தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது 12 மணியளவில் வரவேற்புச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. திரு திருமதி ஐவரி கரோலின் ஆகியோர் வரவேற்புச் சுடரை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச் சுடரினை அருட்தந்தை திரு ரெஜினோல்ட் அடிகளார் ஏற்றி வைத்தார் தமிழீழத் தேசியக் கொடியினை கேணல் சேரலாதனின் துணைவியார் திருமதி அமலா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தாயகத்தின் மூத்த ஒலிப்பதிவாளர் திரு கிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்.

திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை கப்டன் சூரியத்தே வனின் சகோதரி திருமதி சர்வீனா பார்த்திபன் அவர்களும் மற்றும் கப்டன் முல்லையின் சகோதரி திருமதி உமாதேவி சந்திரமோகன் அவர்களும் அணிவித்தனர்.தொடர்ந்து அகவணக்கம் மலர் வணக்கம் என்பன இடம்பெற்றன. மலர் வணக்கத்தினை மேஜர் அன்பரசனின் சகோதரன் திரு அகலினியன் அவர்கள் தொடக்கி வைத்தார். விழாச் சுடரேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது.


முதல் நிகழ்வாக திருமதி வாணி சர்மா அவர்களின் நெறியாள்கையில் அகடமி ஒப் ஆட்ஸ் நடனப் பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது தொடர்ந்து செந்தமிழ் அருட்சுனைஞர் சிவருசி திரு தர்மலிங்கம் சசிகுமார் அவர்களின் வாழ்த்துரை இடம் பெற்றது. வாழ்த்துரையினை தாயகத் திரைப்பட இயக்குனர் திரு அன்பரசன் நிகழ்த்தினார். தொடர்ந்து அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளாரின் கவிதை இடம்பெற்றது. தொடர்ந்து தாயக இசையமைப்பாளர் திரு முகிலரசன் அவர்களின் நெறியாள்கையில் ராகா கலைக் கல்லூரி மாணவர்களின் “போரிசை”எழுச்சிப்பாடல் நிகழ்வு ஆரம்பமானது.மேலும் “தமிழீழப்பெருங்கவிக்குப் பரணிப் பாமாலை” நிகழ்வு தாயகக் கவிஞர்களால் அரங்கேற்றப்பட்டது. அடுத்து கருத்துரையினை படைப்பாளி திரு. அ.இன்பன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து “போரிசை” பாடல்கள் இடம்பெற்றன.
மதிய உணவு இடைவேளையினைத் தொடர்ந்து இளங்கலைஞர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. திரு.இணுவையூர் மயூரன் அவர்களின் பவளவிழா மலர் அறிமுகவுரையினைத் தொடர்ந்து பவளவிழா மலர் அறிமுகம் இடம்பெற்றது. கரும்புலி மேஜர் சதாவின் சகோதரியும் மேஜர் பண்டாரவன்னியனின் துணைவியுமான திருமதி கோமதி அவர்கள் நூலினை வழங்க கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் உறவினரான திருமதி சுபாஜினி அருளானந்தன் அதனைப் பெற்றுக் கொண்டார் சமநேரத்தில் கவிஞர் பற்றிய காணொளி திரையிடப்பட்டது.
முதன்மைத் தகையோருக்கான நூல் வழங்கலும் சிறப்புப் தகையோருக்கான நூல் வழங்கலும் தொடர்ந்து இடம்பெற்றன.
சிறப்புப் பிரதிகளை Herr. Luc Marof,சமூக சேவை ஆர்வலர் Herr. Bernhard Lerch, Mitglied des TKG( Tamil Kultur Zentrum Glarus) அங்கத்தவர், தமிழ்க் கலாச்சார மன்றம், கிளாறவுஸ். Marcel Bossonnet, Rechtsanwalt, Zürich, Swiss, திரு. S.சதீஸ், திரு, B.ரமணன், திருமதி. நந்தினி, திருமதி. சாமினி திருமதி வேணி , இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் ஆகியோரும் தேசப்பற்றாளர்கள் பலரும் பெற்றுக்கொண்டனர்.

நூல் வெளியீட்டுரையினை ஊடகவியலாளரும் நூல் வெளியீட்டுக் குழுச் செயற்பாட்டாளருமான திரு பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். சிறப்புரையினை விடுதலைப்புலிகள் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ரவி அவர்கள் நிகழ்த்தினார். ஊடகவியலாளரும் நூல் வெளியீட்டுக் குழுச் செயற்பாட்டாளருமான திரு கனகரவி அவர்கள் நூலின் ஆய்வுரையினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நிதர்சனம் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட “புரட்சிப் பா முதல்வன்” ஒளி ஆவணம் மற்றும் பிரான்ஸ் கலை பண்பாடுக் கழக உருவாக்கத்தில் வெளிவந்த “புதுவையின் புதுமை” இசைப்பேழை ஆகியன அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. தாயகத்தின் மூத்த ஒலிப்பதிவாளர் திரு. கிருபா அவர்கள் இப் பிரதிகளை வழங்க மாவீரர் கேணல் நாகேஷ் அவர்களின் மகள் செல்வி தேனுஜா பெற்றுக்கொண்டார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் பற்றிய டொச் மொழியிலான உரையை செல்வி தீபிகா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து ராகா கலைக் கல்லூரி மாணவர்களின் “போரிசைப் பாடல்கள் இடம்பெற்றன தொடர்ந்து அகடமி ஒப் ஆட்ஸ் நடனப் பள்ளி மாணவர்களின் “தேடலின் ஆத்மராகம்” நடனம் இடம்பெற்றது.
தமிழீழத் தேசியக் கவிஞரின் உறவினரான திரு அருளானந்தனின் கவிதையினைத் தொடர்ந்து போரிசைப் பாடல்கள் சில அரங்கேறின. நிறைவாக நன்றியுரையினைத் தமிழீழத் தேசியப் பாடகியும் படைப்பாளியுமான திருமதி மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தினார். சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் கலைஞர்கள்,தேசப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், முன்னாள்ப் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். “நம்புங்கள் தமிழீழம்” பாடல் இசைக்கவிடப்பட்டபின் தமிழீழத்தேசியக் கொடி கையேற்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.















