எதிரிக்குச் சிம்ம சொப்பனமாய் நின்று
வீர வித்தைகள் காட்டிய
வீரபாண்டிய கட்டப் பொம்மனுக்கு ஒரு ‘வெள்ளையத்தேவன்’ போல்,
வலியைத் தந்தவனுக்கே திருப்பிக் கொடுக்கும் தத்துவத்தின் தந்தை எம் தலைவன் வீரப் ‘பிரபாகரனின்’ படைத் தளபதியாய் எங்கள் பால்ராஜ் அண்ணா!
வரைபடத்தில் ஏறிநின்று உன் ஊன்றுகோலால் வரைந்துகாட்டிய
எல்லைகள் எல்லாம் கண்ணிமைக்கும் பொழுதுகளில் எம் தமிழர் வசமாயின!
திரைப்படக் கதாநாயகக் காட்சிகள் எல்லாமே, எம் கண்முன்னே நாமாக நின்று சாதிக்கக் கிடைத்த சரித்திரப் பொழுதுகளாயின….
கொக்கிளாய் தோன்றி, கொக்காவில் தொடங்கி, குடாரப்பு, பெட்டிச் சண்டைவரை கட்டியம் சொல்லும் உன் காலடியின் வீரத்தடங்களாயின…
எதிரிவரும்வரை காத்திருக்காது, எதிரியின் இருப்பிடம் சென்று துவம்சம் செய்யும் சாதனைப் பட்டியல்கள் A9 நெடுஞ்சாலைபோல் நீண்டு கிடக்கின்றன…
எதிரியைக் கலங்கடித்து, கூடவே நடந்த அந்த ஒற்றை ஊன்றுகோலுக்குத்தான் எத்தனை பெரிய உறுமல்…
நாமா இத்தனையும் சாதித்தோம்?…. என்று நினைத்து, நினைத்து
மெய்சிலிர்த்து உங்களுக்காய் ஒரு தீபமேற்றுகையில் அந்த ஒளிச்சுடரில் ‘மாவீரர்கள்’ உங்களின் திருமுகங்கள் ஒளிமுகமாய் ஒளிர்கின்றன!
-காந்தள்-
