«இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் – சுவிற்சர்லாந்து» எனும் பெயரில் சுவிற்சர்லாந்து பொதுச்சட்டம் சரத்து 60 இற்கு அமைவாக 28.05.2017 திருக்கோவில் ஒன்றியம் நிறுவப்பட்டது. இவ் ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்து-சைவப் பொது- மற்றும் சமூக அமைப்புக்களை ஒன்றிணைக்கும் பெரும் பணியினை ஆற்றி வருகின்றது.
சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட 24 திருக்கோவில்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சுவிற்சர்லாந்தில் மன்றங்களாகவே பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் உடல் உழைப்பிலும் கொடையிலும் மட்டுமே கோவில்கள் தம் தொண்டினை ஆற்றி வருகின்றன. கடந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்றுக்காலம் சுவிசில் கோவில்களுக்கும் பெரும் சாவாலான காலமாககே அமைந்திருந்தது. சட்ட விதிமுறைகளைக் கோவில்கள் ஒழுகி உரிய நலவாழ்வு நடைமுறைகளைக் கடைப்பிடித்து கோவில்கள் தம் தொண்டினை நெருக்கடியான காலங்களிலும் ஆற்ற திருக்கோவில் ஒன்றியம் பெரும் உழைப்பினை வழங்கி இருந்தது. நடுவனரசுடனும் மாநில அரசுகளுடனும் தொடர்புகளைப்பேணி உரிய செயற்பாடுகளை நெறிப்படுத்தியதும் கடந்தகாலத்தில் திருக்கோவில் ஒன்றியம் ஆற்றிய பெரும் பணியாகும்.
கோவில் மன்றங்கள் தத்தமது பணிகளை தனித்துவமாக மன்றத்தன்னாட்சியுடன் முன்னெடுத்தாலும் ஈழத்தமிழர்களாக இந்து-சைவ மக்களாக இணக்கத்துடன் பொது நன்நோக்கிற்கு ஒன்றுபட்டு தொண்டாற்ற ஒன்றியம் நடுவமாக இயங்கி வருகின்றது.
ஆற்றுப்படுத்தல் (Spiritual Care) கல்வி, ஊடாட்டகர் (Intercultural Mediation) கற்கை, மன்றங்களை நெறிப்படும் முகாமைத்துக் கல்வியினை (Law of associations/ Management and leadership) திருக்கோவில் மன்றங்களுக்கு வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை திருக்கோவில் ஒன்றியம் 2023ல் முன்னெடுக்க உள்ளது.
குறிக்கோள் மற்றும் நோக்கம்
இவ் ஒன்றியத்தின் நோக்கம் இந்து சமயத்தினை வளர்ப்பதையும், நடைமுறையில் வாழத்துணையாகவும் அதுபோல் இந்துக்கோவில் மன்றங்களை, இந்துப்பொது- மற்றும் சமூக அமைப்புக்களை மேலும் இந்து சமயத்தில் இறையன்புகொண்டோரை ஒன்றிணைப்பதும் ஆகும்.
செயற்பாடுகள்
உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் எமது தேவைகளை – விருப்புக்களை முன்னிறுத்தல் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தேர்ச்சியினை (அனுபவத்தினை) பரிமாறுதல், ஏனைய சைவத்தமிழ் அமைப்புக்களுடன் எமது தொடர்புகளைப் பேணுதல் இந்து-சைவ சமயக் கற்கை மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புக்களை ஊக்குவித்தல் கூரையமைப்பு அதன் உறுப்பினர்கள் அனைவரும், அனைவரினதும் முன்னிலையில் இந்துசமயம் சைவநெறி குறித்த ஒரு சீரானதோற்றத்தை ஏற்படுத்த வழிசெய்வது என்பதும் இத்திருக்கோவில் ஒன்றியத்தின் நோக்கமாகும்.
2023ல் புதிய நிர்வாகம்
கடந்த 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்Nகுச்சுரர் திருக்கோவிலில் கூட்டு வழிபாட்டுடன் திருக்கோவில் ஒன்றியப்பொதுக்கூட்டம் காலை 10.00 மணிக்கு தொடங்கப்பெற்றது. 10.30 மணிமுதல் பல்சமய இல்லத்தில் மண்டபத்தில் தொடர்ந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
கடந்தகால பணிகள் மீளாய்வு செய்யப்பட்டு தருக்கோவில் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் உரைகள் ஆற்றினர். பொருளாளர் திரு. வேலுப்பிள்ளை கணேஸ்குமார் அவர்கள் கடந்தகாலக் கணக்கினை மன்றில் ஒப்படைத்தார் பொதுக்கூட்டத்தில் கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாகம் ஒன்றிய உறுப்பினர்களால் இவ்வாறு முன்மொழியப்பட்டது:
திரு. சின்னராசா இராதாகிருஸ்ணன் (சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன்கோவில் ) புதிய தலைவராகவும்
சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் (சைவநெறிக்கூடம், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்) பதில் தலைவராகவும்
சிவஸ்ரீ நாகேஸ்வர கஜேந்திரக் குருக்கள் (திச்சீனோ ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்)செயலாளராகவும்
திரு. கந்தசாமி சபாராஞ்சன் (பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் ஆலயம்) பதில் செயலாளராகவும்
திரு. கணபதிப்பிள்ளை உருத்திரன் (லுட்சேர்ன் துர்க்கையம்மன் ஆலயம்) பொருளாளராகவும்
முன்மொழியப்பட்ட அனைவரும் நிர்வாகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர். புதிய நிரவாகிகள் தமது பொறுப்பினை உடன் ஏற்றுக்கொண்டனர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் நிறைவில் நன்றிநவின்றார். திருக்கோவில் ஒன்றியத்தின் நோக்கம் கோவில்கள் வழிபாட்டுடனும் சமயச்சடங்குகளுடனும் மட்டும் நின்றுவிடாமல் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான சமூகப்பணிகளை இங்கும் தாயகத்திலும் மேற்கொள்ளவேண்டும். கோவில்கள் தமது உறுப்பினர்களுக்கு உரிய கல்வவளத்தினையும் துறைசார் தகையினையும் ஊட்டி அதன்பால் நிறைபணிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு திருக்கோவில் ஒன்றியம் அனைவரையும் இணக்கத்துடன் அணுகிப் பயணத்தைத் தொடரவேண்டும் எனும் வேண்டுகைவைத்து நன்றியுரையினை நிறைவுசெய்தார்.
சுவிற்சர்லாந்து நாட்டில் சைவத்தமிழ் மக்ளது நலன் முழுமையாகப் பேணப்படுவதற்கு ஒன்றியம் தொடர்ந்து செயற்படும், கோவில்கள் அமைந்திருக்கும் ஊராட்சி மன்றங்களிலும், மாநிலத்திலும், சுவிற்சர்லாந்து நடுவனரசிடத்திலும் நற்தொடர்டால் செம்மையுற ஒன்றியம் தொடர்ந்து உழைக்கும் எனப் புதிய நிர்வாகத்தினர் நம்பிக்கை வெளியிட்டனர். 13.15 மணிக்கு பொதுக்கூட்டம் நண்பகல் உணவுடன் நிறைவுற்றது.