தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் உலகளாவிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வு 2022 யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியுசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 04.06.2022 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் பாடநூல்களைக் கற்பிக்கின்ற அனைத்துக் கல்விக்கழகங்களுக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் அணியஞ்செய்யப்பட்ட கேட்டல், பேசுதல், வாசித்தல் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு புலன்மொழி வளத் தேர்வு நிறைவடைந்த நிலையில் எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துக் கல்விக் கழகங்களுக்கும் அனுப்பப்பட்டு அக்கல்விக் கழகங்களால் 04.06.2022 அன்று தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனைத்து நாடுகளிலும் இருந்து கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
தேர்வு முடிவுகள் ஆகத்து மாதம் நடுப்பகுதியில் அனைத்துக் கல்விக் கழகங்களுக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனுப்பப்படும். அதன்பின்னர் ஒவ்வொரு கல்விக் கழகங்களும் தேர்வு முடிவுகளைத் தங்கள் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கும்.

பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு இம்முறையும் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துக் கல்விக் கழகங்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் மேலும் உங்கள் பணி தொடரவும் வாழ்த்துகின்றது.
தமிழே எங்கள் உயிர்!
