வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அப் பணிகள் ஆரம்பமானது.
மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியுள்ளார்.
இன்று இடம் பெற்ற இவ் வாலயத்தின் மீளுவுருவாக்கும் பணிகளில் மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மரபுரிமை மையத்தின் உபதலைவர் சத்திர சிகிச்சைப் பேராசிரியர் ரவிராஜ், இவ்வாலயத்தினை மீள்உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கிய பாலயோகஸ்தினி சிவயோகநாதன் அவர்களின் தந்தை கலாநிதி சிவயோகநாதன், யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் செயலாளர் ரமேஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஸ் விரிவுரையாளர் ஜெயதீஸ்வரன் இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், செல்வி துஸ்யந்தி, மணிமாறன் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் பத்திராசிரியர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






