தேசமெங்கும் நிறைந்த சோதி

0 0
Read Time:2 Minute, 46 Second

வானத்திலிருந்து மண்ணைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ..
காலவெளி கண்முன்னே
கடந்துபோகிறது….
நீ விதைத்த பொன்விதைகள்
பொய்யுறக்கத்தில் இருக்கின்றன.

சிற்பிஒருவன் கல்லில் வடித்த
அழியாச் சித்திரம்போல்
ஆழப்பதிந்திருக்கின்றன
வாழ்வுக்கால நினைவுகள்.
அங்கே இங்கே அல்லாமல்
எங்கும் நிறைந்துள்ளாய் நீ.

இறத்தல் என்பது
இல்லாமற் போவதல்ல
மாறாக மற்றொருமுறை
பிறத்தலே ஆகும்.
நீ மறையவில்லை.
பலவாறாய் பெருகி
திலீபமாக தேசமெங்கும்
நிறைந்துள்ளாய்.

போராளிக்கும்
நோயாளிக்கும்
வேறுபாடு காணமுடியாத
கோமாளிகள்
வெட்கித் தலைகுனியட்டும்.

தேரோடும் வீதியின் திசையில்
தேடிக் கிடக்கின்றன உன்
காலடித் துணிக்கைகள்.
வளைவுகளும் தூபிகளும்
அழிக்கப்பட அழிக்கப்பட
அவை ஆழப்பதிகின்றன
அடிமனங்களுக்குள்.

கொடிய நச்சரவம்
அகலத்திறந்த வாயுடன்
விழுங்கத் துடிக்கிறது.
தோலைக் கழற்றுவதால்
அது தூய்மையடையாது.
பாலூற்றும் பற்றாளர்
பணிந்து கிடக்கட்டும்.

உதடுகளால் மட்டும் உன்னை
உச்சரிக்காமல் உன்
உயிரின் கனவை ஏந்தி
காத்திருக்கிறது உன்னினம்.
பிள்ளைகளில் ஒருவனாவது
பிறப்பெடுப்பான்.

நாடிழந்தவர்களாய்…
நாடுகள் தோறும் அலையும்
இனமொன்றின் புதியகுரல்கள்
உனது கனவுகளை
உரத்து ஒலிக்கின்றன….உன்
புன்னகையோடு
புரட்சியும் காண்பாய் நீ.

சூரியன் ஒரு நெருப்புக்கோளம்.
தென்றலாய் வந்து உன்
தோள்தடவும் அது.
புதுமையைப் படைத்த உன்
புறவீரம் அழியாதது.
வேரில் துளிர்க்கும்
வித்தை அறிந்தவன் நீ.

எரிக்கலாம்
அழிக்கலாம்
சிதைக்கலாம்
சிறைவைக்கலாம்
ஆனாலும் சிறுதுளியிலிருந்து
பெருகும் பேராறாய்ப்
பாதைகளின் பயணம் நகரும்..

வெற்றுக் கைகள் தான்
எனினும் அவையொன்றும்
வீணாகிப்போகாது.
பெற்றே தீரும்.
பெற்றே தீர்க்கும்.
பொறுத்திரு… எம்
பூமி வசமாகும்.

ஆதிலட்சுமி சிவகுமார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment