சுவிஸ் அரசு 24. 02. 2021 அறுதி முடிவை அறிவிக்கும்

0 0
Read Time:12 Minute, 39 Second

01. 03. 2021 முதல் கடைகள் உரிய காப்பமைவுடன் திறக்கப்படலாம்
அருங்காட்சியகம், வாசிப்புமண்டபம், நூலகங்கள் மற்றும் விலங்குகாட்சி வெளியிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்பனவும் திறக்கப்படலாம்.


விருந்தோம்பல்துறை அறிவித்தல் விடுக்கும்வரை பூட்டப்பட்டிருக்கும்
18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் விளையாட்டு மற்றும் பண்பாட்டுச் செயல்களில் மீண்டும் ஈடுபடலாம்.
அதுபோல் உடற்பயிற்றி பொழுதுபோக்கு நிலையங்களும் 01. 03. 21 முதல் திறக்கப்படலாம்.
அடுத்தகட்ட தளர்வுகள் ஒருமாதகாலம் கழித்து நோய்த்தொற்று நிலை ஆயப்பட்டு அறிவிக்கப்படும்
மேலே குறிக்கப்பட்ட அனைத்து தளர்வு நடவடிக்கைகளும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடப்பட்டு அறுதி முடிவு 24. 02. 2021 அன்று வெளியிடப்படும்.
சுவிஸ் அரசு 14.3 பில்லியன் சுவிஸ்பிராங்குகளை மகுடநுண்ணி (கோவிட்-19) இடர்களைய பாராளுமன்றத்திடம் அனுமதிகோரி உள்ளது. குறுகிய நேரப்பணித் திட்டம், இடர்நிலை கடனளிப்பு, ஆகியவற்றிற்கான நிதியும் இதில் அடக்கம்.
அதுபோல் நோய்த்தொற்று பரிசோதனைக்கு மேலும் 990 மில்லியன் சுவிஸ்பிராங் தேவையாக உள்ளதாம்.
ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிஸ் அதிபரும் பொருளாதார அமைச்சருமான திரு. குய் பார்மெலின், சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே மற்றும் நிதியமைச்சர் திரு. ஊவெலி மௌறெர் ஆகியோர் பங்கெடுத்தனர்.

முதலாவதாக சுவிஸ் அதிபர் திரு. குய் அவர்கள் பேசுகையில் மகுடநுண்ணித் தொற்றின் சுரங்கப் பாதை மிக நீண்டதாகத் தெரிகின்றது. ஆகவே இதிலிருந்து வெளிவர நாம் அடிக்கொரு அடியாக காலை எடுத்து வைக்கவேண்டி உள்ளது என்றார். அவசரகால சட்டத்தை சூழலிற்கு ஏற்றதாக மாற்றவேண்டியும் உள்ளது என்றார் சுவிஸ் அதிபர், மேலும் தொழில் இழந்தவர்களுக்கு ஈடு வழங்கும் காப்புறுதிக் காலத்தை நீடிக்கவுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

இளையவர்களுக்கான தளர்வுகள்

சுவிஸ் அதிபர் திரு குய் அவர்கள் தெரிவிக்கையில் இளவயதினர் தற்போது இம் முடக்க காலத்தில் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகவே மிக விரைவாக அவர்களுக்கு சில தளர்வுகளை அறிவிக்க எண்ணி உள்ளோம். குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கு பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புக்களை மீள அனுமதிக்க உள்ளோம். இதுவரை மக்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மைக்கும் ஒற்றுமைக்கும் சுவிஸ் அரசு நன்றி நவில்கின்றது என்றார் சுவிஸ் அதிபர்.

பரிசோதனை செய்யுங்கள்

சுவிஸ் வாழ் மக்களுக்கு சுவிஸ் அரசின் வழிகாட்டிக்கொள்கை அடுத்துவரும் நாட்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் செய்யுங்கள்! பரிசோதனை செய்யுங்கள்! நோய்த் தொற்றினைக் கண்டறிந்து, முடக்குங்கள்! என்பதாகும் என்றார் சுவிஸ் அதிபர்.

தளர்வுகள் மாதம் மாதம் அறிவிக்கப்படும்

சுகாதார அமைச்சர் திரு. பெர்சே தெரிவிக்கையில் நாம் இந்நோய்த் தடுப்பு நடவடிக்கையினை வேகமாக தளர்த்தினால் அதேவேகத்தில் விளைகளும் மோசமடையலாம். ஆகவே தொற்று அதிகரிக்காத வகையில் ஒவ்வொரு படிகளாக செயல்களை ஆற்றவுள்ளோம் என்றார். முதலாவது அடியெடுத்து வைத்து 01. 03. 2021 முதல் சில தளர்வுகளை அறிவிக்க உள்ளோம். இதன் அறுதி அறிவிப்பு 24. 02. 2021 அறிவிக்கப்படும். அடுத் செயற்பாடுகள் மாதங்கள் தோறும் அறிவிக்கப்படும் என்றார் சுகாதார அமைச்சர்.

வலி தவிர்ப்பு

சுகாதர அமைச்சர் தெரிவிக்கையில் தற்போதைய தொற்றுத் தொகை நேர்மறையாக உள்ளது. ஆனாலும் திரிவடைந்த மகுடநுண்ணியின் புதிய தொற்றுவகை எமக்கு கவலை அளிக்கின்றது. எமது நோக்கம் வலியைத் தவிர்ப்பதாகும்.

ஒருபக்கம் நோயின் தாக்கமும் மறுபக்கம் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படும் விளைவுகளும் வலிகளை அளிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இப்பெரும் இடர் எம் அனைவரது அற்பணிப்புக்களையும் பலிகொள்கின்றது. இதனை நாம் அறிவோம். வலியைத் தடுக்கும் செயல்களை நாம் ஆற்றுகின்றோம் என்றார்.

01. 03. 2021 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளையோர்களுக்கு விளையாட்டுப்போட்டிகளுக்கு தளர்வுகள் மட்டுமல்ல, வரையறுக்கப்பட்ட இசை நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றார் சுகாதார அமைச்சர்.

அடுத்த கட்ட தளர்வு நடவடிக்கைகள் தானியங்கு முறையில் அறிவிக்கப்படாது. நோய்த்தொற்றின் சூழல் நிலைமையைக் ஆய்வுசெய்து படிப்படியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் துறைசார் நிபுணர்களுடன் விவாதிக்கப்பட்டு சுவிஸ் நடுவனரசால் அறிவிக்கப்படும் என்றார் திரு. பெர்சே.

படிப்படியாக தளர்வுகள்

நாம் கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட பாடத்தால் நாம் தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க உள்ளோம். நான்கு கிழமைகளுக்கு ஒருமுறை தளர்வுகளை அறிவிக்கும்போது நோய்த்தொற்றுச் சூழுலிற்கு ஏற்ப நாம் நடவடிக்கைகளை அறிவிக்க முடியும். கடந்த ஆண்டு 3 கிழமைகளுக்கு ஒரு தளர்வு என அறிவித்திருந்தோம், அக் கால இடைவெளி நோயின் போக்கினை கணிக்கப் போதாது என்பதை கற்றுக்கொண்டோம் என்றார் சுகாதார அமைச்சர்.

நடுவனரசிற்கு புதிய குறிக்கோள் உள்ளதா?

எமது நோக்கம் சுவிற்சர்லாந்து நாட்டின் சுகாதார முறைமைகளை தக்க வைத்துக் கொள்வதாகும். பெருந்தொற்றுச் சூழல் காரணமாக பல அறுவைமருத்துவப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. புதிய தொற்றுக்களை தவிர்த்தலும், தடுப்பூசிகளை இட்டு தொற்றினைக் கட்டுப்படுத்துவதும் எமது நோக்காக உள்ளது.

நாம் வேகமாக தளர்வுகளை அறிவித்தால் அது நிலவும் சூழலிற்கு சிறந்த தீர்வாக அமையாது. விருந்தோம்பல் துறையினர் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளனர். வேகமாக தளர்வுகளை அறிவித்து நோய்த்தொற்று பெருகினால் அனைத்து துறையினருக்கும் அது தீங்காகி விடும் ஆகவே படிநிலையாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார் திரு. பெர்சே.
மெதுவான நிதி உதவி

நிதியமைச்சர் திரு. மௌறெர் தெரிவிக்கையில் நிறுவனங்கள் இடர்நிலைகளைய நிதி உதவி கோரி இருப்பின் உரிய விண்ணப்பங்கள் சரியான முறையில் ஆய்வுசெய்யப்பட்டே உதவிகள் அளிக்கப்படும். மக்கள் வரிப்பணத்தை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். ஆகவே அதற்கான காலம் தேவைப்படும். அதே வேளை நிறுவனங்களையும் நாம் புரிந்துகொள்கின்றோம் என்றார் நிதி அமைச்சர்.

சுவிஸ் அரசு அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதா?

நாம் அழுத்தத்திற்குள் பணிசெய்யப் பழக்கப்பட்டவர்கள். நாம் இயற்கையான சூழலிற்கு எற்ப இயங்குவோம். சுழலை சுதாகரித்துகொண்டு செயற்பட எம்மை வளர்த்துக்கொண்டோம். ஆகவே அழுத்தம் எம் பணிகளை பாதிக்காது என்றார் சுகாதார அமைச்சர்.

ஊடகவியலாளர்களின் சில கேள்விகள்

முடிதிருத்தப்பணி முடக்கப்படவில்லை, விருந்தோம்பல்துறை ஏன் முடக்கப்பட்டது?
கட்டடத்திற்குள் உணவகங்களில் மக்கள் அதிகளவில் ஒரேநேரத்தில் ஒன்றாக ஒன்றுகூடுவதும், 5வர் மட்டும் ஒன்றாக ஒன்றுகூடுவதும் ஒன்றல்ல. இதுவே வேறுபாடு என்றார். மேலும் இனி வரும் நாட்களில் 15 மக்கள் வெளியிடங்களில் ஒன்றுகூடலாம். அடுத்த கட்ட நடவடிக்கையில் விருந்தோம்பல் துறைக்கும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது ஆனால் தொற்றின் எண்ணிக்கையும் நோயின் போக்குமே இதனைத் தீர்மானிக்கும் என்றார் சுகாதார அமைச்சர்.
உதவி வழங்கப்படும்… அடிப்படை வருமானம் அல்ல
பண்பாட்டுத் துறையில் பணிசெய்வோருக்கு உரிய உதவி வழங்கப்படும். ஆனால் அடிப்படை வருமானத்தை ஈடாக வழங்க முடியாது என்றார் சுகாதார அமைச்சர். பண்பாட்டுத்துறையில் பணிசெய்வோர் தற்காலச் சூழலால் பாதிப்படைந்திருப்பதை நாம் அறிவோம். அவர்களுக்கு உரிய உதவி வழங்கப்படும். ஆனால் நிபந்தனை அற்ற வருமான ஈட்டினைக் கொடையாக வழங்க முடியாது

பொது நிகழ்வுகள் எப்போது மீண்டும் நடைபெறும்?
பாதுகாப்பு முகவுறை, கட்டாய இருக்கை, பங்கெடுக்கும் ஆட்கள் தொகைகட்டுப்பாடு இவ்விதிகளுடன் எதிர்காலத்தில் நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு அமையலாம்…

ஒரு ஆண்டு கழித்து இந்த மகுட நுண்ணி நிலை எப்படி இருக்கும்
நான் மாடியின் மேற்தளத்தில் கையில் ஒரு தோப்பியுடன் (பியருடன்) நிற்பேன் என நினைக்கின்றேன் என்றார் சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே…
அதேநிலையில் ஆனால் கையில் ஒரு திராட்சைபானத்துடன் நிற்பேன் என்றார் சுவிசின் அதிபர் திரு. குய் பார்மெலின்.
இக்கேள்விக்கு இவ்வாறு பதிலளித்து இருவரும் குறுநகையுடன் ஊடகவியலாளர் சந்திப்பை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.

எதிர்வரும் 24. 02. 21 அன்று அறிவிப்பின்படி 01. 03. 2021 முதல் சுவிசின் தளர்வுகள் எப்படி இருக்கும் எனத் தெரியும் அதுவரை காத்திருப்போமாக.

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment