குடிப்பெயர்வு அல்லது புலம்பெயர்வு என்பது பெரும்பாலும் வலியுடன் நேரும் செயலாக அமைந்திருக்கும். குடிப்பெயர்வு தொழில் அல்லது கல்வியுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அரசியல் அல்லது நிர்வாகப்பகுதியில் இருந்து கடந்து சென்று குறித்தகாலத்தில் வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஏதிலிகளாக நாட்டைவிட்டுப் புலம்பெயர்வது இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், சமயத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், சமூக- வர்க்க வேறுபாட்டின் பெயரால் அல்லது பிற கொடுமையான சூழலில் உயிருக்கு உடமைக்கு பாதுகாப்பு அற்று தான் வாழும் மண்ணை விட்டு பெயர்த்து எறியப்படுவதாகும்.
குடும்பங்கள், உற்றார், உறவினர், வாழும் சூழல் அனைத்தையும்;விட்டு வழக்கமான வாழ்வியலை விட்டு ஈழத்தமிழர்கள் உலகம் எல்லாம் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள். அதேவேளை போர்க்காலத்தில் உட்புற புலம்பெயர்ந்து நாட்டிற்குள் அகதிகளாக வலியுடன் வாழ்வுக்குப் போராடும் சூழலையும் ஈழத்தமிழர்கள் அறிவோம்.
இளவயதில் குடும்பத்துடன் அகதியாக அல்லது தனித்தோ தன்னார்வமற்ற அல்லது கட்டயாப் படுத்தப்பட்ட புலப்பெயர்விற்கும் தமிழர்கள் நாம் ஆளாகக்ப்பட்டோம். தாயும் தந்தையும் அல்லது தந்தை அல்லது தாய்மட்டும் புலம்பெயர்ந்ததும் அதனால் குழந்தைகள் தூண்டப்பட்ட புலப்பெயர்விற்கு ஆளானதும் எம்மினத்தில் நடந்திருக்கின்றது.
ஈத்திலிருந்து தமிழகம் சென்று படி புலம் பெயர்வு எனும் வகையில் தன் பிறந்த இடத்தை விட்டு வெகு தொலைவு இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, கிறீஸ், இத்தாலி, பிற ஐரோப்பிய நாடுகள் என நகர்ந்து படிப்படியாகப் புலம்பெயர்ந்து ஐரோப்பாவின் பல் பகுதிகளிலும் இன்று பல்நாட்டுக் குடியுரிமையுடன் வாழும் மனிதர்களாகவும் ஈழத்தமிழர்கள் உள்ளோம்.
இவ்வழியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் சங்கிலி புலம்பெயர்விற்கும் வழிசெய்துள்ளோம். முதலில் புலம்பெயர்ந்த ஒருவர் தனது முழுக்குடும்ப உறவுகளையும் தான் வாழும் பாதுகாப்பான நாட்டிற்கு வரவழைத்து தம் தாயகத்திற்கு வெளியில் பொருளாதார, சமூக, அரசியல் வாழ்வினை வடிவமைத்திருக்கும் இனமாகவும் தமிழர்கள் நாம் விளங்குகின்றோம்.
தாயத்தில் தமிழர்கள் உரிமைக்குப் போராடிய காலத்தில் புலம்பெயர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒற்றுமையும் வேற்றுமையும் இருந்திருந்தது. தாயத்தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இன்று இலங்கையின் போருக்குப்பின்னரான சூழல் நாட்டில் உள்ள எந்த இனத்திற்கும் தொடர்ந்து சிறப்பாக வாழக்கூடிய சூழலை கொடுக்கவில்லை. போர் மௌனிக்கப்பட்டபின்னரும் ஈழத்தமிழர்களின் அரசியில் உரிமை உரிய முறையில் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. பெரும்போர் இனவெறியில் முதலீடு செய்த இலங்கையின் இனவாத அரசியலின் பெறுபேறு இன்று நாட்டினை அதளபாதாளத்தில் தள்ளி உள்ளது. கற்ற கல்வியுடன் தொழில் பெற்று பயிணின் நிமித்தம் புலம்பெயர்வது தாண்டி, புலம் பெயர் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் புலம்பெயரும் சூழலே இலங்கையில் இன்று காணப்படுகின்றது. அரசியல் தஞ்சம்கோரிய தமிழர்கள் இன்று பொருளாதார புலம்பெயர் தொழிலாளர்களாகவும் உள்ளோம்.
இளம்வயதில் புலம்பெயர்வது என்பது ஒவ்வொரு தனிமனிதனிற்குள்ளும் குடிப்பெயர்வு நடந்த இடத்திலும், நுழைவு இடத்திலும் பொருளாதார, சமூக, பண்பாட்டு மற்றும் உளவியல் மாற்றத்தினை ஏற்படுத்தும். பெரும் இனஅழிப்பு பேரிடரும், இயற்கைப் பேரிடரும் புலம்பெயர் தமிழர்களது வாழ்வியலில் பல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியில் நீண்டகாலம் ஆவணப்பட இயக்குனராகவும், நிகழ்ச்சி ஒருங்ணைப்பாளர் மற்றும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துவருபவர் திருமதி. ரேகா சர்மா ஆவார். இவரது தந்தை குடிபெயர்ந்த இந்தியர் ஆவார். ஏதிலியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் சாவல்களை வென்ற மனிதர்களைத்தேடி ஆவணப்படம் தயாரிக்க வேண்டும் என திருமதி. ரேகா சர்மாக எண்ணம் கொண்டிருந்தார்.
இவ்வகையில் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் 1989ம் ஆண்டு தனது 14வது வயதில் தனியாக சுவிற்சர்லாந்திற்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரிய ஒரு ஈழத்தமிழர், நெருக்கடி நிலையயிருந்துகொண்டு, தனிப்பட்ட வாழ்வுச் சுமைகயினை சுமந்துகொண்டு, சமூகப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். நுழைந்த நாட்டு மொழியினைக் கற்றுக்கொண்டதுடன் தன்வாழ்வில் முன்னே;றம் காணவும் தனது இனம், மொழி, சமயம், பண்பாடு செழிக்கவும் உழைத்திருக்கின்றார் எனும் அடிப்படையில் இவரது வாழ்வியலை ஆவணப்படமாகத் தொகுத்து வலையொளியில் வெளியிட்டுள்ளார்.
வளரும் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து, தனது புலம்பெயர் வாழ்வில் தான் எதிர்கொண்ட சாவல்களை வெற்றிகண்டு, பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வுகள் கண்டு, திறமையான வகையில் சீர்திருத்தத்தை வடிவமைத்து, புலம்பெயர் தமிழினம் எதிர்கொள்ளும் உள்ளார்ந்த அரசியல், பண்பாட்டு மற்றும் சமூகவிளைகளை இனத்தின் நலனிற்கு பயன்படுத்தி பொறுப்புள்ள தமிழனாவும் சிவருசி. சசிக்குமார் ஏணிதொட்டுள்ளார் என்பது மகிழ்விற்குரியதே!
தொகுப்பு: சிவமகிழி