சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்நான்காவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் குளிர்காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.
06.03.2023 திங்கள் அன்று பிற்பகல் 14:15 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை ஒலித்ததோடு மட்டுமன்றி தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்புசார்ந்த வெளிப்பாடுகளை எடுத்துரைத்த வண்ணமிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளைப்பொறுப்பாளர் திரு. இராசன் அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் திரு. ரகு அவர்களினால் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடிவுக்காக தம்மையே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்;மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.











புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்கள், தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடன் அவர்களால் பேச்சுக்கள் வழங்கப்பட்டதுடன், இவ் ஒன்றுகூடலிற்கான பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அத்துடன் பின்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், யேர்மனி மற்றும் சுவிஸ் வாழ் குர்திஸ்தான் அமைப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்ததுடன் தமிழின அழிப்புச் சார்ந்தும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் மிகவும் தெளிவாகத் தமது உரைகளில் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இவ் ஒன்றுகூடலில், பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐ.நா நோக்கிப் பயணித்த மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் சார்ந்தும் வலியுறுத்திப் பேசப்பட்டது.































குளிர்;காலச் சூழலிற்கு மத்தியிலும் கலந்து கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்ததோடு, சிங்களப் பேரினவாத அரசினால் அரங்கேற்றி வருகின்ற தமிழின அழிப்பினை உலகரங்கில் முன்வைத்து எமக்கான நீதியும், இறைமையும் கொண்ட தமிழீழத் தேசம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன், தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் கலைந்து சென்றனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு