சுவிசில் பத்தாயிரத்தை தொட்ட மகுடநுண்ணுயிரித்தொற்று

0 0
Read Time:11 Minute, 30 Second

04. 11. 2020 இன்று 14.30 மணிக்கு சுவிற்சர்லாந்தின் நடுவனரசின் அமைச்சர்கள் திருமதி வியோலா அம்கெர்ட் (பாதுகாப்பு அமைச்சர்), திரு. அலான் பெர்சே (சுகாதார அமைச்சர்) மற்றும் திரு. ஊவெலி மௌறெர் (நிதி அமைச்சர்) ஆகியோர்தற்போதைய சுவிற்சர்லாந்தின் நிலைமை தொடர்பில் தகவல் அளித்தனர். மேலும் நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள கடினங்களை எதிர்கொள்ள அரசு அளிக்க உள்ளஉதவிகள் தொடர்பிலும் விளக்கினர்.  


04. 11.2020ல் நோய்த்தொற்றின் நிலைமை 
கடந்த 24 மணி நேரத்திற்குள் சுவிசில் புதிதாக மகுடநுண்ணியிரித் (கொறோனா) தொற்றுக்கு ஆளானோர் தொகை 10 073 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்குள்ளானோர் தொகை 5 தானத்தில் அமைந்த நாளாக இன்றைய நாள் பதியப்பட்டுள்ளது. 73வர் உயிரிழந்துள்ளார்கள். இதன்படி இதுவரை 2275 மக்கள் கொறோனாவிற்கு சுவிசில் பலியாகி உள்ளார்கள். தொற்றுக்குள்ளானவர்களில் 247 நோயாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  
கடந்த 03. 11. 2020 செவ்வாய்க்கிழமை 6126 புதிய கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகி இருந்தது. கடந்த புதன் 8616 புதிய தொற்றுக்கள் பதிவாகி இருந்தன. ஆக இரு கிழமைகளை ஒப்பிட்டால் இக்கிழமை தொற்று மிகவும் சடுதியாகக் கூடியுள்ளது. கடந்த திங்கள் சனி மற்றும் ஞாயிறு நாட்களையும் சேர்த்து 21 926 தொற்றுக்களை சுவிஸ் அரசு பதிவுசெய்துள்ளது.  
சுவிற்சர்லாந்து நாட்டிலும் மற்றும் சுவிசின் பாதுகாப்பிற்கு உட்பட்ட லிக்ரென்ஸ்ரைன் நாட்டையும் சேர்த்து இதுவரை 2 080 775 மகுடநுண்ணுயிரிப் பரிசோதனைகளை சுவிஸ் அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு கிழமைகள் செய்ய பரிசோதனைகளில் 26விகிதம் கொறோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நூறாயிரம் மக்களில் 4566.8 மக்கள் கொறோனாத் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 
சுவிசில் மகுடநுண்ணியிரித்தொற்று பரிவிய காலம் முதல் இதுவரை 192 376 நோய்த் தொற்று பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுவிசில் 8039 ஆட்கள் மருத்துமனையில் இந்நோய்க்கு மருத்துவம் பெற்றுள்ளனர். முன்னர் குறிப்பிட்டதுபோல் 2275 மக்கள் கொறோனாவிற்கு பலியாகி உள்ளனர்.  
சுவிசில் மகுடநுண்ணியிரித் தொற்றுத்தடுப்பில் இராணுவம் துணைப்பணிகளில் 
பாதுகாப்பு அமைச்சர் திருமதி அம்கெர்ட் தனதுரையில் சுவிற்சர்லாந்து நடுவனரசிடத்தில் பல மாநிலங்கள் இராணுவத்தின் உதவியினை நாடி உள்ளதாகத் தெரிவித்தார். மாநிலங்களின் வேண்டுகோளை ஆய்வுசெய்த நடுவனரசு இராணுவத்தினரைத் துணைப் பணிகளுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.  
ஆகக்கூடியது 2500 இராணுவ வீரர்கள் தன்விருப்பில் இத் துணைப் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர் எனவும் தெரிவித்தார்.  
ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக உதவிகோரி நடுவனரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அவை தனியாக உசாவப்பட்டு, துணைப்பணிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.  
இத் துணைப்பணிகளுக்கான பணியொப்புதலை நடுவனரசு 31. 03. 2021 வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 
இராணுவம் வழங்கவுள்ள துணைப்பணிகள் இவையாகும்: 
–     அடிப்படை மருத்துவ மற்றும்    பராமரிப்பிற்கு தாதியர்கள் 
–     முன்னோய்யறிதல்  
–     மகுடநுண்ணுயிரித் தொற்று ஐயம் இருப்பின் முற்பரிசோதனைப் பணிகளில் உதவி 
–      பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான வழங்கல் மற்றும் தொற்றுக்குள்ளானோர்களுக்கான போக்குவரத்து  
மகுடநுண்ணுயிரி – வேலையிழப்பீடு 
குறுகிய நேரப் பணிகளில் உள்ளவர்களுக்கான கால இழப்பீட்டினை சுவிஸ் நடுவனரசு நீடிக்கின்றது.  
மேலும் இதுவரை இல்லாத புதிய விதியையும் அறிவித்துள்ளது. இப் புதிய விதிப்படி நிறுவனங்களின் உரிமையாளர்கள், உரிமையாளர்களுக்கு ஈடான முகாமைப்பணிகளில் உள்ளோர், தன்முனைப்பில் தொழில் செய்வோர், பொதுநிகழ்வுகள் தடைசெய்யப்பட்டு அதன்பால் சுயதொழில் வாய்ப்பினை இழந்தோர், தொழில் முனைவோரான சூழலில் பணிசெய்வோர், மகுடநுண்ணியிரித் தடுப்பு நடவடிக்கை காரணமாக அதிக வருமானத்தை இழந்தவர்களும் வருவாய் இழப்பீட்டிற்கு  விண்ணப்பிக்கலாமென சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.   
திரு. அலான் பெர்சே அடுத்த கிழமை பண்பாட்டுத் துறைசார் அமைப்புக்களுடன் நேர்கண்டு, ஆழமாக உரையாடி அடுத்தகட்ட தமது நடவடிக்கையின் அடிகளை தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  
விளையாட்டுக் கழகங்களுக்கு உதவி:
சுவிஸ் நடுவனரசு 350 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொண்டு தொழில்சார் விளையாட்டுக் கழகங்களுக்கு உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களுக்கு பல போட்டி நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும், பெரும்பாலான போட்டிகள் பார்வையாளர்களற்று நடைபெற இருப்பதாலும், நடுவனரசு விளையாட்டைத் தொழிலாகக்கொண்ட கழகங்களுக்கு கடன் அளிப்பதற்கு எண்ணியுள்ளது. இனிவரும் நாட்களின் சூழலை உன்னிப்பாக அவதானித்து உரிய முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இன்னல்நிலை போக்கும் செயற்திட்டம்:
நடுவனரசு மாநிலங்களின் இன்னல் போக்கும் செயற்திட்டங்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.  
கடந்த இலையுதிர் காலத்தில் சுவிற்சர்லாந்து பாராளுமன்றக் கூட்டத்தொடரில் மாநில அரசுகள் மகுடநுண்ணியிரி நோய்த்தடுப்பு நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளான பொது நிகழ்ச்சி வழங்கும் நிறுவனத்துறைகள், காட்சிச்சாலை உரிமையாளர்கள், சுற்றுலாத்துறை போன்ற துறையினர்களுக்கு மானியம் அளித்து உதவமுன்வர சுவிஸ் நடுவனரசை வேண்டியிருந்தது. இதன்படி மாநிலங்களின் செலவில் பாதியை நடுவனரசு ஏற்கவுள்ளது.  
இன்னல் நிலைக்கான வரையறை என்ன? 
நிதி அமைச்சர் திரு. மௌறெர் தெரிவிக்கையில் தற்போது சுவிற்சர்லாந்து நாடு முழுவதுமாக முழுமையான பெரும் சமூக முடக்கம் நடைமுறையில் இல்லை. ஆகவே நாம் தற்போது சுவிஸ் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு கடன்வழங்கி இன்னல் போக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் இன்னல் நிலை எது என்பதை வரையறுக்க வேண்டும் என்றார். இவ் வரையறை மார்கழி 2020 இற்குள் நடைபெறும் என்றார்.
ஒருமைப்பாடு:
சுகாதார அமைச்சர் திரு. பெர்சே மாநிலங்களிடையில் ஒருமைப்பாடும் உதவும் இயல்பும் வேண்டும் என்றார். இக்கடின சூழலில் சுவிசின் மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணக்கப்பாட்டுடன் இணைந்து பணிபுரிய வேண்டும். நோயாளர்களை சரியாகப் பகிர முன்வரவேண்டும் எனவும்கோரிக்கை விடுத்தார். தெரிவின் அடிப்படையில் நடைபெறக்கூடிய அறுவைமருத்துவம் (அறுவைச்சிகிச்சை) தள்ளிவைக்கவும் வேண்டினார்.  
முனைப்புக் கவனிப்பு (தீவிரசிகிச்சை) மருத்துவப்பிரிவு:
சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் தற்போது உள்ள முiனைப்புக்கவனிப்பு மருத்துவ இடங்களில் 3ல் 1பகுதி மகுடநுண்ணியிரித்தொற்று நோயாளர்களால் நிரம்பியுள்ளது.  
கடந்த நோய்த் தொற்று அலைக் காலத்தைக் காட்டினும் இந்த இரண்டாவது அலைகாலத்தில் சமூக இடைவெளி பேணித் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாதியினர் தொகை அதிகமாக உள்ளது.  
ஆகவே பல மருத்துவமனைகளும் பணியாளர்கள் தட்டுப்பாடால் கடினமான பணிச்சுமைகள்குள் சிக்கி உள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.   
இன்றைய ஊடகவியலாளர் மாநாடு தொடங்கும்போது 10 000 ஆட்களை நோய் தொற்றியிருப்பது தொடர்பாக கருத்துரைத்த சுகாதார அமைச்சர் «முதல் அலையின் உச்சிப்புள்ளியில் இருந்த நிலை இன்று நிலவுகின்றது» எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அன்று நாம் எதிர்கொண்ட அதேமுடக்கங்களை மீண்டும் நுகரவேண்டி வருமா என்பதை பொறுத்தே பார்க்கவேண்டும்… 
தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment