2016 ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள்உருவாக்கம் செய்யும் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள்பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆழிவடைந்த இவ் ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம, அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது.அத்துடன் இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரந்த எழுத்து சாசனத்தின் அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயமானது 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமென்பதுடன் இவ்வாலயத்தின் பெயர் பிரகேதீஸ்வரர் என்பதனையும் இக் கல்வெட்டில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது.மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத்தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியுள்ளார்.அதன்டிப்படையில் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாண மரபுரிமைய மையத்தினரால் இவ் வாலயம் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளது.மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமாக ஆரம்ப நிகழ்வில் இவ்வாலயத்தினை மீள்உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கவுள்ள பாலயோகஸ்தினி சிவயோகநாதன் அவர்களின் தந்தை கலாநிதி சிவயோகநாதன், தொல்லியல் திணைக்களகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பந்துலு, இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், செல்வி துஸ்யந்தி, யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் பார்த்திபன், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் உத்தியோகத்தர் திரு.நாக ஜெயக்குமார் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.








