சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.




14:30 மணிக்கு மங்கலவிளக்கேற்றலுடன் தொடங்கிய இவ்விழாவில் மாநில இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள், இளையோர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் என இருநூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். தமிழ்மனையை தமிழ்க்கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கந்தசாமி பார்த்திபன் அவர்கள் நாடாவினை வெட்டித் திறந்துவைத்தார்.





விழாச்சுடரேற்றல், பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் ஆகியவற்றினைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் தமிழ்மனை தொடர்பான அறிமுக உரையினை வழங்கினார்.





தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. வருகை தந்த அனைவருக்கும் பால், கற்கண்டுடன் தமிழ்மனையில் பொங்கிய பொங்கலும் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன. தமிழ்மனை திறப்புவிழாவின் நினைவாக திருவள்ளுவப்பெருந்தகையின் உருவச்சிலையும் திருக்குறளினது பெருமையை விளக்கி தமிழ், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிடப்பெற்ற குறிப்பும் வழங்கப்பெற்றன.


இரண்டு தளங்கள் கொண்ட தமிழ்மனையின் மேற்தளத்தில் தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளான அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம், வுநுளுளு உயசநஇ சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம், மொழி கலை பண்பாட்டு நிறுவகம் ஆகிய அமைப்புகளின் பணியகங்கள் செயற்படவுள்ளன. மாணவர்கள், இளையோர், வளர்ந்தோர் பயன்பெறும் வகையில் நூலகமும் அமையப்பெறவுள்ளது. இதனைவிட 150 பேர் இருக்கக்கூடிய மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தில் வகுப்புகள், நூல் வெளியீடுகள், கலந்துரையாடல்கள், தேர்வுகள் போன்றவற்றை நிகழ்த்துவதற்கான வசதிகள் உள்ளன. கீழ்த்;தளம் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பெறவுள்ளது.


சுவிற்சர்லாந்தில் தமிழுக்கான தளமாகச் செயற்படவுள்ள தமிழ்மனையின் கொள்வனவுக்காக மனமுவந்து நிதி நன்கொடையினை வழங்கிய மற்றும் இதன் உருவாக்கத்துக்குப் பல்வேறுவகையிலும் பங்களிப்பு நல்கிய அனைவரும் போற்றுதற்குரியவர்கள். இத்தமிழ்மனைக்கான கட்டடத்தினைக் கொள்வனவு செய்வதற்காகக் கடனாகப்பெறப்பட்ட நிதியை மீளளிப்பதற்காக கொடையாளரிடமிருந்து நிதி நன்கொடையினை எதிர்பார்க்கின்றோம். இவ் வரலாற்றுப்பணியில் இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


தமிழ்மனையை எண்ணம்போல் அணிசெய்யவும் திறப்புவிழாவைத் திட்டமிட்டவாறு சிறப்பாக நடாத்துவதற்கும் பல்வேறு வழிகளில் உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவைக் குடும்பம் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.







