29-01-2022
ஊடக அறிக்கை
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிமுயற்சியை முறியடிக்க 30-01-2022 இடம்பெறும் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கை தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய 1948 தொடக்கம் இன்று வரை நடைமுறையில் இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட ஒன்றையாட்சி அரசியல் யாப்புக்களானவை, தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைக்கும், நிலப்பறிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்கள் உள்ளிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் காரணமாக அமைந்துவந்தன. அதன் காரணமாகவே தமிழர்கள் நாம் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி ஆட்சியை கோரி போராடி வந்துள்ளோம்.
இப் போராட்டப் பயணத்தின் இடையில் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி, 1987ஆம் ஆண்டு ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் கடந்தும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டு 44 வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி இலங்கைக்கான 4வது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில் கடந்த 34வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகளால் கோரப்பட்டுள்ளது. இச் செயற்பாடு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிமுயற்சியாகும். இச் சதிமுயற்சியை முறியடிக்கவும் தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணயமுள்ள சமஸ்டித்தீவை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி இடம்பெறுகின்றது. இப் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
காலம்: 30-01-2022 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மு.ப 10.00 மணி
பேரணி ஆரம்பம்: யாழ். நல்லூர் கந்தன் வீதி
பொதுக் கூட்டம் : கிட்டு பூங்கா முத்திரைச்சந்தி நல்லூர்
அரசியல் உரிமைகளை வலியுறுத்தும் 2022.01.30 ஆம் திகதிய பேரணிக்கான ஆதரவைக் கோருதல்.
1978 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை அதிகாரங்களானவை ஒருபோதும் பாராதீனப்படுத்த முடியாதவை, பகிர்ந்தளிக்கப்பட முடியாதவையாகும். இதன் காரணமாகவே 1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் அதனை நிராகரித்து அதன் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதய சிரேஸ்ட உபதலைவராக இருந்த இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்த தலைவர் திரு.இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் கையொப்பமிட்டு கடந்த 28-10-1987 திகதி இந்தியப் பிரதமருக்கான கடிதம் அனுப்பியிருந்தனர். அதுமட்டுமன்றி 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த தீர்வு யோசனைகளை எதிர்த்து நாடளுமன்றத்தில் பேசிய திரு.சம்பந்தன் 13 ஐ தும்புத்தடியாலும் தொட்டுகூடப் பார்க்க மாட்டோம் என்று கூறியிருந்தார். அந்த விவாதத்தின்போது 13 இன் குறைபாடுகள் பற்றியும் சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.
1987 இல் தமிழர்களுக்கான தீர்வு என்னும் பெயரில், 13ஆம் திருத்தச்சட்டம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் புகுத்தப்பட்டு, 34 வருடங்களாக நடைமுறையிலிருந்தும், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கியிருக்கவில்லை. இவ்வாறானதொரு 13 ஆம் திருத்தச்சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த, இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை கோரும்; கடிதத்தை, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அதன் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ந.சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி இணைந்து தயாரித்து, கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
சர்வதேச சமூகமானது, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென இலங்கை அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது. அத்தகைய சர்வதேச நெருக்கடி காரணமாகவே, கடந்த அரசு 2016 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பினைத் தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தது. தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே, புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான குழுவினை கடந்த 2020 இறுதியில் நியமித்திருந்தார். அந்தக் குழுவின் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான வரைபை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிலையில் – தமிழ்த் தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமையை ஏற்று சமஸ்டித் தீர்வை அங்கீகரிக்கும், புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளால் இலங்கை மீது அழுத்தம் பிரயோக்கிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அது நடைபெற்றிருக்கவில்லை.
அதற்கு நேர்மாறாக, 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிராந்திய வல்லரசு நாட்டின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், கோட்டா அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தத்திலுள்ள விடயங்கள் உள்ளடக்கப்படும் போது, அத்தகைய யாப்பினை ஆதரிக்காமல் இருக்க முடியாதென, மக்களை ஏமாற்றுவதற்காகவே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பு பராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரும்போது, மேற்படி தமிழ்த் தரப்புக் கோரிக்கையே அந்த யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக காட்டி, மேற்படி கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும், அதனை ஏற்று ஆதரித்து வாக்களிக்கத் தயாராகியுள்ள சூழ்ச்சியையே குறித்த கடிதம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இவர்கள் நடைமுறைப்படுத்தக் கோரும் 13ஆம் திருத்தச் சட்டத்தில், அரச காணி அதிகாரமோ, பொலிஸ் அதிகாரமோ, நிதியைக் கையாளும் அதிகாரமோ மாகாண சபைக்கு கிடையாது. மாகாண நிதிக் கட்டுப்பாட்டைக் கொண்டிராததும், மாகாண திட்டமிடல் கட்டுப்பாட்டினைக் கொண்டிராததும், மாகாண அரச சேவையின் மீது கட்டுப்பாட்டினைக் கொண்டிராததும் மற்றும் ஆளுநருக்கு ஊழியம் செய்ய வேண்டிய சட்டபூர்வ கடப்பாட்டினைக்
கொண்டதுமான – அமைச்சு அதிகாரமற்ற – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் கொண்ட சபையே 13ஆம் திருத்தத்தின் கீழான மாகாண சபைகளாகும்.
13வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுதப்பட்ட மாகாண சபையின் அமைச்சர்களுக்கு, அமைச்சு அதிகாரங்கள் கூட வழங்கப்படவில்லை. அமைச்சு அதிகாரங்களனைத்தும் ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஆளுநருடன் இணங்கிப் போகாவிடில் ஜனாதிபதி குறித்த மாகாண சபையை பொறுப்பேற்கலாம். சுருங்கக்கூறின் மாகாணசபை அதிகாரத்தின் மூலம், முதலமைச்சருக்கான இருக்கையை வாங்குவதற்கும், தேநீர் குடிப்பதற்கான செலவை ஈடுசெய்வதற்கும் கூட, ஆளுநரின் அனுமதியை பெறவேண்டிய நிலையிலேயே முதலமைச்சருக்கான அதிகாரங்களைக் கொண்டுள்ள மாகாணசபை, ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்க முடியாது.
போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தும், அழிவிலிருந்து மீண்டெழுவதற்கு முடியாதவாறு தமிழ்த் தேசத்தில் மீன்பிடித்துறை, விவசாயத்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு முடக்கியும் ஆக்கிரமித்தும் வைத்துள்ளது.
இவ்வாறான நிலையில், கடந்த 34 வருடங்களாக நடைமுறையிலுள்ள, தோல்வியடைந்த, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளமையானது, தமிழ் மக்களின் எதிர்காலத்தை பேரினவாதத்திற்கு நிரந்தரமாக அடிமையாக்கும் சூழ்ச்சியாகும். இச்சதிமுயற்சியை முறியடிப்பதற்காக விழிப்படைய வேண்டியது அனைத்து தமிழ் மக்களதும் வரலாற்றுக் கடமையாகும்.
அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த ;சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி
30-01-2022 (ஞாயிற்றுக்கிழமை) யாழ். நல்லூர் ஆலய வீதியில் ஆரம்பமாகி கிட்டு பூங்கா நோக்கி இடம்பெறவுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்தும் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு வலுச் சேர்க்குமாறும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பா.உ) செல்வராசா கஜேந்திரன் (பா.உ)
தலைவர் பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
