வடக்கு-கிழக்கு மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆணையை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்!

0 0
Read Time:17 Minute, 0 Second

ஜனாதிபதி தான் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விட அதிகமான, மிக உறுதியான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளை, தமது கொள்கைகளையும் மக்கள் ஆணையையும் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனவாத கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு, எதுவித வெட்கமோ கூச்சமோ இன்றி இந்த ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம் –
    கடந்த டிசம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றமானது ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் மீளவும் கூட்டப்பட்டிருந்தது. இதன் ஆரம்பத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை இடம்பெற்றிருந்தது. இவ்வுரை மீதான 20 ம் திகதிய விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு :-
    கனம் அவைத்தலைவர் அவர்களே,
    முன்னெப்போதுமில்லாதவாறு, பிரித்தானியர் இந்நாட்டை விட்டு வெளியேறியிருந்த காலத்திலிருந்து பார்க்கும்போது, மிக மோசமான ஒரு இருண்ட பொருளாதார நெருக்கடியான தருணத்தில் சிறிலங்கா தற்போது இருக்கிறது .
    இந்த அரசாங்கம் தனது செல்நெறியை வினைத்திறனுடையதாக, உடனடியாக மாற்றிக்கொள்ளாமல் இருக்குமானால், சிறிலங்கா வங்குரோத்து நிலையை அடையகூடிய விதத்திலேயே இந்நாட்டின் பொருண்மிய வீழ்ச்சிவீதம் அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும்.
    நீங்கள் இப்போது கடைப்பிடிக்கும் கொள்கையையும் செல்நெறியையும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வீர்களாயின், இருக்கின்ற கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாத நிலைமட்டுமல்லாது, இங்கு இருக்கின்ற மூலவளங்களையும் முற்றாக அழிக்கின்ற நிலைக்கே செல்வீர்கள்.
    இப்படியான ஒரு சூழலிலேயே ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றை ஒத்திவைத்திருந்தார்.
    ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றமானது ஜனாதிபதியால், மீளவும் கூட்டப்படுகின்றபோது, , இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி முன்வைப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
    குறிப்பாக , இன்று நாடு எதிர்கொள்ளும் மிக சிக்கலான பொருளாதார நெருக்கடி குறித்து மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழிமுறைகுறித்தும், பிரிதானியர் நாட்டை விட்டு சென்றதிலிருந்து, கடந்த 74 வருடங்களாக, சிறிலங்கா அரசு எதிர்கொள்ளும் கட்டமைப்பு சார் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், தனது கரிசனையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்த்தார்கள்.
    உண்மையில் நீங்கள் எதை நோக்கி செல்லப்போகிறீர்கள் என்பது குறித்தான அடிப்படைகள் குறித்து, ஒரு மீளாய்வு செய்யவில்லையாயின், நீங்கள் எந்தவொரு மாற்றத்தையும் கண்டுவிடப்போவதில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
    எனக்கு முன்னர் பேசிய ஒருவர், இங்கு கூறியிருந்த அல்பேர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் கூற்றை இங்கு மீள ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ‘ஒரே விடயத்தையே மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது’. நீங்கள் ஒரு மாற்றத்தை அடையவேண்டுமாயின் உண்மையில் நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.
    அந்தவகையில் , வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்கின்றவகையில், ஜனாதிபதி அவர்கள் தனது மனோநிலையை மாற்றி, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், ஒரு வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்திருந்தோம்.
    பாராளுமன்றை ஜனாதிபதி ஒத்திவைத்தபோது, இந்நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்ற சர்வதேச நெருக்கடி ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்தது.
    அதிலும், கடந்த மூன்று அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் – அல்லது தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்புக்களால் கைவிடப்பட்டிருந்த நிலையில் – இந்த நாட்டை சரியான அடித்தளம் ஒன்றில் கட்டியெழுப்ப வேண்டுமாயின், இந்த நாடு கடந்த 74 வருடங்களாக எதிர்கொள்ளும் அடிப்படையான கட்டமைப்புசார் பிரச்சினைகள் குறித்து கட்டாயமாக கவனம் செலுத்தப்பட்டு அவை தீர்க்கப்படவேண்டும்.
    வடக்கு கிழக்கு மக்கள் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துகளை இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
    ‘நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், வேறு அனைவரையும் விட ஒரு பொருளாதார உத்தரவாதத்தையே எதிர்பார்க்கிறார்கள். சிறுவர்களுக்கான சிறந்த கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சுயதொழில் முனைவோர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்பு, உரிய குடிநீர் வசதி, விவாசாயத்துக்கான நீர்ப்பாசன வசதி, வீடு, உரிய வைத்தியசாலைகள் , வீதிகள். மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையே வடக்க்கு கிழக்கு மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த வசதிகளை எந்த இனப்பாகுபாடுமின்றி செய்து கொடுப்பதே இன நல்லிணக்கத்தை அடைவற்ற்கான இந்த அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகும்’ என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி இந்த பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்;பினர்கள், தமது அரசியல் கொள்கைகளை தற்காலிகமாகவேனும் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, தமது பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
    தனக்கு கிடைத்த பிரதானமான மக்கள் ஆணை நிலையான பொருளாதார உத்தரவதத்திற்கானது என்றே ஜனாதிபதி கூறுகிறார். ஆகவே, வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்த்தரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை, தமது கொள்கைகளையும் தமக்கு மக்கள் அளித்த ஆணையையும் மறந்துவிட்டு, தன்னோடு இணைந்து பணியாற்றுமாறே அழைத்திருக்கிறார்..
    அவர் குறிப்பிடுகின்ற பாதையிலேயே, அந்த மக்கள் ஆணை குறித்தே நானும் பேச விளைகிறேன். இந்த அரசாங்கம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஏறத்தாள 60 சதவீத வாக்குகளை பெற்று 2ஃ3 பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது.
    ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் ஆணையை எடுத்துக்கொண்டால், இங்கு எதிர்த்தரப்பில் இருக்கும் தமிழ்க் கட்சிகள், தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வுக்காகவே மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டார்கள்.
    இந்த அரசு தெற்கில் பெற்றுக்கொண்ட, தெற்கு மக்களின் 60 வீதமான ஆணையை விட, நாம் வடக்கு கிழக்கு மக்களிடம் பெற்றுக்கொண்ட ஜனநாயக ஆணை மிக மிக வலிமையானது . ஏறத்தாழ 75 சத வீதத்துக்கு மேற்பட்ட மக்கள், தமிழ் கட்சிகள் முன்வைத்த தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வுக்கான ஆணையையே தந்துள்ளார்கள்.
    ஆனால், தான் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விட மிக மிக உறுதியான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளை, தமது கொள்கைகளையும் மக்கள் ஆணையையும் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனவாத கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு, எதுவித வெட்கமோ கூச்சமோ இன்றி இந்த ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.
    அதுமட்டுமல்ல, அவரது அரச தரப்பிலே அமர்ந்திருக்கின்ற ஐந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில், ஆகக்குறைந்தது வடக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று பேர், தமிழ் தேச அங்கீகாரத்தை முன்னிறுத்தியே தமது தேர்தல் பிரசாரத்தை முன்வைத்து மக்களிடம் சென்று வாக்கு கேட்டு இங்கே வந்திருக்கிறார்கள்.
    அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா கூட, வடக்கில் செய்த ஒவ்வொரு பிரசாரத்திலும், ஒவ்வொரு பிரசார சுவரொட்டியிலும், ‘தமிழர் தேசம் தலைநிமிர’ தனக்கு வாக்களியுங்கள், என்று கேட்டே – தமிழ் தேசத்தை சுலோகமாக கொண்டே மக்களிடம் சென்று வாக்கு பெற்றிருக்கிறார்.
    இப்படியாக வடக்கு கிழக்கு மக்கள் ஏகோபித்த முறையில் எமக்கு வழங்கிய ஜனநாயக ஆணையை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
    மக்கள் ஆணையால் வெளிப்பட்ட எமது மக்களின் இந்த அபிலாசைக்காகவே, ஆயிரக்கணக்கான மக்கள் தமது உயிர்களை கொடுத்திருக்கிறார்கள். இதற்காக நாம் இழந்தவைகள் ஏராளம். நீங்கள் எங்கள்மீது இழைத்த கொடூர இனப்படுகொலைக்குப் பின்னர் கூட, எமது மக்கள் உறுதியாகவும் தமது அபிலாசைகளை ஜனநாயக ஆணையாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    இப்படிப்பட்ட எமது மக்களின் ஜனநாயக ஆணையை விட்டுவிட்டு வருமாறு எவரும் இங்கு எதிர்பார்க்கமுடியாது. இந்த மக்கள் ஆணை எதுவித சமரசத்துக்கும் அப்பாற்பட்டது. இந்த ஆணை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படமுடியாதது என்பதை இங்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
    அதேநேரம், இங்கே எதிர்த்தரப்பில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுள் எவராவது, இப்படியான அர்ப்பணிப்புகளுடன் மக்கள் வழங்கிய ஆணையை கைவிட்டு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளலாமென நினைப்பார்களாயின், அவர்கள் கூட எதிர்வரும் காலங்களில் உரிய தருணங்களில் மக்களிடமிருந்து, தேவையான படிப்பினைகளை பெற்றுக்கொள்வார்கள் என்பதை, அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
    கனம் அவைத்தலைவர் அவர்களே,
    இன்று எமக்கு தேவைப்படுவது ஒரு காத்திரமான மாற்றம். அந்த காத்திரமான மாற்றம் அரசாங்கத் தரப்பில் இருந்து ஒருபோதும் வரப்போவதில்லை என்பது வெளிப்படையானது. அது எதிர்த்தரப்பில் இருந்தே வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மாற்ற்துக்கான ஒரு தொலைநோக்கு எதிர்த்தரப்பில் உண்மையாகவே இருக்கிறதா? என்று பார்த்தால், துரதிஸ்டவசமாக அப்படியான காத்திரமான மாற்றத்தை நோக்கிய தெளிவான நோக்கு எதிர்த்தரப்பில் கூட இல்லை.
    இங்கு எதிர்த்தரப்பில் இருக்கும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியானது, எமது இனப்பிரச்சினை விடயத்தில் ராஜபக்;சக்களையும் அவர்களின் கொள்கைகளையும் விஞ்சக்கூடியவாறு தன் பிரசாரத்தை கட்டமைப்பதே, எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்கான ஒரேயொரு வழியென நினைக்கிறது. இறுக்கமான – மத்தியை மையப்படுத்திய ஒற்றையாட்சியைப் பேணுவதையே அவர்களும் தமது இலக்காக கொண்டிருக்கிறார்கள்.
    அங்கே ஒருபுறம் இனவாதக் கொள்கைகள் தலைவிரித்து ஆடும்போது, இங்கே எதிர்த்தரப்பில் இருக்கும் சரத்பொன்சேகா போன்றவர்கள், அதை மிஞ்சும் வகையில் நினைவு கூரல்களைத் தடைசெய்ய வேண்டும் எனப் போட்டி போட்டுக்கொண்டு இனவாதம் பேசுகிறார்கள்.
    இது தான் இங்கு எம்மத்தியில் இருக்கிற எதிர்த்தரப்பு. இங்கு எதிர்க்கட்சித்தலைவர், உண்மையாகவே ஒரு காத்திரமான மாற்று சிந்தனையை முன்வைத்து, அதற்காக – அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைக்க முன்வராத பட்சத்தில், வெறுமனே இனவாதம் பேசும் தரப்புக்கு, ஒரு மாற்றீடு எனும் போர்வையில், இன்னொரு இனவாதம் பேசும் தரப்பை – அது யாராக இருந்தாலும் தமிழர்கள் தெரிவு செய்யப்போவதில்லை.
    அப்படியாக, வெறும் மாற்றீடுகள் எனும் பேரில், தலையிடிக்கு தலையணையை மாற்றும் காலம் முடிந்து விட்டது. இந்த நாட்டை மாற்றத்தை நோக்கி கொண்டு செல்லப்போகிறீர்களாயின், நீங்கள் அடிப்படைகளை மாற்றவேண்டும். அடிப்படைகளை மாற்றுவதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அடிப்படைகளில் மாற்றம் எனும் போது இந்நாட்டின் கட்டமைப்பு சார் மாற்றங்களை தொடங்குவதில் இருந்து, உண்மையான மாற்றம் ஆரம்பிக்க வேண்டும் என நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment