Read Time:1 Minute, 14 Second
வல்வைக் கரையோரம்
வந்துதித்த சூரியனே
எல்லை மீட்பதற்காய்
வில்லெடுத்த சந்திரனே
நற்றமிழை காப்பதற்காய்
நெற்றிக்கண் திறந்து தினம்
கொற்றவையின் மகவாகி
கூற்றெதிர்த்த கோமானே
வற்றாத நீர்ச்சுனையே
வாகையுடன் வாழிய நீ ..!
மாயைகளை தெளிவாக்க
மண்மீது மலர்ந்தவனே
தானைத் தளபதியே
தன்மான பெரும் புலியே
ஊர்கூடி வந்துள்ளோம்
உத்தமனை வாழ்த்தவென
தேர்கொண்டு தான் வந்தோம்
தெய்வமுனை போற்றவென
உனக்காக உயிர்நீக்கும்
உயர்ந்தபடை நீ கண்டாய்
தனக்காக வாழாத
தலைவனென பெயர்கொண்டாய்
சிங்கத்தின் செருக்கடக்கி
சிரிப்புடனே நகர்ந்தவனே
வங்கத்தின் வஞ்சங்களை
வகைவகையாய் தெரிந்தவனே
அஞ்சாது களமேகி
அடலேறாய் நிமிர்ந்தவனே
துஞ்சாது நஞ்சணிந்து
தூயவனாய் மிளிர்ந்தவனே
தடம்மாறா தலைமகனே
தனித்துவமாய் வாழிய நீ…!