இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில்
இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியானது 26.05.2024 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது.
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ்கிளையினால் நடாத்தப்பட்ட போட்டியானது பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வைப் பேணவும், மாவீரர்களின் வீரவரலாறுகள், தியாகங்களைப் பாதுகாத்து கடத்தவும், தாயகம் நோக்கிய தேடலை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இப் போட்டியில் மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் 4 பேர் 6 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டின் முதல் வெளியரங்கச் சுற்றுப் போட்டியில் பல நூறு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ்கிளை


















