தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்கம்

1 0
Read Time:10 Minute, 54 Second

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்

தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்“


தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.

பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூலலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment