இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஈழத் தமிழர்களும் மிகப்
பெரிய அளவில் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
‘அடிமை வாழ்வு’க்கும் ‘வறுமை வாழ்வு’க்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப்
புரிந்து கொண்டு தமிழர்கள் இச்சிக்கலை அணுக வேண்டும்.
இலங்கையில் தமிழீழ மக்களின் இன்றைய வாழ்வு ‘அடிமை வாழ்வு’. சிங்கள
மக்களின் இன்றைய வாழ்வு ‘வறுமை வாழ்வு’. இரண்டும் ஒன்றல்ல.
காலால் என்னை மிதித்துக் கொண்டிருக்கிறவனுக்கும் பசிக்கிறது – அவன்
காலின் கீழே மிதிப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கும் பசிக்கிறது.
அடிமைப்பட்டவன் தாழ்வானவன் – களங்கப்பட்டவன் – வறுமைப்பட்டவன்
அப்படியல்ல. அவன் வாழ்வில் பசி உண்டே தவிர வசை இல்லை.
இதே வறுமையை எமது ஆயுதப் போராட்டக் காலத்தில் இதே சிங்கள
இனவெறியர்கள் எம் மீது திணித்தார்கள்.
ஆனால் –
வறுமையைத் துச்சம் என உதறி எறிந்து விடுதலைக் களத்தில் வலம்
வந்தோம்.
உணவு நமக்குப் பெரிதாக இருக்கவில்லை. நஞ்சையே நமது போராளிகள்
உணவாக்கி மகிழ்ந்த காலம் அது.
திடீரென இன்று நமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பும் முயற்சி
நிகழ்கிறது.
சிங்களவனின் குழந்தைக்குப் பால் மாவு இல்லை என்பது தமிழனான எனக்கு
மிகப் பெரிய துயரந்தான். தமிழனுக்குச் சிங்களக் குழந்தை தமிழ்க் குழந்தை
என்பதெல்லாம் இல்லை.
ஆனால் –
1958 இனக் கலவரத்தின் போது இங்குறாக்கொடையில் ஒரு தமிழ்த் தாயின்
வயிற்றைக் கிழித்து – குழந்தையை வெளியே எடுத்துச் சிங்கள
இனவெறியர்கள் சுவரில் 2
அடித்துக் கொன்றதாக தாசி வித்தாச்சி என்ற சிங்கள இதழியலாளர்
‘அவசரகாலம் 58’ என்ற நூலில் எழுதினாரே – அந்தக் குழந்தை இப்போது என்
நினைவுக்கு வருகிறது.
முள்ளிவாய்க்கால் போரின் போது சிங்கள இனவெறிப் படைகளால்
கொல்லப்பட்ட ஒரு தமிழ்த்தாயின் பிணத்தில் – முலையில் – ஒன்றும்
தெரியாத பச்சைக் குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்ததே – அந்தக்
குழந்தையின் பிஞ்சு முகத்தை இப்போது தேடுகிறேன்.
இன்றும் வறுமையின் நடுவிலும் தமிழர்களுக்கு எந்த உரிமையும்
வழங்கக்கூடாது என்பதிலேயே இனவெறிச் சிங்களவர்கள் உறுதியாக
இருக்கிறார்கள்.
சம்பந்தரைக் கோத்தபாய சந்திக்கிறார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
கோரிக்கை – தமிழர் நிலங்கள் பறிக்கப்படும் நிலை – தமிழ்க் கைதிகள்
விடுதலை – வடக்கு-கிழக்கு மாநில வளர்ச்சித் திட்டம் ஆகிய நான்கு
சின்னஞ்சிறு சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும்’ என்று கோத்தபாய
சம்பந்தருக்கு உறுதி கொடுக்கிறார்.
உடனே, ‘பிரபாகரன் நினைத்ததைச் சம்பந்தனைக் கொண்டு நிறைவேற்றப்
பார்க்கிறார்கள்’ என்று சிங்கள இனவெறியர்களின் உறுமல் வெடித்ததைப்
பார்த்தோம்.
ஆட்சித் தலைவர் கோத்தபாய இச்சந்திப்பின் பின்பு கூறிய ஒரு கருத்தைப்
படித்த போது ஆற்றமுடியாத சினமே எழலாயிற்று.
‘தமிழர் சிக்கலுக்கான ‘தீர்வு’ பற்றிப் பின்பு மேசையில் பேசித் தக்க
முடிவெடுக்கப்படும்’ என்கிறார் அவர்.
எத்தனை மேசையில் இன்னும் எத்தனை தடவைகள் இவர்களோடு பேசித்
தொலைக்க வேண்டுமோ தெரியவில்லை.
மாந்தநேய அடிப்படையில் இந்தியா இக்காலகட்டத்தில் இலங்கைக்கு உதவி
வழங்குவதை எதிர்த்து எந்த மாற்றுக் கருத்தையும் நான் வெளியிடமாட்டேன்.
ஆனால் –
இலங்கையில் வாழும் சிங்களவர்கள் எல்லாக் காலங்களிலும் இந்தியாவின்
எதிரிகளாகவே இருக்கிறார்கள் என்பதை இந்தியா நினைவில் இருத்த
வேண்டும்.
இலங்கையோடு இந்தியா அண்மையில் செய்து கொண்ட உடன்படிக்கைகளில்
ஒன்று இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான ‘அதானி
குழுமத்திடம்’ ஒப்படைக்கப்பட்டது. உடனே – சிங்கள இனவெறியர்கள்
இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதை இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
‘உள்நோக்கத்தோடுதான் இந்தியா இந்த உதவிகளை இலங்கைக்குச் செய்கிறது’
என்று முன்னாள் அமைச்சரும், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இன்று
போர்க்கொடி தூக்கியுள்ளவருமான விமலவீரவன்ச அண்மையில் நேர்காணல்
ஒன்றில் உறுமியதையும் கேட்டோம். 3
இலங்கையில் உள்ள இந்திய எதிர்ப்பு – சீனசார்பு புத்த உயர் பீடங்கள்
இந்தியாவுக்கு எதிராகக் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள் என்னும்
செய்திகள் இலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்தக் கட்சி இனி
ஆட்சி அமைக்கும் – யார் இனி அரசுத் தலைவர் ஆவார்? எனத் தமிழீழத்தில் சில
அரை வேக்காட்டு எடுபிடிகள் தலையைக் குழப்பிக் கொண்டிருப்பதாகவும்
தெரிய வருகிறது. தலைமை யாராயினும் இலங்கையில் அது சிங்களத்
தலைமைதானே என்பதில் இவர்களுக்கு ஏன் இத்தனை தடுமாற்றம்? நாகபாம்பு
என்றோ – விரியன் பாம்பு என்றோ – கருவேலம் பாம்பு என்றோ பெயர்கள்
வேறுபடலாம் – ஆனால் பாம்புகள் பாம்புகளே என்பதை நாம் மறந்துவிடலாமா
என்ன? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப்
பயன்படுத்தி ‘இடைக்காலத் தீர்வு’ எதையும் ஈழத் தமிழர் தலையில்
கட்டியடிக்க இலங்கை அரசோ – அல்லது இலங்கை அரசுக்கு முண்டு
கொடுக்கும் இயலாத் தமிழ்த் தலைமைகளோ இக்காலகட்டத்தில் முடிவு
செய்தால் – அத்தகைய திட்டத்தை உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்
தமிழினம் முறியடிக்கும் என்பதை இடித்துரைக்க விரும்புகிறோம்.
‘இடைக்காலத் தீர்வு’ என்பது ஈழத் தமிழர் சிக்கலுக்கு இல்லை. ‘நிரந்தர தீர்வே’
தமிழீழத்தின் எதிர்ப்பார்ப்பு. ‘விடுதலை பெற்ற இறையாண்மையுள்ள தமிழீழம்’
ஒன்றே ஈழத் தமிழர்களின் விருப்பும் கேட்கையுமாகும்.
நன்றி.
கவிஞர் காசிஆனந்தன் தலைவர், ஈழத் தமிழர் நட்புறவு மையம்


