தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 10.07.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.
தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும்இ தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுக்களில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து முதற் தடவையாக நடாத்தப்பெற்ற இருபாலாருக்குமான சுவட்டுமைதான மெய்வல்லுனர் போட்டிகளிலும் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். பங்குபற்றிய அத்தனை போட்டியாளர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்களுக்கும், நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் எமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம், பெண்கள் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற பல பிரிவுகளில் அனைத்து விதமான போட்டிகளும் நடைபெற்றதுடன் 31வது தடவையாக நடைபெற்ற மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன.
இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் கழகவீரர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விளையாட்டுத்துறை,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
12.07.2022







