சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார்.
6 சகோதரிகளுடனும் 2 சகோதரர்களுடனும் பிறந்த இவர் மிகுந்த திறமைசாலி.பள்ளிப்படிப்பில் சுட்டி.விளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரர். இலங்கை அரசபடைகளின் அட்டூழியம் செம்மலைக்கிராமத்தையும் வெகுவாகப் பாதித்தது. தமிழர்களின் விடுதலை நோக்கிய பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்தத்தொடங்கிய வேளை, தன்னையும் ஒரு வீரனாக இணைத்துக்கொள்ள எண்ணி 1983ம் ஆண்டு புறப்பட்டுப்போனார்ஆனந்தன்.இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 3வது பயிற்சிமுகாமில் பயிற்சியை நிறைவுசெய்து சிறந்த புலிவீரனாக நாடுதிரும்பி பல கடுமையான பணிகளைப் பொறுப்பேற்றுச்செயற்படுத்தினார்.வன்னிப்பிரதேசத்தின் விநியோகப் பொறுப்பாளராகவும் காட்டின் சில நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவும் இயங்கிவந்தார் .1985.02 .13 அன்று தமிழீழவிடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொக்கிளாய் இராணுவமுகாம் மீதான தாக்குதலில் பங்கேற்றார். இத்தாக்குதலானது இராணுவ முகாம்மீதான விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் லெப்டினன்ட் கேணல் புலேந்தி அம்மானும் பங்கேற்றிருந்தார் .அவரின் அணி கொக்குளாய்த்தாக்குதலின் ஒருபகுதியாக, அதற்கு வலுச்சேர்க்க நாயாற்றில் வழிமறிப்புத்தாக்குதலை மேற்கொண்டது. கப்டன்ஆனந்தன் புலேந்திரி அம்மானின் நெருங்கிய தோழனாவார்.தனது நண்பர்களுடன் உரையாடும்போது “எங்க படிச்சனி மச்சான்” என்று அவர்கள் கேட்டால்”செம்மலை சென்றல் கொளிஜ்ல”என்று நகைச்சுவையாய்ச் சொல்லுவாராம் ஆனந்தன். செம்மலை ஒரு சிறிய ஊர்.அங்கே அப்போது சாதாரண பாடசாலைதான் இருந்தது.ஆனால் ஆனந்தனின் கனவு பெரியது என்பது அவரின் பதிலில் புரிகிறது.
கொக்கிளாய்த்தாக்குதலின் பின் நண்பர்களான புலேந்திரி அம்மானும் ஆனந்தனும் வெவ்வேறு பணிகளில் மும்முரமாயினர். பல தாக்குதல்களில் அணிகளை வழிநடத்தும் பொறுப்பாளராக இவர் செயற்பட்டார்.86,87 ஆண்டுக்காலப்பகுதியில் விசுவமடுக்காட்டுப்பகுதியில் தங்கியிருந்த மகளிரணியை வழிநடத்தும் பொறுப்பு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.ஆனந்தன் பெண்போராளிகளின் விருப்பிற்குரிய நண்பனாக,சோதரனாகத்திகழ்ந்தார். பல மூத்தபெண்போராளிகள் இன்றும் அவரின் நினைவை மீட்டி அவர் செய்த பணிகளை வியந்து கூறுகிறார்கள்.இந்திய இராணுவம் தமிழீழ மண்ணிலே வந்து இறங்கியமை,அகிம்சைவழி உண்ணாநிலைப்போரை முன்னெடுத்ததியாகதீபம் திலீபனின் இழப்பு,05.10.1987அன்றைய தனது நெருங்கிய ண்பன் புலேந்திரன் உட்பட்ட 12 விடுதலைப்புலிவீரர்களின் இழப்பு இவ்வாறான பல நிகழ்வுகள் ஆனந்தனையும் வெகுவாகவே பாதித்தது.அவர் விடுதலைக்கான பாய்ச்சலில் இன்னுமினும் உறுதிகொண்ட வீரனானார்.
வன்னிப்பகுதியிலும்ஆங்காங்கே முகாம்களை அமைத்து மக்களைத்துன்புறுத்தி வந்தது இந்திய இராணுவம். அவர்களுக்கெதிரான தாக்குதல்கள் பலவற்றினை வழிநடத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார் கப்டன் ஆனந்தன்.வவுனியாப்பிரதேசத்தில் ஆனந்தன் என்ற பெயரைக்கேட்டாலே இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் பயந்து முகாமுக்குள் முடங்கிக்கொள்ளுமளவு இவருடைய துணிசசல் இருந்து.எதிரிக்கு சிம்ம சொப்பனமாகவும் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் விளங்கினார்.இந்திய இராணுவ த்தை அடக்கிவைக்க எண்ணி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். வவுனியாவில் மக்களை மறித்துச்சோதனையிடும் இராணுவக்காவலரண் ஒன்றிற்குத் தனியாகப் பாரவூர்தி ஒன்றை ஓட்டிச்சென்றார்.சாதாரண மக்கள்போலவே தன்னை உருமாற்றிக்கொண்டு துப்பாக்கியையும் ஒளித்துவைத்துக்கொண்டு காவலரணுக்கு நெருக்கமாகப் பாரவூர்தியை ஓட்டிச்சென்று நிறுத்தினார்.வழமை போல சாதாரணமாகச்சோதனையிட வந்தனர் சில இராணுவத்தினர்.அவர்கள் எதிர்பாராதவகையில் திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்து அங்கு நின்ற இராணுவத்தினரைச்சுட்டுவிட்டு பார ஊர்தியில் விரைந்து சென்று தப்பித்துவிட்டார்.அந்த நேரம் மக்கள் யாரும் அங்கு இல்லை. இராணுவம் நிலைகுலைந்து தடுமாறி நிதானிக்குமுன் ஆனந்தன் பறந்துவிட்டார்.பின்பு பல நாட்கள் அச்சம் காரணமாக இராணுவம் மக்களைச் சோதனையிடவேயில்லை.ஆனால் ஆனந்தன் என்ற ஒருவரே இதைச்செய்தவர் என்றறிந்து மக்களை விசாரித்தபடி பயந்திருந்தது இராணுவம்.அந்தக்காலத்தில் இது ஒரு வியப்பூட்டும் சம்பவமே.இப்படி ஒரு துணிச்சல்காரர்தான் ஆனந்தன்.இவ்வாறான வீரர்களைக் கொண்டதே எமது விடுதலைப்போராட்டம் என்றால் மிகையல்ல.
சுறுசுறுப்பும் அதிவேகச்செயற்பாடுகளும் சிறந்த திட்டமிடல்களும் ஆனந்தனிடம் குடிகொண்டிருந்த சிறந்த பண்புகள்.உயர்ந்த நிமிர்ந்த தோற்றமும் புன்னகை தவழும் முகமும் கண்ணில் தெரியும் தெளிந்த உறுதியும் பார்ப்போருக்கு அவரது வீரத்தை எடுத்துச்சொல்லிவிடும். வன்னியில் வவுனியா மாவட்ட மக்களுக்கு இவரை நன்குதெரியும்.1991 காலப்பகுதியில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கிரேசி அவர்களும் இவரின் உற்ற நண்பர்களில் ஒருவரே.
கப்டன் ஆனந்தனின் மனதில் நீங்காது நிறைந்திருந்த அவரது மனதிற்கினியதோழன் புலேந்திரனினதும் ஏனைய சக தோழர்களினதும் நினைவுடன் அதேநாளில்(05.10.1989) முல்லை -மாங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ மற்றும் ஒட்டுக்குழுக்களின் முகாமைத்தாக்கினர் கப்டன் ஆனந்தனின் அணியினர். பலமான சண்டை இடம்பெற்றது.நாலாபுறமும் வயல்வெளிகளைக்கொண்ட அந்தப்பிரதேசம் நீண்ட நேரத்தாக்குதலக்குத்தகுந்ததல்ல.எனவே எதிரிக்குப் பலத்த இழப்பைக்கொடுத்தபின் கப்டன் ஆனந்தன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் அணி பின்னே நகரத்தொடங்கி வயல்வெளிகளைக்கடந்துகொண்டிருந்தபோது சரமாரியான எறிகணை மற்றும் உலங்குவானூர்தித்தாக்குதலை எதிர்கொண்டது. அவ்வேளை தனது சக தோழன் கப்டன் பாரத் வீரச்சாவடைந்துவிட்டதால் அவரது உடலைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ஆனந்தன் படுகாயமுற்றுவிட்டார். தன்னால் இனி நகரமுடியாது என்றுணர்ந்தவர் மற்றைய போராளிகளைப் போகச்சொல்லிக் கட்டளையிட்டு விட்டு விடுதலைப்புலிகளின் மரபுக்கிணங்க சயனைட் உட்கொண்டு மண்ணை முத்தமிட்டார்..
பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர் மாங்குளம் வீதியில் இழுத்துத்திரிந்தார்கள்.ஆனந்தன் இவர்தான் என அறிந்து எக்காளமிட்டார்கள்.இதனைப்பொறுக்காத மக்கள் கூட்டம் இராணுவத்திற்கெதிராகக் கொந்தளித்து நின்றது.
பின்பு கப்டன் ஆனந்தனின் உடலை மாங்குளம் சந்திக்கு அருகாமையில் ஒருமரத் திலே நாள் முழுக்கத்தொங்கவிட்டிருந்தனர் அந்தக்கூலிப்படையினர்.
எப்படியோ இந்தச்செய்தி அவரின் தாயாரின் காதுக்கு எட்டியபோது அவர் பயமின்றி மாங்குளம் இராணுவ முகாமிற்குச்சென்றார்.அப்போது அவர் கண்ட காட்சி அவரை துயரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.கப்டன் ஆனந்தனின் உடல் நடுவீதியிலே ரயர்போட்டுக்கொழுத்தப்பட்டு எரிந்து முடிந்து விட்டிருந்தது.எதிரிக்குச்சவாலாயிருந்த அந்தப்பெரு வீரன் தான் நேசித்த மண்ணிலே தீயுடன் சங்கமித்தார். அவர் தன் தோழனின் வீரச்சாவுநாளையே தனது நினைவுநாளாக்கிக்கொண்டு இன்று 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.
கப்டன் ஆனந்தன் வவுனியாவில் நின்றிருந்த வேளை 12 வயது நிரம்பிய தனது மூத்த மருமகளுக்கு ஒருகடிதம் எழுதி அனுப்பிவைக்கிறார்.அதில் அவர் ஒரு திருக்குறளுடன் எழுதியவை
“அன்பு மருமகளுக்குச் சின்ன மாமா எழுதுவது. நலமாயிருங்கோ .அம்மா அப்பா சொற்கேட்டு நடவுங்கோ. நீங்களும் தமிழீழ விடுதலைக்காகப்போராட வேண்டியது அவசியம்.அதற்காகவே நிறையப்படியுங்கோ.இப்ப சின்ன வயசில வந்து ஒண்டும் செய்ய ஏலாது.தவறான முடிவுகளும் தவறான பாதைகளும் வாழ்க்கையை அழித்துவிடும்.தலைவர்மாமாவின் வழியிலே கெதியா விடுதலை கிடைக்கும்.மாமாவின்ர சொல்லை நீங்கள் கேப்பியள் என்று நம்பிறன்.
என்றும் அன்புடன் உங்கட சின்ன மாமா…
இன்னும் நிறையவே அறிவுரைகள் எழுதியிருந்தார்.இந்தக்கடிதத்தை எதிர்பார்த்திராத அந்தச்சிறுமி துள்ளிக்குதித்தாள்.மாமாவிடமிருந்த தன்னைப்பற்றிய புரிதலையும் போராட்டப்பணிகளிலும் தன்னை நினைக்கும் மாமாவின் அன்பையும் மனதிலே கொண்டாடினாள். தனது பாசமே வடிவான சின்னமாமாவை எடுத்துக்காட்டாக வரித்துக்கொண்டாள். அந்தக்கடிதம் வந்த சிலமாதங்களிலேயே மாமாவின் வீரச்சாவுச்செய்தியும் வந்து அவளை உலுக்கிப்போட்டது.மாமாவின் பாதையை அவள் தனதாக்கிக்கொண்டாள்.
கப்டன் ஆனந்தனின் தம்பி கப்டன் செம்மலையான் 1995.10.18 அன்று இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரானசமரின்போது வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்டன்ஆனந்தனின் இழப்பு பலஇளைஞர்களின்எழுச்சிக்கு வித்திட்டது.”வீழ்ந்தவர்கள் விதையாவதால்தான் விடுதலை விருட்சங்கள் முழைவிடுகின்றன”
கப்டன் ஆனந்தனினதும்,பல்லாயிரம் மாவீரர்களினதும் உயிர்துறந்த பலலட்சம் மக்களினதும் கனவுகள் சுமந்து விடுதலைப்பாதையில் விரைகின்றன கால்கள்,தலைமுறைகள் கடந்தும் உறுதியுடன்..
தமிழரின் தாகம்
தமிழீழத்தாயகம்.
அரியாத்தை


Sent from my iPhone