கடந்த 05.06.2024 புதன்கிழமை பிரான்சில் சாவடைந்த பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆரம்பகால உறுப்பினரும், மூத்த தேசிய செயற்பாட்டாளருமாகிய விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்களுக்கு “தமிழின விடுதலைப் பற்றாளர்”
என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் மதிப்பளிப்பு செய்துவைக்கப்பட்டதுடன் அவரது திரு உடலுக்கு தமிழீழ தேசியக் கொடிபோர்த்தப்பட்டது.

“தமிழின விடுதலைப் பற்றாளர்” விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (12.06.2024) புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பிரான்சில் Crématorium Les Joncherolles ,95 Rue Marcel Sembat, 93430 – Villetaneuse பகுதியில் இடம்பெற்றது.


ஆரம்ப நிகழ்வாக இறுதி வணக்க நிகழ்வுக்காக புகழுடல் மண்டபம் கொண்டுவரப்பட்டது. அவரின் திருவுருவப்படத்திற்கு துணைவியாரால் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து “தமிழின விடுதலைப்பற்றாளர்” என்ற மதிப்பளித்தலின் அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் வாசிக்கப்பட்டு தமிழீழத் தேசியக் கொடி அவரின் புகழ்உடல் மீது போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டமைப்புக்களின் சார்பில் அவற்றின் செயற்பாட்டாளர்களினால் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. புகழுடலுக்கு மக்களின் மலர்வணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து நண்பர்கள், தேசப்பணியாளர்கள், குடும்ப உறவுகள் கண்ணீர் உரைகளை வழங்கியதுடன் தமிழீழ தேசியக்கொடியும், மதிப்பளிப்பு மடலும், திருவுருவப்படமும் “தமிழின விடுதலைப்பற்றாளர்” சண்முகலிங்கம் விஜயகுமார் அவர்களின் துணைவியார் மற்றும் பிள்ளைகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதைத் தோடர்ந்து அவரின் புகழ் உடல் உறவுகளின் கண்ணீரோடு தீயுடன் சங்கமமாகியது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு)






