சுவிட்சர்லாந்தின் தமிழீழச்செயற்பாட்டாளர் திரு.சிவா கனகசபை அவர்களது நேர்த்தியான திட்டமிடலிலும், ஒழுங்கமைப்பிலும் தமிழினப்படுகொலை ஆவணக்கேயேடு அறிமுக நிகழ்வு சிறப்பாக கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
தியாகத்தாய் அன்னைபூபதியின் திருவுருவப்படத்திற்கும், மாவீரர் நினைவுருவிற்கும் மலர்மாலை அணிவித்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- சுவிட்சர்லாந்து (TCC) அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.கொலம்பஸ், தளபதி நாகேஸ் அவர்களது துணைவியார், மருத்துவப்போராளி மிதயா கானவி அவர்கள், IBC இன் பிரதம நிறைவேற்று இயக்குநர் மற்றும் ஆய்வாளர் திரு. நிராஜ் டேவிட், HIRU இதழின் ஆசிரியரும் JDS ஊடக அமையத்தின் இயக்குநருமான பாசண அபேய்வர்தன, ஆகியோர் உட்பட பலர் வணக்கம் செலுத்தினர்.”நீண்டுசெல்லும் தமிழினப்படுகொலை” என்ற தலைப்பில் சிறப்புரையினை ஆய்வாளர்/ஊடகவியலாளர் மதிப்பிற்குரிய பாசண அபேய்வர்தன அவர்கள் நிகழ்த்தினார். (ஒளிப்பதிவு விரைவில்)அதனைத்தொடர்ந்து தமிழினப்படுகொலை ஆவணக்கேயேட்டினை உருவாக்கிய தட்சா அவர்களது விளக்கவுரை இடம்பெற்றது.

நந்திக்கடல் பேசுகிறது, பிரபாகரன் சட்டகம், தமிழ்த்தேசிய எழுச்சி, பன்னாட்டுக்குற்றங்கள் ஆகிய நூல்கள் பற்றிய விளக்கமும் காண்பிக்கப்பட்டன.IBC ஊடகத்தின் இன் முதன்மை நிறைவேற்று இயக்குநர் மதிப்பிற்குரிய நிராஜ் டேவிட் அவர்களால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட “No fire Zone” என்ற ஆவணப்படம் முதன்முதலாக இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழினப்படுகொலை தொடர்பில் ஈழத்தமிழர்கள் கையாளும் தவறான சொல்லாடல்கள் பற்றிய ஆய்வுரையை மிகத் தெளிவாக விதந்துரைத்தார். (ஒளிப்பதிவு விரைவில் வெளிவரும் ). தட்சா அவர்களது பணி காலத்தின் வரலாறு எனப்பாராட்டினார்.தொடர்ந்து உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியற்துறை – சுவிட்சர்லாந்துப் பொறுப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கொலம்பஸ் அவர்கள் தட்சா வின் முழுத்தமிழினத்திற்குமான பணியாக இப்பணி உயர்ந்து நிற்கிறது எனவாழ்த்தியதோடு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பிற்கும் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். தொடர்ந்து செல்வி தட்சாவிற்கு “மறத்தமிழச்சி” என்ற விருதினையும், மறத்தமிழச்சி எனப் பொறிக்கப்பட்ட வெள்ளியாலான எழுதுகோல் ஒன்றையும் வழங்கி மதிப்பளித்தார்.

ஆலயத்தின் பூசகர் ஐயா அவர்கள் தனதுஉரையில் தமிழின விடிவிற்கான அனைத்து முன்னெடுப்புகளிலும் தமது ஆலயம் பங்கெடுக்கும் எனவும், தமிழிலே வழிபாடு நடைபெறும் ஒரேயொரு கோவில் என்பதையும் சிறப்புற எடுத்துரைத்தார்.தொடர்ந்து ஆய்வாளர் மாண்புமிகு திரு.கனகரவி அவர்கள் தனதுரையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழினத்தின், இளம் சமுதாயத்தின் வீச்சாக அதன் அடையாளமாக தட்சா ஆற்றிய பணி நிலைத்துநிற்கும் என வாழ்த்தியதோடு, இனப்படுகொலையின் வீச்சு எங்கனம் எஞ்சிய தமிழீழத்தமிழர்களை விழுங்குகிறது என்பதையும் தெளிவாகஎடுத்துரைத்தார்.

தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த முன்னாள் BBC – தமிழோசை ஊடகவியலாளர் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களும் தமிழினப்படுகொலை பற்றிய தனது பார்வையை எடுத்துரைத்திருந்தார்.இந்நிகழ்வு சிறப்புற தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்த Phoenix – அக்கினிப்பறவைகள் அமைப்பிற்கு எமது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

இறுதியில்நன்றியுரையினை திருமதி சிவா.கனகசபை அவர்கள் மிகுந்த நேர்த்தியாக அனைவரையும் குறிப்பிட்டு, தமது உரையினை நிகழ்த்த மாலை 7.00 மணியளவில் நிகழ்வு நிறைவெய்தியது.அனைவரும் சிறப்புப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டபின்னர் மாலை 7.00 மணியளவில் இறை ஆசிவேண்டி தட்சா அவர்களது பெயரில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

(சிறப்பு விருந்தினர்களது உரை தொடர்ந்து வெளிவரும்)இந்நிகழ்வு சிறப்புற உழைத்த சுவிஸ் வாழ் உறவுகள், தொழிலதிபர்கள், தாளம் வானொலி , ஞானலிங்கேசுவரர் கோயில் நிர்வாகத்தினர் அனைவருக்கும் உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் தமது சிரம்தாழ்த்திய அன்பினைப் பரிமாறுவதில் உவகையடைகிறார்கள்.


அன்புடன்
திரு.ஜெயந்தன்,
அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்,
Voice Of Global Tamils’ Rights – உலகத்தமிழர் உரிமைக்குரல்.