உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்(கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)தற்போது பழ நெடுமாறன் அவர்கள் சற்று உடல் நலம் குன்றி ஓய்வெடுத்து வந்தாலும்
தற்போதை தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக விளங்கும் தமிழக ஆளுனர் தொடர்பான விடயம் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கீழே காணப்படும் தனது செய்தியை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார். மக்களுக்காக தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவற்றை ஏற்ற ஒப்புயர்வற்றத் தலைவரும், தமிழ்நாட்டு மக்களால் மிக மதித்துக் கொண்டாடப்படுபவருமான தியாக சீலர் என். சங்கரய்யா அவர்களுக்கு பெருமையுறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு, ஆட்சி மன்ற உயர்க் குழு ஆகியவை ஒரே மனதுடன் முடிவு செய்தன. பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் என். ரவி அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார்.
பல்கலைக்கழகத்தின் இரு குழுக்களும் மீண்டும் அத்தீர்மானத்தை நிறைவேற்றி அவருக்கு அனுப்பி வைத்ததோடு துணை வேந்தரும் பதிவாளரும் நேரடியாகச் சென்று ஆளுநரைச் சந்தித்து வேண்டிக்கொண்டனர்.
தமிழக உயர் கல்வி அமைச்சரும் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி அவர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஒரு முறைக்கு இருமுறை ஆளுநரை வேண்டிக் கொண்டார்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி பெருமையுறு முனைவர் பட்டமளிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்திற்கே உண்டு. ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால் அப்பட்டத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் கையொப்பம் இட வேண்டும். அத்துடன் இப்பட்டத்தினை தியாக சீலர் சங்கரய்யாவுக்கு வழங்கி அவரைப் பெருமைப்படுத்த வேண்டும். ஆனால் தனது பதவிக்குரிய மாண்பினைச் சற்றும் உணராத நிலையில் ஆளுநர் நடந்து கொண்டது அவரது சிந்தனை வறட்சியையும் சிறுமைத்தனத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டி மக்கள் முன்னால் அவரை அம்பலப்படுத்திவிட்டது.
தனது செயலுக்கு உரிய காரணம் எதையும் ஆளுநர் இது வரை கூற மறுத்திருப்பது அவரது மமதைக்கு சரியான எடுத்துக்காட்டாகும்.இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தையும் அதில் ஈடுபட்டு எண்ணற்ற தியாகம் செய்தவர்களையும் ஆர். எஸ். எஸ். அமைப்பு ஒரு போதும் மதித்ததில்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு எதுவும் கிடையாது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஆளுநர் ரவியின் தொடர் நடவடிக்கைகள் பலவும் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளன. ஆளுநரின் அற்பச் செயலின் மூலம் தியாக சீலர் சங்கரய்யா அவர்களின் பெருமை அணு அளவும் குறைந்துவிடவில்லை. திரு. சங்கரய்யா அவர்களுக்கு பெருமையுறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருந்தால் அப்பட்டத்திற்கு மேலும் பெருமை கூடியிருக்கும். அந்தச் சிறப்பினை ஆளுநர் தனது எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகச் சீர்குலைத்திருப்பதின் மூலம் ஆளுநர் பதவிகள் தேவையற்றவை என்ற கருத்தோட்டத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறார். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதியாக ஆளுநர் பதவியை ஒழிப்பது குறித்து அறிவிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)தலைவர்.
உலகத் தமிழர் பேரமைப்புWorld Tamil Confederation(Registration No. AAATU4567GE2021501)சென்னை அலுவலகம்: 6, தெற்கு மதகுத் தெரு, கோட்டூர்புரம், சென்னை – 600 085முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார் சாலை, தஞ்சாவூர் – 613 006.தொலைப்பேசி: 04362-255044&worldtamilconfederation@gmail.com