தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பெற்றது. தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. யூலை 5ம் நாளானது சுவிஸ் நாட்டில் இம்முறை அலுவலக நாளாக அமைந்தபோதிலும் நூற்றுக்கணக்கான பேர்ண் மாநிலம் வாழ்மக்களுடன், சுவிசின் பாகங்களிலிருந்தும் கலந்து கொண்ட மக்கள் கரும்புலிகளிற்கு வீரவணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிவணக்கம், வீணாகானம், இசைவணக்கத்துடன் நினைவுரையும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை அனைவரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு























