ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
காலப்பெருவோட்டத்தில் இன்னுமோர் கிரெகொரி ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. ஆண்டுகள் உருண்டோடினும் எமக்கான பொறுப்பும் கடமையும் என்றும் மாறாதவையே. விடுதலையை வேண்டிநிற்கும் எம்மினத்திற்கு தமிழ்மொழியே சிறந்த பேராயுதமாகும். எம்மிளந்தலைமுறைக்கு இனத்தின் வரலாற்றையும் வேட்கையையும் தாய் மொழியிலேயே எடுத்தியம்புவது பொருத்தமானதும் கூட. எனவே, நீண்டு நிலைத்து நிற்க வேண்டிய தமிழ்மொழிக்காக எமது சேவையும் உழைப்பும் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரப்படவேண்டியது காலத்தின் பெருவிருப்பாகும்.
பிறந்திருக்கும் இவ்வாங்கிலப் புத்தாண்டு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திற்கு வெள்ளிவிழா ஆண்டாகும். கால்நூற்றாண்டைக் கடந்து பயணிக்கும் எமக்குமுன் விரிந்திருக்கும் கடமைகளும் பொறுப்பும் கனமானதே. இத்தனை ஆண்டுகளாகப் பேணிக்காக்கப்பட்ட வரலாற்றுப் பெரும்கடமையை இன்னும் காலம்கடந்தும் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குள. புத்திளந்தலைமுறையினரும் எம் தாய்மொழிக்குச் சேவையாற்றத் தொடங்கியிருக்கும் நிலையில் அவர்களின் புத்தறிவுகளையும் புத்தூக்கங்களையும் பெற்றுக்கொண்டு தமிழினச்சிறார்களை மொழிப்படுத்தவும் வழிப்படுத்தவும் வேண்டிய காலக்கடமை எமக்குள.
கால்நூற்றாண்டாய் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து உழைத்துச் சேவையாற்றிய அனைத்து தமிழார்வலர்களையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றியிடன் நினைவுகூர்கிறது. இனிவரும் காலத்தேயும் கைகோர்த்துப் பயணிக்கும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் கரம்பற்றி நிற்கிறது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.
அனைவருக்கும் எமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
காலம் உருண்டோடினும் கடமை திரண்டுநிற்கும்!