தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் முயற்சி
ஆயர் நோயெல் இம்மானுவேல், தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார்

0 0
Read Time:8 Minute, 33 Second

வடக்கு-கிழகுத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில், தொகுதி ரீதியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை முன்னெடுக்கச் செய்யும் நோக்கில் பொது வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல், தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய முயற்சி ஆரம்பித்து வைக்கப்படுவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் இந்தப் பொறுப்பைக் கையளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தரணி அ. அன்ரனி றொமோள்சன்
இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடு பிரதேச வேறுபாடுகள் மேலும் பல துறைசார்ந்தவர்கள் இந்தப் புதிய முயற்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு-

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம்

(திருகோணமலை 24 செப்ரம்பர் 2021) வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடாத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம். சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம்.

சமீபத்தைய நாட்களில் மீண்டும் இதைப் போன்ற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருப்பதாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றைத் தீர்த்துவைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக்கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது.

இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற்கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்தகட்டமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கி வருகிறோம்.

வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்றவரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். செயற்குழு மற்றும் பொதுத்தொடர்பில் பங்கேற்பவர்களின் விபரங்களை, ஆரம்பக் கலந்துரையாடல்கள் முடிவடைந்ததும் வெளிப்படைத்தன்மையோடு அறியத்தரும் பணியை மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் கையளித்திருக்கிறோம்.

இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், இம் முயற்சியை ஊக்குவித்துச் செயற்படவும் விரும்புவோர் participate@tamildemocracy.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தமது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கல்வித்துறை, சட்டத்துறை, மனித உரிமை, ஊடகத்துறை மற்றும் இதர சமூகப் பரப்புகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கி, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து, உகந்த ஒரு பொறிமுறையை வகுக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்லாசியுடன் இம் முயற்சியை ஆரம்பித்து வைப்பதில் மனநிறைவடைகிறோம். அனைவரின் ஆதரவும் இம்முயற்சிக்குக் கிட்ட இறையருளை வேண்டிநிற்கிறோம்.

அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறை மாவட்டம்

தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம்

அ. அன்ரனி றொமோள்சன் மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மன்னார் சென் சேவியர் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றுப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டமாணியைப் பயின்று பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியிலும் சட்டத்துறையைக் கற்றுள்ளார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணி மாணவராவர்.

யாழ் பல்கலைக்கழ சட்ட மாணவர் சங்கத் தலைவராகப் பதவி வகித்திருந்த றொமோள்சன், தமிழ்ச் சமூகம் சார்பான உரிமை மீறல் வழக்குகளில் தற்போது முன்னிலையாகி வருகிறார். மனித உரிமைச் செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டு வருகின்றாரென்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment