சத்திய வேள்வியின் சரித்திர நாயகர்கள்

0 0
Read Time:9 Minute, 37 Second

ஓயாத அலைகளாய்
ஓங்கி அடித்துக் கரைதேடி
உறங்காத விழிகளோடு
ஒவ்வொரு கணமும் உறவாடி
உரிமைகளை வென்றெடுக்க
உத்வேகமுடன் தினம் ஓடி
உள்ளத்தில் மாபெரும்
உறுதி கொண்டு களமாடி
உயிரிதழைக் காற்றிலூதி
உயரிய இலட்சியத்தீயில்
விழிமுடிப் போன எங்கள்
விடுதலைத் தீபங்களே !
உமக்கென ஒரு சுடரேற்றுகிறோம் – எம்
இதயக்கோவிலிலே
ஒரு முறை தரிசனம் தரவேண்டும் – எம்
உதய வேளையிலே.

சுவாசத்தில் சூழலும் காற்றில் – உங்கள
மூச்சினை உணர்கின்றோம்.
வாசம் வீசும் பூக்களில் – நீங்கள்
வண்ணங்களாய் மிளிர்வதைக் காண்கின்றோம்
வானத்து வெள்ளிகளில் – நீங்கள்
புன்னகைப்பதைப் புரிந்துகொள்கிறோம்
மாவீரரே…
எங்கும் எதிலும் பொலியும்
உங்கள் முகம் காணத் துடிக்கும் எங்களுக்காய்
ஒரு முறை வரமாட்டீரோ?
காவலரண்களில் காவல்தெய்வங்களாய் – எதிரிகள்
கதை முடித்த களப்புலிகள் நீங்களெங்கே ?
எறிகணை மழை பொழிய
சுடுகலச் சன்னங்கள் சீறும்
பெருயுத்தக் களம் மீதில்
எரிதணலாய்ப் பொருதி
எமனையும் மலைக்க வைத்த
இமயங்களே!
உங்களுக்காக ஒரு மனப்பட்டுக் காத்‌திருக்கிறோம்
உள்ளத்தால் உருகி நிற்கிறோம்.
ஒருமுறை கண்திறப்பீரோ?

உடலோடு கந்தகம் சுமந்து
உயிராயுதமாய் உறுதியேற்றி
கருத்துப்பயிற்சிகள் பயிற்சிகள் கண்டு
கயவர்கள் இலக்கு நோக்கி
காத்திருந்து கதை முடிக்கும்
காவியத் திறலோரே
கரும்புலியெனவாகிய பெருவீரத்திடத்தோரே!
உமைப்போற்ற வார்த்தைகள் ஏது?

கரை தழுவும் அலை தாவி
கடலோடு விளையாடி
கடற்தாயின் வரம் பெற்ற
கரிகாலன் செல்வங்களே!
படகோடு வெடியேற்றி
பகை தேடிப் படகோட்டி
உடலோடு பிரளயமாய்
உயிரீந்த உன்னதரே!
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலின்
நீரடியில் நீச்சலிட்டு
போர்க்கப்பல் அடித்தளத்தில்
வெடிபொருத்தித் தகர்த்தெறிந்த
பூகம்பப்பூக்களே – உங்கள்
யாகத்தின் துணிச்சலை மெச்சுகிறோம்.

பெயரறியாமலே முகம் தெரியாமலே
தனையுதிர்க்கும் தமிழ் வீரர்
தலைவனவன் வளர்த்தெடுத்த
மலை நிகர்த்த விறற்குணத்தோர்
தடையெனவே வரும் இலக்கைத்
துடைத்தெறியச் சபதம் கொண்டு
தற்கொடைக்கே விளக்கமாகும்
கரும்பூக்கள் உமை நாமே
காணுமிடமெல்லாம் காண்பதாய்க் கைதொழுதோம் – பெரு
ஈகம் என்பது உமது மொழி
இலட்சியம் வெல்வதற்காய்
செய்தீர்கள் புதிய விதி
இனியொரு முறைகூட யாரென்று
உமையறியும் பெரும்பேறு கிட்டுமோ – தமிழ்
ஈழ விடுதலை நாளன்று நீங்கள்
எழுந்து வரமாட்டீரோ?
காற்றுப் புகா இடத்திலும் கூட
கரும்புலிகள் நுழைந்திடுவர் என்பதை
யாரும் மறுத்திலர்
போற்றிப் பாடுகிறோம் புனிதர்களே உங்களை நாம்.

ஒருவரும் அறியாது
ஒருபெரும் தாக்குதலுக்கு
மறைமுகமாய்ப் பணியாற்றி
உறைந்து போன முகவர்களே !
ஓய்வின்றி உழைக்கும்
உங்கள் அர்ப்பணிப்புக்கள்
ஈடிணையற்றவை! உம்மை
எண்ணத்தால் வணங்குகிறோம்
எம் தேசத்திற்காய் எங்கெங்கோ
தமைப்பலியாக்கிய
தாயகத்தின் தமிழ்ச்சுடர்களே – உம்மைப்
போற்றிடவே வார்த்தைகளில்லை – நிங்கள்
தலைவரின் இதயத்தில் வாழும்
பெரும்பேறுடை பாக்கியவான்கள்.

தொலைவிலிருந்தும் – எதிரிகள்
தொல்லைகள் துடைத்தெறிய
எறிகணைகள் கொண்டு – பகை
இருப்பிடங்கள் தகர்தெறிந்து – எம் நிலம் நோக்கி
நகர்ந்து வரும் நாசகாரர்களை
தடுத்து, மிரளச் செய்யும்
பீரங்கிப் படையணிகளின்
உறுதிமிக்க புலிவீரரே
உங்கள் சாதனைகளை
உள்ளத்தில் உயர்வாய்க் கொண்டோம்

உலகோடு கைகோர்த்து
எதிரிகள் தீட்டும் திட்டங்களை
இரகசியமாய் அறிந்து கொண்டு
அறிவியல் ரீதியில் ஆராய்ந்து
அதற்கொரு பதிலடி கொடுக்கவே
அயராது செயலாற்றும்
புலானய்வுப்படை மாவீரரே – நீங்கள்
தலைவர் மனதில் வாழும்
பிறர் அறியாப் பெரும்புதிர்கள்.

பசி மறந்து பயம் துறந்து – தினம்
இருளோடு தமைக்கலந்து
பல தூரம் நடந்து கடந்து
பகை வீட்டின் படம் வரைந்து
இரகசியமாய் உள்நுழைந்து
விரிவான செயலறிந்து – பின்
அசைவேதும் காட்டாது திரும்பி
வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டு
விதையாகிப்போன வேவுப்புலி மாவீரரே – நீங்கள்
வியத்தகு சரித்திரர்கள்.

முகிலோடு முகிலாக
முழுநிலவின் அருகாக
விண்ணேகி விரைந்து – எதிரியை
மண்ணோடு மண்ணாக மடியச்செய்த
வான்புலி மறவர்களே – நீங்கள்
வானெலாம் வாழும் நீலமாய் நிறைந்தீர்கள்.
ஆகாய தீபங்களாய் அகத்தில் ஒளிர்கிறீர்கள் – நாம்
அச்சம் தவிர்த்து வெற்றி குவிக்க
நிச்சயம் உங்கள் நினைவுகளே பலமாகும்

மக்கள் துயர் துடைக்க
மழை வெயில் பாராது உழைத்து
தக்க தருணத்தில் விடுதலை பற்றி
விளங்க வைத்து – தேசப்
பற்றுணர்வைப் பரவச் செய்த
அரசியற்கள அற்பணிப்புத் தீரரே – நீங்கள்
அகிலத்திற்கே எம் போர்க்கதையை எடுத்துச் சென்ற அற்புதர்கள்

மண்ணை மீட்கும் வரை
அன்னம் தீண்ட மாட்டோமென்று
தம்மை உருக்கிக்கொண்டு
முள்ளிவாய்க்கால் எல்லை வரை
மூசியெழுந்த வீரப்புயல்களே
உங்கள் பெயர்களை உறுதி செய்து சொல்ல முடியாத
பாவிகள் நாங்கள் பரிதவிக்கிறோம்.
பாரீரோ?

புலிப்படை அணிகளோடு
போர்த்திடல் மீதில் நின்று
இணையாகச் சமராடி வீழ்ந்த
துணைப்படை மாவீரரே – உங்கள்
கடமையுணர்வும் வீரமும்
காலமுள்ளவரை வாழும்.
ஈழத் தமிழ்த் தேசமதின்
எல்லைகளைக் காவல் செய்ய
இரவு பகல் பாராது பணியேற்று – போர்க்
களத்திடை கண் துயின்ற
எல்லைப் படைத் தீரர்களே
என்றென்றும் உம்மை நினைவிற் கொள்வோம்.

சட்டம் ஒழுங்கைச்
சரிவர நிலைநாட்டி
சமூகசீர்திருத்தங்களின் வழி
மக்களைக் காவல் செய்த
தமிழீழக் காவற்துறை வீரரே – நீர்
தலைவரின் சிந்தனைக்கு
செயல்வடிவமாய்த் திகழ்ந்து
உயிர்ந்த உன்னதர்கள்

பகையை வெல்லப் பாயும் வீரர்
புகலிடமாய்த் திகழ்ந்து
உற்ற சமயத்தில் அவர்கள் துயர் துடைத்து
உதவிக் கரம் நீட்டிய உத்வேகியரே
நாட்டுப்பற்றாளர்களே!
நாளைய வரலாறு உங்களின்
நாமங்களைச் சொல்லும் – பகை
நடுவிலே வாழ்ந்த போதும்
பணிந்திடாக் குணத்துடன்
துணிந்து தமிழீழம் மலருமென்று
துடிப்போடு செயலாற்றிய
மாமனிதரே, மக்களே உங்களை – தாய்
மண்ணுள்ளவரை மறவோம்.
மகத்தான உம் பணியை
மறப்புலிக் காவியம் உரைக்கும்.

தலைவன் இயற்றிய சத்திய வேள்வித்தீ
சற்றும் குறையவில்லை
தணலாகத் தகித்துக் கொதிக்க
சாம்பல் போர்த்திக் காத்திருக்கிறோம்.
சமயம் பார்த்து வெடிக்கும் எரிமலை
சடுதியில் எரிந்து மடியும்
கொடியவர் உயிர்கள் பலவும்.
சத்திய வேள்வியின் சரித்திர நாயகர்களே – நீங்கள்
சாவை வென்ற சான்றோர்கள்
சவால்களை சவாலாகித் தோற்கடித்த
நித்திய பொற்திறங்கள்
நித்திலம் மீதில் முத்தமிழும்
தமிழ்க்குலமும் உள்ளவரை
நித்தம் நித்தம் பொழுது புலரும்
உங்கள் புறம்பாடிக் கொண்டே.
தமிழீழம் மலரும் உங்கள்
தியாகங்கள் போற்றிக்கொண்டே.

.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
.
கலைமகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment