மண்ணுக்காய் மடிந்தவரே மன்னித்துக் கொள்ளுங்கள்

0 0
Read Time:4 Minute, 30 Second

மண்ணுக்காய் மடிந்தவரே
மன்னித்துக் கொள்ளுங்கள்

நாங்கள் மனிதர்கள்

எங்களின் உயரத்துக்கு ஏற்பவே
எங்களால் பார்க்க முடிகிறது
உங்களின் உச்சங்களை
உணரக்கூட முடியவில்லை
ஏனெனில்
நாங்கள் மனிதர்கள்

பசிக்கும் தாகத்துக்கும்
அப்பால்
செவிக்கும் விழிக்கும் என
விருந்து தேடி அலைபவர்கள்

அது கிடைக்கும் இடமெல்லாம்
மண்டியிட்டு தலைசாய்த்து
மாமனிதன் இவனென்று
மணியாரம் கொடுப்பவர்கள்
ஏனெனில்
நாங்கள் மனிதர்கள்

சோலைதனில் ஆடுகின்ற
சேலைகளை தரிசிக்க
சாலை நிரப்பி நிற்கும்
சாதாரண மனிதர்கள்

மண்ணுக்காய் மடிந்தவரே
மன்னித்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் நாங்கள் மனிதர்கள்

அயல் வாழ வேண்டுமென
புயலாகி வெடி சுமந்த
உங்களைப்போல் அல்ல
நாங்கள்

எங்கள் நாட்களை
எங்களுக்காகவே
வாழத்துடிப்பவர்கள்

எனது கனி எனக்கேயென
பொத்திக் காக்கும்
புது மரங்கள்

ஊர்கூடி போராடும் போதும்
பேர் தேடி புகழ் சேர்க்கும்
பெரி….ய மனிதர்கள்

என்னைச் சுட்டுவிட்டு
ஆயுதத்தை காப்பாற்று
ஏனெனில்
அதுதான்
என் மக்களைக் காப்பாற்றும் என்ற
சீலன்களை நினைந்துருக…

புலிவீரர் பலர் சுமையை
தனியாக தாம் சுமந்து
சந்ததிக்காய் வெடியான
மில்லர்களை நினைந்துருக….

எங்களுக்கு நேரமில்லை
அதனை புரிந்துகொள்ள
ஞானமில்லை

வாயில் வைத்த சோறு
வயிறிறங்கும் தருணத்தில்
இடுப்பில் இருந்த குண்டு
தவறிக் கழன்றுவிட

உடனிருந்த தோழர் உயிர்
அவன் கையில் என்றாக

தன்வயிற்றுள் அக் குண்டனைத்து
நண்பர்களின் உயிர் காத்த
அன்பு எனும் வீரனவன்
அன்பதனின் ஆழம் அறிய
எங்களால் எப்படி முடியும்?
முடியாது
ஏனெனில்
நாங்கள் மனிதர்கள்
சாதாரண மனிதர்கள

பசியென்று வயிறழ முன்னரே
புசியென்று உணவளிக்கும்
எங்களுக்கு
திலீபனின் தியாகத்தை
புரிந்துகொள்ள முடியவில்லை

எங்களின் உயரத்துக்கு ஏற்பவே
எங்களால் பார்க்க முடிகிறது
உங்களின் உச்சங்களை
உணரக்கூட முடியவில்லை

வித்தான வேங்கைகளே
இனியாவது எங்களை
சற்று புரிந்துகொள்ளுங்கள்

ஒன்றாகவே பிறந்து
ஒன்றாகவே வளர்ந்திருந்தாலும்
நீங்களும் நாங்களும் ஒன்றல்ல

மலைக்கும் மடுவுக்கும் என்ற
அடைமொழிகளைத் தாண்டி
வானுக்கும் பூமிக்குமான தூரம்
உங்களுக்கும் எமக்கும் நடுவில்

ஒருவேளை சோறிட்டாலே
ஓராயிரம் முறை வாலாட்டி
நன்றியென சுற்றிவரும்
நாயினம் அல்ல

நாங்கள் மனிதர்கள்

உங்கள் மகிமைகள்
எப்படித் தான் புரியும் எமக்கு?

இது நான்…. இது எனது….
என
இறுமாப்பில் இயங்கிவரும்
இயற்கை மனிதர்கள்

மண்ணுக்காய் மடிந்தவரே
மன்னித்துக் கொள்ளுங்கள்

கற்பனைக்கு எட்டாத
கடவுளராய் இருப்பவரே

மறுபிறவி ஒன்றிருந்தால்
எம்மைப்போல்
மனிதர்களாய் பிறப்பெடுங்கள்

ஐம்புலனின் பசி தணிக்க
பம்பரமாய் சுழன்றிடுங்கள்

அப்போதுதான்
நீங்களும் நாங்களும்
நேர்கோட்டில் வருவோம்

அப்படி பிறப்பெடுங்கள்
உங்களுக்காய் வாழுங்கள்
அப்போதுதான்
உங்களை நாம் தலை சுமப்போம்
உம் காலடியில் நாம் கிடப்போம்

ஏனெனில்
இப்போது நாங்கள்
வணக்கத்துக்கும்
வீர வணக்கத்துக்கும்
வித்தியாசம் தெரியாத
வேடிக்கை மனிதர்கள்
_ மது நோமன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment