவான வகிபாகம் பற்றி தீக்சிற் ஆச்சரியம் அடைந்திருந்தாகவும்
அறியமுடிகிறது.
ஜே.என். தீக்சிற் பொறுப்பு வகித்த காலத்தின் இந்திய வெளியுறவு கொள்கையில் காணப்பட்ட
தவறான வழிநடத்தற் போக்குகள் பற்றி மேன்மை தங்கிய தாங்கள் நன்கறிந்தவர் என்றும் அது
தொடர்பில் எம்மோடு உடன்படுவீர்கள் என்றும் நாம் கருதுகிறோம்.
எது எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலை பற்றியும் நாம் கவலையடைய
ஆரம்பித்துள்ளோம். இதனாலேயே இந்தத்தீவு நோக்கியதும் தமிழர்கள் நோக்கியதுமான
இந்திய வெளியுறவுக் கொள்கையின் மீளாய்வினைக் கோரி இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு
வரைகிறோம்.
மேன்மை தங்கிய தாங்கள் 2015 மார்ச் மாதத்தில் ஒரு தடவையும் பின்னர் 2019 யூன் மாதத்தில்
இன்னுமொரு தடவையுமாக இலங்கைத் தீவிற்கு விஜயம் செய்துள்ளீர்கள். தாங்கள்
இந்தியாவை உதாரணமாக கொண்ட கூட்டுறவுச்சமஸ்டி முறையொன்றினை
எடுத்துக்காட்டாகக் கொண்டு செயற்படலாம் என்னும் வகையில் சிறிலங்காவின் ஆட்சித்
தலைவர்களுக்குப் பூடகமாக ஆலோசனை கூறியதையும் நாம் அறிவோம்.
மேற்படி ஆலோசனையைத் தாங்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்து ஏழு
வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் சிங்களத் தலைவர்கள் இதுவரை அதனை அனுசரிக்க
முன்வரவில்லை. அந்த ஆலோசனையை அவர்கள் முற்றாகப் புறந்தள்ளி விட்டனர்.
தங்களது முதல் விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.
விக்னேஸ்வரன் அவர்களை 14 மார்ச் 2015 நாளன்று சந்தித்திருந்தீர்கள். அரசியல் தீர்வு
ஒன்றைக் காணும் விடயத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் தங்களிடம் விநயமாகக்

கோடிகாட்டியிருந்த விடயத்தினை தங்களுக்கு ஒருமுறை மீண்டும் நினைவூட்ட
அனுமதியுங்கள். “நடப்பிலுள்ள இலங்கை அரசின் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும்
நெறிமுறைகள் என்பவற்றுக்கு உட்படாத நிலையில் இருந்து, அதாவது அவற்றுக்கும்
அப்பாற்பட்ட புதுமையானதும் புத்தாக்கமானதுமான ஒரு நிலையிலிருந்தவாறு, வடக்கு,
கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் இனச் சிக்கல் மற்றும் போருக்கு பின்னான
தேவைகள் மற்றும் முந்துரிமைகள் என்பவற்றை கருத்தில் கொள்ளமுடிந்தால் மாத்திரமே,
ஆக்கவூர்வமான முறையில் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணமுடியும்.”
தற்போது, களநிலை மேலும் சீர்கெட்டுவிட்டது. எந்தவிதமான வாக்குறுதிகளோ, அரசியல்
யாப்பு தொடர்பான உள்நாட்டுப் போக்குகளோ, அன்றேல் சர்வதேச பொறுப்புக் கூறல்
முன்னெடுப்புகளோ, எவையேனும் ஈழத் தமிழர்களினதோ, வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும்
மக்களினதோ அபிலாசைகளை உரிய முக்கியத்துவத்துடன் கையாளும் வகையில்
ஆற்றுப்படுத்தப்படவில்லை.
அதுமடடுமன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பொரும்பான்மையைக்
கொண்டுள்ள சிங்களத் தலைமையானது ஒற்றையாட்சி முறைமையை மேலும் பலப்படுத்தும்
வகையில் புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவரவுள்ளதான ஆயத்தத்தில் முழுமூச்சாக
இறங்கியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனப் பெயர் கொண்டுள்ள இந்தச்
செயற்திட்டமானது ஈழத்தமிழர்கள் விடயத்திலும் நாட்டின் சிங்கள பௌத்தர்கள் அல்லாத பிற
பிரிவினர் விடயத்திலும் அப்பட்டமான பகையுணர்வை வெளிக்காட்டி நிற்கின்றது.
இதேவேளை, சிறிலங்கா அரசானது பிற வல்லரசுகளுடன், குறிப்பாகச் சீனாவுடன்
ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டிவருகின்றது. தனது சீன ஆதரவுத்
தோற்றப்பாட்டைப் பயன்படுத்திப் பேரம்பேசற் போட்டியில் ஈடுபடக்கூடிய பிராந்திய மற்றும்
உலக வல்லரசுகளின் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட மனித மற்றும் கூட்டு
உரிமைகளுக்கான சர்வதேசக் கவனத்தைத் தனது ‘மகாவம்ச மனோநிலை’ எனும் நிலையில்
நின்றவாறு மீண்டும் விலக்கிக்கொள்ள முழுப்பிரயத்தனம் மேற்கொள்கிறது.
கொழும்பு அரசானது 2017 இல் தான் சீனாவிடமிருந்து அதுவரை பெற்றுக்கொண்ட கடனின்
ஒரு பகுதியை மீள்செலுத்த இயலாத நிலையில் மாற்றீடாக அம்பாந்தோட்டைத்
துறைமுகத்தை 99 வருடங்கள் சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கியமையானது 1987 இன்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஒட்டி அப்போதைய இந்திய மற்றும் சிறிலங்கா அரச
தலைவர்களிடையே ஏற்பட்டிருந்த புரிந்துணர்வை முற்றிலுமாக மீறும் ஒரு செயலாகும்.
கொழும்புத் துறைமுகநகர் மற்றும் தீவுகள் விடயத்திலும் இந்தப் புரிந்துணர்வு
மீறப்பட்டுவருகிறது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கான பிரதான காரணமாகக்
கூறப்பட்டிருந்த விடயங்களான, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினைக்
கொண்டுவருதல் மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் மக்களுக்கான பாதுகாப்பையும்
கூட்டு உரிமைகளையும் நிலைநிறுத்துதல் என்பவை நிறைவேறாது
பெருந்தோல்வியடைந்தன.
ஆயினும், இலங்கைத் தீவிற் தமக்குத் தேவைப்படும் கேந்திர முக்கியத்துவம் சார்ந்த
நலன்களை எட்டிய பின்னர் அன்றைய இந்தியத் தலைவர்கள் ஒப்பந்தத்தின் மூலம்
எத்தரப்பின் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று வாதிட்டார்களோ அந்தத் தரப்பினரான
ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே போர்புரியும் நிலைக்குச் சென்றனர்.

இறுதியில், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதிலும்
தோல்வியையே கண்டுள்ளது.
2017 இல், சரியாக 30 ஆண்டுகளின் பின்னர், ஏற்கனவே சவப்பெட்டியில் போடப்பட்ட
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கான இறுதி ஆணியை சிறிலங்கா அரசே இறுக்கியது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, இன அழிப்புச் சிறிலங்கா இந்தியாவுக்கு
உறுதியளித்த பிற பொறுப்புக்களும் ஒப்பந்தங்களும் கூட அந்த அரசால் மீறப்பட்டே
வந்துள்ளன. அதனால் இந்தியா தோல்வியடையும் தரப்பாகவும், ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட
அழிவுக்கு உட்படுத்தப்பட்டு பலியாக்கப்படும் தரப்பு என்பதுமே இறுதி விளைவாகத்
தொடர்ந்தும் ஏற்பட்டுவருகிறது.
இந்தியாவுக்கு எதிராகச் சிறிலங்கா அரசு தனது கடப்பாடுகளை மீறியுள்ளது என்பதற்கு வேறு
இரண்டு உதாரணங்களையும் இங்கு சுட்டிக்காட்டலாம்: 1971 இல் இலங்கை தனது
வான்பரப்பை பாகிஸ்தானின் பயன்பாட்டிற்கு அனுமதித்தது. வங்காளதேசத்தின் சுதந்திரப்
போரின் போது (இந்திய பாகிஸ்தான் போர் 1971) பாகிஸ்தானின் சீ-130 ரக போர்
விமானங்களுக்கு எரிபொருளை வழங்கியது.
1974 மற்றும் 1976 இன் இந்திய சிறிலங்கா கடல்சார் ஒப்பந்தங்கள் தமிழரின் வரலாற்று
நீர்ப்பரப்பில் உள்ள கச்சதீவை முறைகேடான சிறிலங்கா அரசுக்குத் தாரை வார்த்தது. இதன்
விளைவு நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு இந்திய மீனவர்கள் சிறிலங்காவின் சிங்களப்
கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.
தனக்கான கால, மற்றும் விடயதானப் பரப்புக்கான அரசியல் வெளியைத் தனது தேவைக்குத்
தக்கபடி இந்தியாவிடம் பெற்று, அதைத் தனக்குப் பயன்படுத்தி தனக்குத் தேவையான
வெற்றியை அடையும் தரப்பாக, ஒரு வெற்றியாளராகத், தன்னை சிறிலங்கா அரசு
எப்பொழுதுமே நிலைநிறுத்தி வந்துள்ளது. தனது கேந்திர அமைவிடத்தினை இந்தியாவுக்கு
எதிரான துருப்புச் சீட்டாகவும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக்கான அனுமதிச்
சீட்டாகவும் இலங்கை பயன்படுத்திவருகிறது.
ஒவ்வொரு முக்கிய திருப்பத்தின் போதும் தனக்குத் தேவைப்படும் இந்தியாவின்
துணையாதரவைப் பெற்றுவிட்டு, கொழும்பு அரசானது படுமோசமான மீறல்களைச் செய்து,
தமிழர் மீதான இன அழிப்பைக் கட்டுப்பாடின்றித் தொடர்ந்துவருகிறது.
தற்போது மீண்டும், சிறிலங்கா அரசானது தனது மட்டுமீறிய ஒற்றையாட்சிச்
செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் இந்தியாவின் மறைமுக ஆசியைப் பெற்றுவிட்டு,
புதுடில்லியின் வெளியுறவுக் கொள்கையின் அனுகூலங்களைத் தனக்குரிய வகையில் மட்டும்
பயன்படுத்த முனைகிறது.
கொழும்பு தனது இன அழிப்புச் சார்ந்த அரசவகைமுறையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத்
தேவைப்படும் நிதியீட்டத்தை இந்தியாவிடமும் ஏனைய குவாட் (Quad) பங்காளி
நாடுகளிடமும் பெற்றுக் கொண்டு தனது நிதிப்பொறிவினை சரிசெய்துகொள்ள
எத்தனிக்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழத்தின் தலைநகரமும் சிங்களக்
குடியேற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதுமான திருகோணமலையின் கேந்திர
முக்கியத்துவமான வளங்களுக்கான நுழைவனுமதியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய
துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளுக்கான நுழைவனுமதியையும் குவாட் அமைப்பின்
பங்காளிகளுக்கு வழங்கி, கொழும்பானது 2022 ஆம் ஆண்டில் கடுமையானதொரு புவிசார்
அரசியற் சமனமாக்கல் ஆட்டத்தை ஆடித் தனக்குச் சார்பாக நிலைமையைப்
பயன்படுத்திக்கொள்ள விழைகிறது.

குவாட் பங்காளிகளும் ஐக்கிய இராச்சியமும் சீனக் காரணியை கருத்திற் கொண்டு இதற்கு
இடம ளிக்கும் வகையில் ஒத்திசைந்து செயற்பட விழையும் ஆபத்துப் பற்றி தமிழர்கள் கவலை
கொண்டுள்ளனர்.
தூண்டலுக்கான காரணிகளுக்கு அப்பால், கடந்த காலங்களில் தான் சந்தித்த இழப்புகளாக
இந்தியாவால் உணரமுடிந்த இழப்புகளாயினும் சரி, அதேபோன்று எதிர்காலத்தில்
இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளாயினும் சரி, இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய
பொருட்டற்றவையாகவும் நீண்டகால ஓட்டத்தில் சுதாகரித்துச் சீர்படுத்திக்
கொள்ளக்கூடியவையாகவும் இருக்கக்கூடும். ஆனால், சிறிலங்காவால் தவறான நோக்குடன்
தந்திரோபாய ரீதியாக அணுகப்பட்டு அவ்வப்போது இந்தியா கண்டுவரும் பின்னடைவுகள்,
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, தீவில் தமது இருப்பே அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தைத்
எதிர்நோக்கும் ஒரு மக்கள் என்றவகையில், சொல்லொணாப் பின்விளைவுகளை
உண்டுபண்ணுவதாக இருக்கும்.
இதனால், இந்து சமுத்திரத்திலுள்ள நியாயபூர்வமான ஓர் அரசான இந்தியாவின் வெளியுறவு
நலன்களோடு, நியாயபூர்வமற்ற ஓர் அரசான சிறிலங்காவின் நலன்களும் ஒன்றிணைந்து இரு
அரசுகளின் கூட்டு நிகழ்ச்சிநிரலாக வெளிப்படுமிடத்து, அந்தப் போக்கு ஈழத்தமிழர்களின்
வேணவாவுடனும் கூட்டுரிமைகளுடனும் முரண்நிலையைத் தோற்றுவித்துப் பெரும்
சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மேன்மை தங்கிய தங்களின் தலைமையிலான இந்திய
அரசாங்கத்தினதும், இதர ஞரயனசடையவநசயட ளுநஉரசவைல னுயைடழபரந
நாடுகளினதும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தினதும் சமீபத்தைய போக்குகள் இந்தச்
சங்கடத்தை எமக்கு உணர்த்துகின்றன. இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய
இராச்சியமே எமது மூலப் பிரச்சனையின் தோற்றுவாய்க்குப் பொறுப்பான நாடுமாகும்.
இந்தச் சூழலிலேயே, மாற்று அணுகுமுறை எதுவும் அற்ற நிலையில், நேரடியாகவே,
மாட்சிமைக்குரிய தங்களின் நேரடிக் கவனத்திற்கு இந்த விடயங்களைக் கொண்டுவருகிறோம்.
இத்தகைய பின்புலத்திலேதான் எமது பாரம்பரியத் தாயகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளின்
ஏழு தலைவர்கள் தங்களுக்குக் கூட்டாக 29 டிசம்பர் 2021 தேதியிட்டு ஒரு கடிதத்தை எழுதி
அனுப்பியிருக்கிறார்கள். அக்கடிதத்திலே ஈழத்தமிழர்கள் தொடர்பாகப் பின்வருமாறு
கோரப்பட்டுள்ளது: “தமிழ் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தும்
வகையில் தம் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் கண்ணியத்துடனும், அமைதியாகவும்
பாதுகாப்பாகவும், ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டிற்குள் ஏற்படுத்தப்படும் அமைப்பில்
வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும்.”
கூர்மையாகத் தமிழர்களின் சமஸ்டிக்கோரிக்கையை வெளிப்படுத்தத் தவறினாலும் இந்தக்
கூட்டுக் கடிதம் சமஸ்டித் தீர்வையே பல இடங்களிற் கோடிகாட்டுகின்றது. அதேவேளை,
தமிழர்களின் ஜனநாயக அபிலாசைகளைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி
கண்டுபோயுள்ள 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தம் மற்றும் 13 ஆம் அரசியலமைப்புத்
திருத்தம் பற்றியும் அவர்களின் கடிதம் சிலாகிக்கிறது.
ஆனால், சிறிலங்கா அரசோ மறுபுறம் ஒற்றையாட்சியை மேலும் கடுமைப்படுத்தும்
வகையிலான புதிய ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவந்து, தற்போதுள்ள
அரசியலமைப்பையும் மாற்றிவிடும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், அந்த
அரசினால் செயற்பாட்டிலிருந்து ஒதுக்கிவிடப்பட்டு ஏற்கனவே தோற்றுப்போயிருக்கும்
தற்போதைய அரசியலமைப்பில் இருக்கும் திருத்தம் ஒன்றை அமுல்படுத்த அந்த அரசுக்கு
அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவைக் கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பதிலாக, சிறிலங்காவின் போக்கு மற்றும் தமிழர் தொடர்பான நிலைப்பாடுகளை ஆழ அறிந்து,
அவற்றைத் தகுந்த முறையில் மீளாய்வு செய்து, மாட்சிமைக்குரிய தங்களது வெளியுறவுக்
கொள்கை சார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளக் கோரும் வகையிலும் அர்த்தமுள்ள ஒரு
தீர்வைக் காணும் வகையிலுமான ஈடுபாட்டுக்கான ஆரம்பப் புள்ளியைக் கருவூலமாக்க என்ன
செய்யவேண்டும், அதை எங்கு நோக்கிப் பயணிக்கச் செய்யவேண்டும் என்பதையுமல்லவா
சுட்டிக் காட்டியிருத்தல் வேண்டும்? சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கமானது,
ஈழத்தமிழர்களின் தொகுதிவாரியான உறுப்பினர்களுடனோ, புலம் பெயர்ந்து வாழும்
ஈழத்தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடப்பட்டதல்ல. இந்த இரு
பகுதியினருமே ஈழத்தமிழர் தேசியத்தின் கூட்டு உரிமையாளர்கள் ஆவர். அதுமட்டுமன்றி,
கடிதத்தில் ஒப்பமிட்ட எழுவரில், மூவர் மக்கள் தொகுதிகளால் தேர்தலிற் தெரிவு
செய்யப்பட்டவர்களும் அல்லர்.
நேசக் கூட்டுத் தீர்வே சிறந்த தீர்வு என வாதிடும் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அவர்களும்
சர்ச்சைக்குரிய கடிதத்தில் ஒப்பமிட்டவர்களில் ஒருவர் என்பது உண்மையில்
பரிதாபத்திற்குரியது.
ஊடக வாயிலாகத் தெரியவரும் செய்திகளின் படி மேற்குறித்த கடிதத்தின் வரைபானது
சிறிலங்கா ராஜதந்திரிகளின் தாக்கத்துக்கு உள்ளாகிய நிலையிலோ, தேவைக்கொவ்வாத
1987 இந்திய இலங்கை ஒப்பந்த மரபிலேயே இன்றும் கருவூன்றிச் சிந்திக்கும் இந்திய
ஆலோசகர்களின் தாக்கத்துக்கும் உள்ளாகிய நிலையிலோ கூடத் தயாரிக்கப்பட்டிருக்கும்
வாய்ப்பும் உள்ளது.
அதுமட்டுமல்ல, மேற்குறித்த கடிதமானது ஈழத்தமிழர் மீதான சிறிலங்காவின் இனவழிப்பு
விவகாரத்தினைச் சர்வதேசப் புலன் விசாரனைக்குக் கொண்டுவரல் வேண்டும் என்ற
வேண்டுகோளையும் மேன்மைக்குரிய தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரத் தவறியுள்ளது.
ஐ.நா. தலைமையிலான மனிதவுரிமைச் செயன்முறைகளை இன அழிப்பு எனும்
குற்றச்சாட்டை விசாரிக்கச் செய்யும் திசையை நோக்கித் திருப்புவதற்கான இந்தியாவின்
வகிபாகத்தைக் கோராமலும் அக்கடிதம் தவிர்த்திருக்கிறது.
சிறிலங்காவானது வடக்கு-கிழக்கின் மீது தனது ஒற்றையாட்சி அரசியல் யாப்பினைத்
திணிப்பதை விடுத்து சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு சமரசப் பேச்சுக்குத் தன்னை
ஈடுபடுத்த முன்வரவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதே காலத்தின்
தேவையாகும். சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கு அப்பாற்பட்ட ஓர்
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையே அந்தச் சமரச முயற்சிக்கான ஆரம்பப்புள்ளியாக
எமக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய ஓர் ஏற்பாடே கொழும்பின் ஒற்றையாட்சி மற்றும் இன
அழிப்புச் சார்ந்த வடிகட்டற் செயற்பாடுகளுக்கு உள்ளாகாது புலம் பெயர் தமிழர்கள் தமது
பாரம்பரியத் தாயகத்தின் புனர்நிர்மாணம், மேம்பாடு என்பவற்றில் அர்த்தமுள்ள வகையிற்
பங்கேற்கவும் இடமளிக்கும்.
இதேவேளை, தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு இருக்கும் அரச பொறுப்பினை உலக
நீதிமன்றில் புலன் விசாரணைக்கு உட்படுத்துவது மட்டுமன்றி, ஏற்கனவே
நிலைநிறுத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள் என்ற
இருவகைக் காண்புகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்திவிடாது இன அழிப்புக் குற்றச்
செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீதும் தக்க குற்றவியற் புலன் விசாரணைகளை ஐ.நா.
வினால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேசக் குற்றவியற் தீர்ப்பாயத்தில் மேற்கொண்டு, உரிய
தண்டனைகளை வழங்குவதும் மிகவும் முக்கியமாகிறது.

ஓர் அயல்நாடு என்ற வகையிலும், பிராந்திய வல்லரசு என்ற வகையிலும் தமிழின அழிப்புப்
பற்றிய தாராளமான விளக்கத்தினை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும், தமிழின
அழிப்புக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கத்
தவறியுள்ளது. சிறிலங்கா தொடர்பிலும் தமிழர்கள் தொடர்பிலும்
மீளாய்வுசெய்யப்படவேண்டிய இந்திய வெளியுறவுக் கொள்கை இதையும் கருத்திற்கொள்வது
அவசியமாகிறது.
1983 இல் அப்போதைய இந்தியப் பிரதமராக விளங்கிய சிறீமதி இந்திராகாந்தி அவர்கள்
இலங்கைத் தீவில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளை இன அழிப்பு என்று 1983 ஆகஸ்ட் 16
ஆம் நாளன்று தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார். திருமதி காந்தி இந்திய
நாடாளுமன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நானும், எனது அரசாங்கமும், எனது கட்சியும்
இங்கு உரையாற்றிய அனைவரையும் போல் ஆழ்ந்த துயரமடைந்துள்ளோம். இன அழிப்பை
நாம் கண்டித்தோம், கண்டிக்கின்றோம், சிறிலங்காவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது
அநீதியான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் புரிந்து கொள்கிறோம். இந்த
விடயத்தில் எமது மன உணர்வுகள் எத்துணை வைராக்கியமாக இருப்பினும் ஓர் அரசாங்கமாக
நாம் பொறுமை காக்கவேண்டியுள்ளது. நாங்கள் ஆர்வமற்றவர்கள் என்பதனாலோ, தயக்கம்
காண்பிக்கிறோம் என்பதனாலோ அல்ல, எமது சொற்களும் செயல்களும் இலங்கைத்
தமிழர்களுக்கு உதவப்போகின்றனவா, அன்றேல் மேலும் தீங்கு செய்யப்போகின்றனவா
என்பதை ஒவ்வொரு கட்டத்தின் போதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.”
ஐ.நா. பொது சபையின் 74 ஆவது அமர்வில் மேன்மை தங்கிய தாங்கள் ஆற்றிய உரையின்
போது மூன்று மில்லேனிய காலப்பகுதிக்கு முந்திய தமிழ்ப் புலவரும் தத்துவவாதியுமான
கணியன் பூங்குன்றனார் பற்றிக் குறிப்பிட்டதைக் கண்டு புலம்பெயர் ஈழத்தமிழர்
உள்ளடங்கலான உலகத் தமிழர் யாவரும் பெருமையடைந்தோம். அந்தப் பூங்குன்றனார்
தமிழ்நாட்டில் வாழ்ந்த அதே சங்ககாலத்திலேயே ஈழத் தமிழரும் தமது தீவில் வாழ்ந்து
கொண்டிருந்தனர்.
தற்போதைய தீவின் சட்டநியாயாதிக்கமற்ற சிறிலங்கா அரசின் நடைமுறையிலுள்ள அரசியல்
யாப்பு (அட்டவணை 7, உறுப்புரை 157 ஆ (7) ஆம், உறுப்புரை 161(ஈ) (iii)) பாராளுமன்ற
உறுப்பினர்களை நோக்கிக் கீழ்வரும் உரைப்பகுதியை வாசித்துத் சத்தியப்பிரமாணம்
செய்யுமாறு கோருகிறது. “…………….. ஆகிய நான், இலங்கைச் சனநாயக சோசலிசக்
குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும், இலங்கையின்
ஆள்புலத்துக்குள்ளாhகத் தனி அரசு ஒன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ
மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ,
ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ,
பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்திச் சத்தியஞ்
செய்கின்றேன்.”
சிறிலங்கா அரசியலமைப்பின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஈழத்தமிழ்த் தேசத்தின் ஏக உறுப்பினர்கள் அல்லர். ஏனெனில் அவர்கள் வட்டுக்கோட்டைத்
தீர்மானத்தின் பிரகாரம் மக்களாட்சி ஆணைபெற்ற அரசியல் வேணவாவைப் பிரதிநிதித்துவம்
செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்களாவர்.
இந்தக் கடிதத்தில் அனைத்துப் பரிமாணங்களும் முழு ஆழமாக எடுத்து விளக்கப்படாவிடினும்
ஈழத்தமிழ்த் தேசத்தினர் எதிர்கொள்ளும் பாரிய மற்றும் அவசரமான விவகாரங்கள்
அனைத்தையும் மேன்மைக்குரிய தாங்கள் கருத்திலெடுத்து சிறிலங்கா தொடர்பிலும் வடக்கு-
கிழக்குத் தமிழர்கள் தொடர்பிலுமான இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பரிபூரண
மீளாய்வுக்கு உள்ளாக்குவீர்கள் என்று விநயத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தங்கள் விலைமதிப்பற்ற நேரத்திற்காக நன்றி தெரிவித்து, காத்திரமான பதிலை
எதிர்பார்க்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
எம். லோகநாதன் மருதையா
தலைவர்,
அனைத்துலக மனித உரிமை சங்கம் 

பிரான்சு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment