சுவிஸ்நாட்டின் ஆட்சித்தலைமை அமைந்திருக்கும் பேர்ன் மாநிலம் தமது மண்ணில் உள்ள அனைத்து வழிபாட்டு இடங்களையும், சமயங்களையும் இணையத்தில் எண்ணியல் (டிஜிட்டல்) வரைபடமாக வெளியிட்டுள்ளது. பேர்ன் மாநில அரசு கடந்த ஆண்டு 2020ல் இத்திடட்தினை உருவாக்கியபோது இந்து சைவத்திருக்கோவில்களின் ஒன்றயம் சுவிற்சர்லாந்து மற்றும் சைவநெறிக்கூடம் இணைந்து பணியாற்றி பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள கோவில்களை பட்டியலிட்டு அவர்களது செற்பாட்டுப் பணிகள் தொடர்பில் அறிக்கை உருவாக்கி அளித்திருந்தது.
இதன் நோக்கம் பேர்ன் மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமய- மற்றும் வழிபாட்டு இடங்களை அனைவருக்கும் வெளிக்காட்டுவதும், இவ் அமைப்புக்களின் பணிகளை அனைவருக்கும் அறியச்செய்வதும் ஆகும். பல்சமய அமைப்புக்களும் சிறந்த தகவல் பரிமாற்றங்களுடன் இணங்கி வாழத் தொடர்புகள் பேண இது வழிசெய்வதாக இதன் இயக்குனர் திரு. தாவித் லொயிட்வில்லெர் தெரிவித்தார். சுவிஸ்பாட்டில் பல்வேறுபட்ட இனங்களும் சமயங்களும் தமது உலகப்பார்வையினை எவ்வாறு கொண்டுகள்ளார்கள் என்பதையும் இவ்வரைபடம் காட்டுகின்றது என்றும் திரு. தாவித் தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்கள் ‘மன்றம்’ எனும் பொதுச்சட்டத்தின்கீழ் இயங்கி வருகின்றன. சுவிற்சர்லாந்தின் 1848 அமைக்கப்பெற்ற அரசியல் யாப்பின் பயன் சமய அமைப்புக்களுக்கு அரசு நிதி வழங்காது.
தற்போது கிறித்தவ தேவாலயங்களும் தமது எதிர்கால செயற்பாடு, இயங்குமுறை தொடர்பில் மாநில நடுவன் அரசுகளுடன் பேசி வருகின்;றார்கள். இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் எமது சைவசமயத்திற்கு உரிய சுவிற்சர்லாந்தின் அரச ஒப்புதலை பெற்று (அங்கீகாரம்) சுவிஸ் தேவயாலங்களுக்கு ஒப்பான செயல்முறைகளுக்கு சைவத் தமிழ்க் கோவில்களின் செயற்பாடுகளும் வளரும் என்பதற்கு பேர்ன் மாநில ஆட்சிமன்றத்திற்குள் 23. 11. 2021 செவ்வாய்க்கிழமை மாலை 18.30 மணிமுதல் பேர்ன் மாநில அமைச்சர் திருமதி. எவெலின் அலேமான் முன்னிலையில் அனைத்து சமயங்களின் இருப்பிடங்களை உள்ளடக்கிய இணைய வரைபடம் திறந்து வைக்கப்பட்டது முதற்படியாகும்.
திருமதி அலேமான் தொடர்ந்து உரையாற்றுகையில் கால மாற்றத்திற்கும் மக்களின் நம்பிக்கைக்கும் ஏற்ற முறையில் மாநில மற்றும் நடுவனரசின் சமயங்கள் தொடர்பான அணுகுமுறை மாறவேண்டும் எனவும், எதிர்காலத்தில் சுவிஸ் பல்சமயப் பல்சமூக நாடாக சிறந்து விளங்க அனைத்து சமய அமைப்புக்களின் பங்களிப்பும் இன்றியமையானது எனவும் பகர்ந்தார்.
இந்நிகழ்விற்கு பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து சைவ- இந்துத் திருக்கோவில்களுக்கும் உரிய அழைப்பு பேர்ன் மாநில அரசின் பெயரால் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், பேர்ண் சிறி கல்யாண சுப்பிரமணியர் ஆலயம், ஸ்ரீ விநாயகர் ஆலயம் லங்நவ், அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் தூண், சிறி சீரடிசாயிபாபா தேவஸ்தானம் தூண் ஆகிய கோவில்களின் உறுப்பினர்கள் நேரில் வருகை அளித்திருந்தனர்.
இணைப்பக்கத் திறப்புவிழாவினைத் தொர்ந்து நடடைபெற்ற பேராளர் உரையிலும், பண்பாட்டுக் கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் சைவக்கோவில் உறுப்பினர்கள் பிற பல்சமய அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். நிறைவில் பேர்ன் மாநில அரசின் சார்பில் இரவு உணவு வழங்கி விருந்தோம்பலுடன் நிகழ்வு நிறைவுற்றது.
ஒவ்வொரு தமிழ்க் கோவிகளும், கோவில்கள் அமைந்திருக்கும் ஊராட்சி மன்றத்தில், மாநில அரசிடத்தில், சுவிற்சர்லாந்து நடுவன் அரசுடன் நல்லிணக்க உறவினைப் பேணுவதுடன், கூட்டுப்பணிகளில் பங்கெடுத்து சைவத் தமிழ் மக்களின் வழிபாட்டு மற்றும் ஆற்றுப்படுத்தல் தேவைகளை நிறைவுசெய்ய வழிசெய்யும்.
இவ்வாறு அமையப்பெறும் இந்நிகழ்வுகள் கோவில்கள் பணிக்கு மதிப்பளிப்பாக அமைவதோடு சைவத் தமிழ் மக்களுக்கு உரிய தொண்டாற்ற ஊக்குவிப்பதுடன், கோவில்களுக்கும் ஏனைய சுவிஸ் சமூகப்பொது அமைப்புக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை பெற வழிசெய்யும் என்ற நம்பிக்கையின் ஊண்டி நிறைவுற்றது.
தொகுப்பு: சிவமகிழி