நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் புகையிரதவீதிகள், பெருந்தொருக்கள் துறை பொறியாளர்களுக்கும் பிரக்ஞை இருத்தல் வேண்டும் – கஜேந்திரன் எம்பி

0 0
Read Time:28 Minute, 14 Second

இன்று 4-12-2021 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம் வருமாறு.

வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர்களதும் துணைசார்ந்த உத்தியோகர்தர்களதும் கவனத்திற்கு சில விடயங்களைக் கொண்டுவர விரும்புகின்றேன்.

நிலைபேறான அபிவிருத்தி என்பதில் புகையிரதவீதிகள், பெருந்தொருக்கள் மற்றும் கிராமிய வீதிகள் என்பனவற்றின் அபிவிருத்தியும், போக்குவரத்தும் மிக அடிப்படையான ஒன்றாக காணப்படுகின்றது. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாக உள்ளது.

அந்த வகையில் இந்த நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவானது வெறுமனே, நகர அபிவிருத்தி திட்டமிடல் துறை சார்ந்தவர்களிடம் மட்டும் இருந்தால் போதாது. மாறாக இந்த வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு அபிவிருத்தி தொடர்பானவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் உள்ளுர் வீதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் தொழினுட்ப உத்தியோகத்தர்களிடமும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் தெளிவும் பிரக்ஞையும் கொண்டிருத்தல் வேண்டுமென்பதனை நாம் அனுபவ ரீதியாக உணர்கின்றோம்.

அவ்வாறில்லாது புகையிரத வீதிகள், நெடுஞ்சாலைகள், மற்றும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும்போது மழை வெள்ளப்பெருக்கின்றோது எமது சமூகம் பாரதூரமான அழிவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

தென்னிலங்கையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்கில் இவ்வாறான பாதிப்புக்களை நாம் நடைமுறை ரீதியாகச் சந்தித்துள்ளோம்.

குறிப்பாக 2009 இல் இனவழிப்பு மூலம் உங்களால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், வடக்கு புகையிரதவீதி அபிவிருத்தியானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு புகையிரதவீதி அமைக்கும்போது, நீர்த்தேக்கங்களது அணைபோன்று பல இடங்களில் அணைகள் போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாரிய அணைகளை அமைத்து புகையிரத வீதியை அமைக்கும்போது, எத்தகைய அமைவிடத்தினூடாக அந்த வீதி அமைக்கப்படுகின்றது, மழைவெள்ளம் வரும்போது அந்த வெள்ளம் எப்படி வெளியேறிச் செல்லும் என்பது தொடர்பான எந்தவித திட்டமிடல்களோ, சிந்தனையோ இல்லாமல் புகையிரத வீதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வெள்ள அழிவுகளுக்கு வடக்கு மாகாணம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதே போன்றுதான் வீதி அபிவிருத்தியிலும் இவ்வாறான தவறுகள் நடைபெற்றிருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து துறைசார்ந்த அமைச்சர்கள் இந்த வெள்ள அனர்த்தம் தொடர்பிலும் அவற்றை வெளியேற்றும் வடிகாலமைப்புத் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென மிகவும் விநயமாக வேண்டுகின்றேன்.

அடுத்து அவசரமாக திருத்தப்பட வேண்டிய வீதிகள் பாலங்கள் தொடர்பில் சில தரவுகளை இங்கு முன்வைக்கின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா கிராமத்தற்குள் செல்லும் உள்ளக வீதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் மோசான முறையில் கொங்கிறீற் இடப்பட்டுள்ளது. வீதி முழுவதற்கும் கொங்கிறீற் இடப்படாது, வாகனங்களது இரண்டு சக்கரங்களும் செல்லம் தடத்திற்கு மட்டும் கொங்கிறீற் இடப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளம் காரணமாக வீதியின் நடுப்பகுதி மற்றும் இரு மருங்குகளும் முற்றாக அரித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் மோட்டார் சைக்கிள்களோ, வாகனங்களோ செல்ல முடியாத நிலை பல வருடங்களாக ஏற்பட்டுள்ளது. இவ்வீதி தொடர்பில் உடனடியாக உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
காஞசிரங்குடாவிலிருந்து – சிறுவள்ளிபுரம் ஊடாக கஞ்சிகுடிச்சாறு செல்லும் வீதி மோசமாகச் சேதமடைந்துள்ளது. இதனையும்; உடனடியாக செப்பனிடல் வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிண்ணையடித்துறையிலிருந்து முருக்கன்தீவு செல்லும் பாதை 5கி.மீற்றர் செப்பனிடப்படல் வேண்டும்.

கிண்ணையடித் துறை ஆற்றைக் கடப்பதற்காக பாலம் இல்லாத காரணத்தால் மக்கள் தோணிகளைப் பயன்படுத்தியே ஆற்றைக் கடக்கின்றார்கள். எனினும் பயணம் செய்வதற்கு தோணியைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாகவே மக்கள் ஆபத்து நிறைந்த அந்தப் பயணத்தை மக்கள் மேற்கொள்கின்றார்கள். அவர்களது பயணத்திற்காக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நான்கு தோணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்திருந்தேன். பிரதேச செயலகம் அந்த நிதியில் நான்கு தோணிகளை வாங்கியது. அதனை நாம் கடந்த மாதம் கையளித்திருந்தோம். எனினும் தோணியில் மாணவர்களும் மக்களும் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன், அந்த ஆற்றிற்கு மேலாக பாலம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அண்மையில் கிண்ணியாவில் படகு விபத்து ஏற்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு பாலத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கிரான் சந்தியிலிருந்து குடும்பிமலை ஊடாக மயிலத்தமடு செல்லும் 35 கி.மீற்றர் நீளமான வீதி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லை. போர் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வீதி திருத்தப்படவில்லை. அந்த பாதையூடாக கிரானிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் மயிலத்தமடுவிற்கு மேற்சலிற்காக கொண்டு செல்லப்படுவதுண்டு. அந்தப் பண்ணையாளர்கள் மாடுப்பாலை நகரத்திற்குக் கொண்டுவருவதற்கு குன்றும் குழியுமாக உள்ள வீதியூடாக நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேரவிரயம் காரணமாக பால் பழுதடையும் நிலை காணப்படுகிறது. அதேபோன்று விவசாயிகளும் வீதி இன்மையினால் மோசமாகப் பாதி;க்கப்படுகின்றார்கள். இவ்வீதியும் உடனடியாக திருத்தப்படல் வேண்டும்.

பெண்டுகள்சேனை – முறுத்தானை – அக்குரiணை செல்லும் வீதியும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. ஐம்பது வருடங்களுக்கு மேலாகத் திருத்தப்படவில்லை. இதனால் விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த வீதியும் உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.

வாகரையிலிருந்து – ஓமடியாமடு செல்லும் வீதியும் அவ்வீதியிலுள்ள பாலங்களும் திருத்தப்படல் வேண்டுமென்பதுடன் றெயித்தனை சந்தியிலிருந்து – மடியாமடு செல்லும் 10 கிலோ மீற்றர் நீளமான வீதி உடனடியாக திருத்தப்படல் வேண்டும். இவ்வீதிகள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றது.

இதுபோன்று திருகோணமலை மாவட்டத்தில்
வெருகல் கற்பட்டியிலிருந்து – பெரியகல்லரிப்பு வரை செல்லும் 7 கி.மீற்றர் நீளமான வீதி திருத்தப்படல் வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் இந்த வீதி சேறும் சகதியுமாக மோசமாகச் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் பசளை மருந்துகளை எடுத்துச் செல்வதற்கும், அறுவடை செய்யும் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும் முடியாதளவுக்கு வீதி சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இவ்வீதி உடனடியாக திருத்தப்படல் வேண்டும்.

அதேபோன்று வெருகல் பிரதேச செயலகத்திற்கு அண்மையிலுள்ள சூரநகர் சந்தியிலிருந்து வெருகல் முகத்துவாரம் மகாவலிகங்கை வரையும் மற்றும் கல்லடி வரையும் செல்லும் 6 கி.மீற்றர் நீளமான வீதி உடனடியாக செப்பனிடப்படல் வேண்டும்.

அத்துடன் மூதூர் கட்டைப்பறிச்சானுக்கும் – மூதூருக்கும் இடையிலான கட்டைப்பறிச்சான் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அது தொடர்பில் கடந்த ஏப்பிரல் மாதம் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளேன். எனினும் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எதுவும் தெரியாது. இப்பாலத்தினை திருத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று கட்டைப்பறிச்சான சின்னபாலம் அல்லது றால்பாலம் எனப்படும் பாலம் 60 வருடங்களுக்கு முன்னர் குழாய்கள் வைத்து கொங்கிறீற் இடப்பட்டது. தற்போது அந்தக் குழாய்கள் சேதமடைந்து பாலம் தாழிறங்கியுள்ளது. அதனால் மழைவெள்ளம் பெருகும்போது பாலத்திற்கு மேலாக 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்கின்றது. கடந்த மாதம் மழை காரணமாக வெள்ளம் பாலத்தை மூடிப்பாய்ந்து கொண்டிருந்தபோது, அப்பாலம் ஊடாகச் சென்ற மாட்டுவண்டியின் மாடுகள் அச்சமடைந்து திமிறியதால் பாலத்தினுள் வீழ்ந்து மாடுகள் இந்துவிட்டன. ஓட்டிச்சென்றவர் மயிரிழையில் உயிர்தப்பினார். ஆகவே இப்பாலமும் உடனடியாக திருத்தப்படல் வேண்டும்.

மூதூர் அம்மன் நகரிலிருந்து – கிணாந்திமலை பாலம் வரை செல்லும் 1 மூன்றரை கிலோ மீற்றர் வீதி கடந்த 40 வருடங்களாக திருத்தப்படவில்லை.
ஈச்சிலம்பற்று சந்தியிலிருந்து – இலங்கைத்துறைமுகத்துவாரம் வரையான 4 கி.மீற்றர் நீளமான வீதியும்,
சந்தோசபுரத்திலிருந்து – உப்பூறல் பிரதான வீதி 10 கி.மீற்றர் நீளமான வீதி கடந்த 40 வருடங்களாக திருத்தப்படவில்லை.
இவ்வீதிகளும் உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும், கும்புறுப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் தென்னமரவாடியிலிருந்து அக்கரை கொக்குத்தொடுவாய் செல்லும் வீதி 4 கி.மீற்றர் நீளத்திற்கு வீதி இன்மையினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றார்கள். வயலுக்குத் தேவையான பசளை மற்றும் பொருட்களை தலையில் சுமந்தவாறும் படகுகள் மூலமும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அறுவடை செய்யும் நெல் மூடைகளையும் தலையில் சுமந்து படகுகளில் ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே இவ்வீதியும் உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.

திருகோணமலையயும் – முல்லைத்தீவையும் இணைக்கும் வகையில் கொக்குளாய்க்கும் – புல்மோட்டைக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படல் வேண்டும். இந்தக் கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாயிலிருந்து – பறையனாறு வரை செல்லும் 16 கி.மீற்றர் நீளமான வீதி புனரமைக்கப்படல் வேண்டும். இப்பாதையில் மூன்று பாலங்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வீதி திருத்தம் இன்னமும் நடைபெறவில்லை. இந்த வீதி ஓர் விவசாய வீதியாகும். சுமார் 3500 ஏக்கர் நெல்வயலுக்கு செல்பவர்கள் இவ்வீதியுடாகவே செல்கின்றார்கள். பசளைகள் மருந்துகளைகொண்டு செல்வதற்கும் அறுவடை செய்த நெல்மூடைகளை வீட்டுக்கு கொண்டுவருவதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். இந்த வீதியில் சுமார் 20 இடங்களில் சிறிய சிறிய பாலங்கள் வைக்க வேண்டியுள்ளது. இவ்வீதியைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குமுழமுனை – தண்ணிமுறிப்பு – தண்டுவான் வீதி மோசமாகச் சேதமடைந்துள்ளது. 2800 ஏக்கர் வயல் நிலங்களுக்குச் செல்லும் இந்த வீதியும்

மற்றும் குமுழமுனை – நித்தகைகுளம் – ஆண்டான்குளம் செல்லும் 9 கி.மீற்றர் நிளமான வீதி மோசமாக முற்றாகச் சேதமடைந்துள்ளது. சுமார் 1200 ஏக்கர் வயல் நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பயன்படுத்தும் இவ்வீதியிலுள்ள பாரிய பாலம் சேதமடைந்துள்ளது. அதனால் ஆற்றைக் கடப்பதற்கு படகுகளை பாவிக்கும் விவசாயிகள் பசளையினை கொண்டு செல்வதற்கும், அறுவடை நெல்களை கொண்டு செல்வதற்கும் மூடைகளை தோளில் சுமந்து சென்று ஏற்றியிறக்க வேண்டியுள்ளது.

உடையாளர் கட்டுச் சந்தியிலிருந்து – இருட்டுமடு ஊடாக – சுதந்திரபுரம் செல்லும் வீதி திருத்தப்படல் வேண்டும்.

மாங்குளம் பிரதேசத்தில் பாலப்பாணி – தேக்கங்காடு வீதி 16 கிலோ மீற்றர் திருத்தப்படல் வேண்டும்.

வவுனியா வடக்கு பிரதேசத்தில் சின்னடம்பம் கிராத்திலுள்ள உள்ளக வீதிகள் மோசமாச் சேதமடைந்துள்ளன. அவை மிக நீண்;டகாலமாக திருத்தப்படவில்லை. அவை உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.

ஓமந்தை அரசடிமுறிப்பு பிரதான வீதி சேதமடைந்துள்ளது, 3 கிலோ மீற்றர் நீளமான இவ்வீதியால் பெருமளவு விவசாயிகள் வயல் நிலங்களுக்குச் சென்று வருகின்றார்கள். வீதி சீரின்மையினால் மக்களும் விவசாயிகளும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வீதியும் உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.

அதேபோன்று, பண்டாரிகுளம் மின்மமாற்றிச் சந்தியிலிருந்து – சேவாலங்கா பண்ணை வரை செல்லும் 3 கி.மீற்றர் வீதியும், பண்டாரிகுளம் சந்தி – விவுலானந்தா பாடசாலை ஊடாக சூசையப்பர் வீதி வரை செல்லும் 3 கிலோ மீற்றர் வீதியும் திருத்தப்படல் வேண்டும்.

அடுத்து, மெனிக்பாம், செட்டிகுளம் பகுதியிலுள்ள 6 கி.மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, பூநகரி பரமன்கிராய் – கல்முனை வீதி 16 கி.மீற்றர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக திருத்தப்படல் வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாழையடி – சுண்டிக்குளம் வீதி திருத்தம் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெறுகின்றது. அதனால் மீனவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

சுண்டிக்குளம் – முல்லைத்தீவை இணைக்கும் தொடுவாய்க்கு குறுக்காக பாலம் அமைக்கப்படல் வேண்டும்.

மருதங்கேணி – நாகர்கோவில் வரையான வீதி காப்பெற் இடப்பட்டு ஒராண்டுக்குள் சிதைந்துவிட்டது. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் வீதி திருத்தப்படல் வேண்டும்.

போக்குவரத்து துறை

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத்துறை ஊழல் நிறைந்ததாக உள்ளது. தகுதியற்ற அரசியல் நியமனங்கள் காரணமாக போக்குவரத்துத் துறை பாரிய சீர்கேடுகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்களினால் பாரிய பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தலையீடு காரணமாக தகுதியாற்றவர்கள் உயர் பதவிகளிலும், தகுதியானவர்கள் கீழான பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஊழியர்களுக்கிடையில் பாரிய முட்டிமோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நடத்துனர்கள் மீதோ, சாரதிகள் மீதோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், அரசியல் பழிவாங்குதல்கள் காரணமாக சட்ட விதிமுறைகளுக்கு மாறாக பல மாதங்களாக விடுமுறையில் நிற்க நிற்பந்திக்கப்படுகின்றார்கள்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர், தீர்ப்புக்களுக்காக நீண்டகாலம் காத்திருக்க நிற்பந்திக்கப்படுகின்றார்கள். விசாரணையின் பின்னர் தீர்ப்புக் கூறுவதற்காக கோவைகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றது. செல்வாக்குள்ளவர்கள், கொழும்பிலுள்ளவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து தண்டனையை குறைத்துக் கொள்கின்றார்கள் அல்லது தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள். இந்த விடயத்தில் தலைமையகத்திலுள்ள சிங் என்ற பெயர்தான் அதிகளவில் பேசப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் அவர்களே இந்த சீர்கேடுகளை விரைவாக சீர்செய்து கொள்ளுங்கள் என்று மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

CRM என்ற பதவியிலுள்ள அதிகாரி, கொழும்பு தலைமையகத்திற்கு சாலை தொடர்பான பிரச்சினைகளை எடுத்துச் செல்வதானால், மொட்டு சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் இளஞ்செல்வன் ஊடாகவே செல்ல முடியும் என்றளவுக்கு அடாவடிகள் இருக்கின்றது.

வடமாகாணத்திற்குரிய, மெக்கானிக்கல் எஞ்சினியராக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை நியமித்தமைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருக்கு மொழி தெரியாத காரணத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். வடக்கில் தரம் 5 என்ற தகுதியுடைய உத்தியோகத்தர்கள் உள்ளபோதும், மொழி தெரியாத பெரும்பான்மையினத்தவரை நியமித்தமையானது இனங்களுக்குடையில் விரிசலை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

இவ்வாறான செயற்பாடுகளை நீங்கள் களையவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் உள்ளவரை உங்களால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது.

கடந்த 15 வருடங்களாக பல உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. பல தற்காலிக ஊழியர்களுக்க நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. அனைத்துமே மொட்டுக்கட்சியிடம் மட்டியிட்டால் மட்டுமே அனைத்தும் நடைபெறும் என்ற நிலையே காணப்படுகின்றது.

மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் பாரிய சம்பள முரண்பாடுகள் காணப்படுகின்றது. பல வருடங்களாகியும் அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண மொட்டுச் சங்கத்தின் இணைப்பாளரான இளஞ்செல்வன் என்பவரும், தலைமையகத்தில் உள்ள சிங் என்று அழைக்கப்படும் நபருமாக போக்குவரத்துத் துறையை சீரழித்துக் கொண்டிருப்பதாக பெருமளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

எனவே இவ்விடயங்களை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு போக்குவரத்துத் துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் கூறுகின்றேன்.

நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், வீதி அபிவிருத்தி தொடர்பான விடயத்திலும், வடிகாலமைப்புத் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் புகையிரதவீதி அபிவிருத்தி, பெருந்தெருக்கள், உள்ளக வீதிகளது அபிவிருத்தி என்பவற்றில், மழைவெள்ளம் தொடர்பில் எந்த விடயமும் கருத்திற் கொள்ளப்படவில்லை.

அதேபோன்று
ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தியிலும் பெருமளவு வீதிகள் போடப்பட்டுள்ளது. இவை எதிலும் வாய்கால்கள், வடிகால்கள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை.

இதனால் விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி நின்று விவசாயம் முற்றாக அழிந்துபோகும் நிலைதான் அதிகரித்துள்ளது. வீதிகள் போடப்பட்டமையினால் போக்குவரத்து இலகுவாகியுள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அதேவேளை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வேறு விடயங்கள், கவனத்தில் கொள்ளப்படாமையினால் அந்த வீதிகளால் பிணங்களைத் தான் கொண்டு செல்ல வேண்டுமென்ற நிலைதான் தோன்றுகின்றது. ஏனெனில் மக்களது விவசாய அபிவிருத்தி முற்றாக அழிக்கப்படுகின்றது.
அதிகளவு மழைவெள்ளம் ஏற்பட்டு, நெஞ்சளவு வெள்ளம் வந்தால்கூட மறுநாள் வெள்ளம் வடிந்துவிடக் கூடியளவுக்கு நிலமை இருந்தது. ஆனால் இன்று மூன்று வாரங்கள் சென்றாலும் வெள்ளம் வெளியேறாத நிலைதான் இன்று உள்ளது. காரணம் என்னவெனில் வடிகாலமைப்புத் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

எனவே இவ்விடயங்களை நீங்கள் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெக் கேட்டுக்கொள்கின்றேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment